பகுதி 1 / 4
சிக்கல் என்றால் என்ன?
சிவயோகி சிவக்குமார் அவர்களின் “நடைமுறைச் சிக்கல்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது முதலாவது. மூல உரையைக் காண.
நடைமுறைச் சிக்கல் என்பது சரியான புரிதலற்ற மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாவது. மனிதன் உண்மையைப் புரிந்துகொள்ளாமலேயே, பரிணாம வளர்ச்சி அடையாமலேயே இதுகாறும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். கடவுள் என்றால் என்ன, உண்மை என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விகளைப் புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிலர் மட்டுமே. மற்றபடி அனேகம் பேர் குருட்டாம்போக்காகவே வாழ்கிறார்கள்.
சிக்கல் எப்படி உருவாகிறது?
பல வழிகள், பல தீர்வுகள் என்று பல விதங்களில் நமக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ளாமல், எல்லா வழிகளிலும் எதையோ ஒன்றைக் குழப்பிக்கொண்டு மனிதன் தன்னைத் தானே சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். எது முடிவு, எது சரி என்ற தீர்வைக் கண்டுபிடிக்காமலேயே அவதிப்படுகிறான்.
முதலில், தான் யார் என்று அறிந்துகொள்ளும் தகுதியையே அவன் இழந்துவிடுகிறான். தன்மேல் சுமத்தப்படும் அடையாளங்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறான். அதனால் அவன் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது; சிக்கலிலிருந்து வெளிவராமலேயே மரணத்தை அடைகிறான். ஒரு மனிதன் சிக்கலற்றவனாக இருந்தால், மரணம் கூட வேறொரு வகையில் கொண்டாட்டமானதாக மாறிவிடுகிறது.
சமூக அமைப்பும், மதக் கோட்பாடுகளும், புரிதலற்ற மனிதர்களின் உளறல்களுமே பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. சிக்கலற்றவர்களாக இருக்க, சரியாகப் புரிந்துகொள்ள, நற்குருவை நாடி உண்மையை உணர்ந்து கொண்டாட்டமாக வாழுங்கள்.
கம்பன் பாட்டும் நடைமுறையும்
“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”
பள்ளியில் மனப்பாடப் பகுதியில் வந்த பாட்டு இது. நிறைய பேர் மனப்பாடம் செய்திருப்பீர்கள். அலகிலா விளையாட்டுடையவர் யார்? அவர் தலைவர். அவருக்குச் சரண்.
மனப்பாடம் செய்தோம், ஒப்பித்தோம். ஆனால் நடைமுறையில்தான் சிக்கல். ஒரு உண்மை இருக்கிறது; அந்த உண்மையை நான் நடைமுறைப்படுத்தும்போது எனக்குச் சிக்கல் ஆகிறது. நடைமுறை என்றால் என்ன என்று தெரிகிறது. சிக்கல் எப்போது ஏற்படுகிறது?
நான்கு வழிகள் சிக்கல் அல்ல
சிக்கல் என்றால் என்ன? நான்கைந்து தீர்வுகள் இருப்பது சிக்கலா? ஒரு ஊருக்கு நான்கைந்து சாலைகள் இருப்பது போல அது. நான்கைந்து பாதைகள் இருப்பது சிக்கல் ஆகாது. செங்கல்பட்டு வழியாகப் போகலாம், இன்னொரு பக்கமாகவும் போகலாம். எந்தப் பக்கம் சுற்றினாலும் போய்ச் சேர வேண்டிய இடம் அதுதான். ஊர் தெரியாமல் இருப்பதுதான் பிரச்சனை.
ரயிலில் ஏறி, பேருந்தில் இறங்கலாம். ஆட்டோவில் போகலாம், பைக்கில் போகலாம். நிலையத்துக்குப் போகப் பேருந்தோ ஆட்டோவோ காரோ, அங்கிருந்து விமானம். இதில் எந்தச் சிக்கலும் இல்லை.
அடி முடி தெரியவில்லை என்றால்தான் சிக்கல். ஒரு பாதை இன்னொரு பாதையோடு பின்னிக்கொண்டால்தான் சிக்கல். நூல், பஞ்சு, ஒயர் போன்றவற்றை நினைத்துப் பாருங்கள். காயில் சுற்றும்போது கேபிள் ஒன்றோடு ஒன்று சுற்றிக்கொண்டு சரியாக எடுக்க முடியவில்லை என்றால், அதுதான் சிக்கல்.
தலைமுடியும் சிக்கலும்
சிக்கல் என்றால் பெண்களுக்கு உடனே புரியும்: தலைமுடியில் சிக்கு. ஆண்கள் முடியை வெட்டிக்கொள்வதால் அவர்களுக்குச் சிக்குவதில்லை. நான் ஆணாக இருந்தாலும் எனக்குச் சிக்கும்; ஏனென்றால் முடியை நீளமாக வளர்த்திருக்கிறேன். பின்னாலிருந்து பார்த்துவிட்டு என்னைப் பெண் என்று நினைத்தவர்கள் உண்டு. வேகமாக முன்னால் வந்து பார்ப்பார்கள்; நான் சிரித்துக்கொள்வேன். பிரச்சனை யாரிடம்? முடி வளர்த்தால் பெண்தான் என்று முடிவு செய்தவரிடம்.
முடி ஒன்றோடு ஒன்று பின்னிக்கொள்ளும். நாளடைவில் கட்டிப்போய்ச் சடையாகிவிடும். உடனே “சிவன் வந்து