பகுதி 3 / 3
நினைப்பு கொஞ்சம், செயல் அதிகம்
சிவயோகி அவர்களின் “நினைத்ததை அடையும் ரகசியம்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளில் இது மூன்றாவதும் இறுதியானதும். மூல உரையைக் காண.
நினைப்பு கொஞ்சம், செயல் அதிகம்
தன்னார்வம் வந்துவிட்டால் எதையும் செய்துவிடலாம். அது வருவது உன் நினைப்பிலிருந்துதான். ஆகவே உன் நினைப்பு உனக்கு ஒரு உந்து சக்தியாக மாற வேண்டும். நினைப்பது கொஞ்சம், செயல்படுவது நிறைய. அப்போது சாதிப்பது கட்டாயம் நடக்கும். வெறுமனே நினைத்துக்கொண்டே இருந்தால் எதுவும் நடக்காது.
நினைத்தால் மட்டும் போதாது
ஒருவன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்: “இவளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.” அதையே நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் அவள் வந்துவிட மாட்டாள். “சார், நான் நினைத்துவிட்டேன். லா ஆஃப் அட்ராக்ஷன்!” இல்லை, இல்லை. நினைப்பது ஒரே ஒரு முறைதான். “இதைத்தான் அடைய வேண்டும்” என்று முடிவு செய்துவிட்டால், அடுத்து செயலில்தான் இறங்க வேண்டும். அதுதான் உண்மையான அட்ராக்ஷன். அதை விட்டுவிட்டு உட்கார்ந்திருந்தால் சிரிப்பாய்ச் சிரிப்பாய்.
நினைத்த உடனே யோசிக்க வேண்டும்: “இவளோடு வாழ வேண்டுமென்றால் நான் என்ன செய்தாக வேண்டும்? முதலில் என் படிப்பை முடிக்க வேண்டும். முடித்தால் வேலை கிடைக்கும். அப்போதுதான் இது சாத்தியம்.” அப்படி யோசித்துச் செயல்பட்டவன் அடைந்தேவிடுகிறான்.
நீ சினிமா ஹீரோ கிடையாது. “ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று சினிமாக் கற்பனையில் இருப்பவர்கள் நிறைய. நினைத்தது நடக்கவில்லை என்றால், அதற்குரிய தகுதியை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். படிக்கவில்லை என்றால் படிக்க வேண்டும்.
ஒரு “ஐ லவ் யூ” செய்த வேலை
எனக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. எங்களுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருடைய மகன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். ஏழு செமஸ்டர் வரை எல்லாப் பாடத்திலும் தோல்வி. அப்பாவுக்கு ஒரே சண்டை, தலையைப் பிய்த்துக்கொள்கிறார். எட்டாவது செமஸ்டரில் ஒரு பெண் அவனிடம் “ஐ லவ் யூ” சொல்லிவிட்டாள். அவ்வளவுதான்; எல்லா அரியர்களிலும் தேர்ச்சி!
அதுதான் நினைப்பு. நினைப்பு கொஞ்சமாக இருக்க வேண்டும்; அது உள்ளே தூண்டிவிடும் செயல் அதிகமாக இருக்க வேண்டும். பாரதிதாசன் அழகாகச் சொல்லி வைத்திருக்கிறார்:
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.
நினைப்பு ஒரு விதை
உன் நினைப்பு உத்வேகத்தைத் தருகின்ற ஒரு விதையாக இருக்க வேண்டும். விதை சிறியதுதான். “நான் நன்றாக இருக்க வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.” இவ்வளவுதான். நீ பாட்டுக்குக் கற்பனையெல்லாம் செய்துகொண்டிருப்பதற்குப் பெயர் நினைப்பு கிடையாது.
முதல் நினைப்பு: கடவுளைப் புரிந்துகொள்வது
நினைப்பு என்றால் என்ன? “நான் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறேன்; ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போக வேண்டும்.” அல்லது, “மனிதனாகப் பிறந்திருக்கிறேன்; கடவுளைப் புரிந்துகொண்டு போக வேண்டும்.” இப்படி நீ நினைக்க வேண்டும்.
இவ்வளவையும் செய்து வைத்திருப்பது எது என்று முதலில் தெரிந்தால்தானே அடுத்த அடி? அதில் உனக்கு ஆர்வமே இல்லை என்றால், நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
எந்தச் சாமியாரும் இப்படிப் பேசுவதில்லை. “மனிதனாகப் பிறந்துவிட்டாய், முதலில் கடவுளைத் தெரிந்துகொள்” என்று யாராவது பேசுகிறார்களா? வேறு என்னவோ பேசி, அதுதான் ஆன்மீகம் என்கிறார்கள்.
“என்னைப் படைத்தது எது, அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்” என்ற ஆர்வத்தை உனக்குள் தூண்டுகிறான் பார், அவன்தான் ஆன்மீக குரு. அவர் உன்னைக் கேட்க வைப்பார்: “நீ பிறந்து, வாழ்ந்து, செத்துப் போகிறாய். இதற்கு என்ன காரணம்? உன்னை உருவாக்கி மகிழ்ந்துகொண்டிருப்பது எது?” அந்த முதல் நினைப்பே உனக்கு இல்லை. மற்ற நினைப்பெல்லாம் அதற்குப் பிறகுதான்.
பேச்சே வியாபாரமான உலகம்
உண்மையைப் புரிந்தவன் அடுத்தவர்களை ஏமாற்றுவதில்லை. ஏமாற்றும் தந்திரங்களில் சில: பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், “நினைத்ததெல்லாம் நடக்கும்”, பாசிட்டிவிசம். இவையெல்லாம் வியாபாரம். இந்த உலகத்தில் பேச்சு மட்டுமே வியாபாரமாகிவிட்டது.
எம்எல்எம் எல்லாம் வெறும் பேச்சுதான். ஒன்றுக்கும் உதவாத பொருள். அதன் விலை ஐம்பது ரூபாய்தான்; ஆனால் நீ அதை நூறு ரூபாய்க்கு விற்க வேண்டும். “மூன்று பேரை ஏமாற்றிச் சம்பாதித்துக்கொள்ளலாம்.” நீ ஏமாற்றுவது உன் அண்ணன் தம்பியைத்தான், உன் நண்பனைத்தான். அதில் உனக்குக் கிடைப்பது கொஞ்சம்தான்; பெரும்பகுதி வேறு ஒருவனுக்குப் போய்விடுகிறது. அது உனக்குத் தெரியவே இல்லை.
கோட்டெல்லாம் போட்டுக்கொண்டு “முன்னேறுவது எப்படி” என்று பேசுபவன் யார்? உழைக்கவே மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டவன். அவன் சொல்லிக் கொடுப்பது: “எளிமையாக முன்னேறுவது எப்படி, ஒரே நாளில் பணக்காரன் ஆவது எப்படி.”
ஒரே நாளில் பணக்காரன் ஆக முடியாது
அவசரமாகப் பணக்காரன் ஆக வேண்டும் என்று நினைப்பதால்தான் நாம் இதில் சுலபமாக மாட்டிக்கொள்கிறோம். தம்பி, ஒரே நாளில் எதுவும் ஆகிவிட முடியாது. ஒவ்வொரு மனிதனும் நிறையப் போராடித்தான் வெற்றி பெறுகிறான். யாரோ ஒருவனுக்கு, எங்கோ ஒருவனுக்கு ஒரு லட்சமோ ஒரு கோடியோ லாட்டரி அடிக்கும்.
லாட்டரியை வாங்குகிற எல்லோரும் தனக்கு அடிக்கும் என்று நினைத்துத்தான் வாங்குகிறார்கள். ஒருவருக்குத்தான் அடிக்கும் என்று நாமே ஒப்புக்கொள்கிறோம். அடிக்காவிட்டால், “நமக்கு அதிர்ஷ்டம் இல்லை.” அதிர்ஷ்டம் இல்லை என்பதல்ல; அது ஒருவருக்குத்தான். அது தெரிந்த பிறகு, போடுகிற காசு வீண்தானே? உபரியாக இருக்கும் காசைப் போட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அந்த ரூபாய்தான் உன் வாழ்க்கை, உன் சம்பாத்தியம் என்றால்?
சீட்டாட்டத்திலும் லாட்டரியிலும் சம்பாதித்ததையெல்லாம், குடும்பத்தையும் மறந்து, “திடீரென்று பணக்காரன் ஆகிவிடலாம்” என்று விட்டவர்கள் எத்தனை பேர்! கடைசியில் போய்ச் சேருவது சாராயக் கடையில்தான். அதெல்லாம் வேலைக்கு ஆகாது, தம்பி.
நினைப்பை மாற்றிக்கொண்டே இருக்காதே
நினைப்பு அளவாக இருக்க வேண்டும்; மாறக் கூடாது. இன்று கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைப்பது; நாளை, “அது முடியாது, லட்சாதிபதி ஆகலாம்”; மறுநாள் திரும்ப, “கோடீஸ்வரன் ஆகிவிடலாம்”; நான்கு நாள் கழித்து, “இரண்டுமே சாத்தியம் இல்லை.” இப்படி மாற்றி மாற்றி நினைக்கக் கூடாது.
“கோடீஸ்வரனாகத்தான் ஆக வேண்டும்” என்று நினைத்தால், கடைசி வரை அதையே நினை. அடைவதற்கான வழியைத் தேடி, அந்த வழியில் செல்ல வேண்டும். நினைத்துக்கொண்டே இருந்தால் அப்படியே வந்துவிடும் என்பதெல்லாம் இல்லை. கேட்பதையெல்லாம் பிரபஞ்சம் கொடுத்துவிடாது, தம்பி.
மூன்றாவது காது
“மூன்றாவதாக ஒரு காது வேண்டும்” என்று நானும் ரொம்ப நாளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்; தர மாட்டேன் என்கிறது. “நிறைய பேர் பின்னால் போய்ப் புறம் பேசுகிறார்கள். அவர்களைக் கேட்பதற்குத் தனியாக ஒரு காது வை.” “அதையெல்லாம் நீ கேட்க வேண்டாம். அது உன் வேலை இல்லை.” உன்னைப் பற்றிப் பின்னால் ஆயிரம் பேசினாலும் ஆறாயிரம் பேசினாலும், அதனால் என்ன ஆகிவிட்டது?
எனக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் பிரபஞ்சம், அல்லது கடவுள், ஏற்கனவே கொடுத்துவிட்டது. கடவுள் என்னிடம் எதையும் மிச்சம் வைக்கவில்லை.
கடவுளிடம் என்ன கேட்கலாம்?
உங்களுக்குச் சொல்கிறேன்: தயவுசெய்து கடவுளிடம் போய் எதையும் கேட்காதீர்கள். கேட்டால் உங்களைவிட முட்டாள் யாரும் இல்லை. பல், கண், காது, மூக்கு என்று கொடுக்க வேண்டியதைச் சரியாகக் கொடுத்துவிட்டது; அதைச் சரியாகப் பயன்படுத்துவது உன் வேலை.
அதனிடம் போய், “கடவுளே, எனக்குக் கோடி ரூபாய் தா.” “அதையெல்லாம் தர முடியாதப்பா. ஆரோக்கியமான வாழ்க்கையைத் தருகிறேன், பசியைத் தருகிறேன், நல்ல தூக்கத்தைத் தருகிறேன். பணம் மட்டும் தர முடியாது.”
அப்படியானால் கடவுளிடம் என்ன கேட்கலாம்? நிம்மதி, ஆரோக்கியம், ஆனந்தமான புரிதல். “இறைவா, எனக்கு ஒரு நல்ல புரிதலைக் கொடு. நான் முட்டாள்தனமாகப் புரிந்துகொள்கிறேன், தவறு தவறாக நினைத்துக்கொள்கிறேன்.” இப்படிக் கேள், தருவான்.
அங்கே போய், “பணத்தைக் கொடு, நல்ல மனைவியைக் கொடு, காரைக் கொடு, பங்களாவைக் கொடு” என்று கேட்காதே. பங்களா கட்டுவதா கடவுளின் வேலை? கார் கம்பெனியா வைத்திருக்கிறார் கடவுள்? அதையெல்லாம் இந்த உலகத்தில் தேடு. முயற்சி செய், போராடு, வெற்றி பெறு. உன் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்.
சித்தாள் சிமெண்ட் கம்பெனி வைக்கலாம்
நீ சித்தாளாக இருந்துகொண்டு, “நான் அந்த வேலையைச் செய்ய மாட்டேன்” என்றால், கொத்தனாராக ஆகப் போவதே இல்லை. தொழிலையே மாற்றலாம். ஒரு சித்தாள் சிமெண்ட் கம்பெனி வைக்கும் அளவுக்குக்கூடப் போய்விடலாம். எப்படி? தொடர் முன்னேற்றம், தொடர் முயற்சி.
சிமெண்ட் எப்படிச் செய்கிறார்கள், ஏன் ஒட்டுகிறது என்பதில் ஆர்வம். இது யாருக்குத் தெரியும்? படித்தவனைவிட அனுபவசாலிக்குத் தெரிந்துவிடும். அவன் தரும் சிமெண்ட் தரமாக இருக்கும். தரமாக இருந்தால் யார்தான் வாங்காமல் போவார்கள்? நல்ல பொருள் விற்காது என்றெல்லாம் சும்மா சொல்லிக்கொள்ளாதே.
நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை
இன்றைக்கும் விளம்பரம் இல்லாத சில பொருள்கள் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பூவுக்கெல்லாம் யாராவது விளம்பரம் செய்கிறார்களா? கருவாட்டுக்கு யார் விளம்பரம் செய்கிறார்கள்? தரமான பொருள்களுக்கு விளம்பரமே செய்ய வேண்டியதில்லை.
நீயும் சரியாக இருந்தால், உன்னைத் தேடிக் கூப்பிடுவார்கள். எந்த வேலை செய்தாலும் கைதேர்ந்து செய். நல்ல கணக்காளனாக இரு, நல்ல குருவாக இரு, நல்ல கொத்தனாராக இரு, நல்ல சித்தாளாக இரு; எதுவாக வேண்டுமானாலும் இரு. நீ சிறப்பாகச் செய்தால் உன்னைக் கூப்பிடத்தான் செய்வார்கள். ஏனென்றால் நீ கைதேர்ந்த ஒரு வேலைக்காரன்.
நினை, பொறுப்பாக இரு, செயல்படு
அளவாக நினைத்த உடனே அதைச் சாதிப்பதற்கான முயற்சியில் நீ இறங்கிவிடுகிறாய். அப்போது பொறுப்பாக இருப்பாய்.
நினை. பொறுப்பாக இரு. செயல்படு. பிறகு நீ என்னவாகிறாய் என்று பார்.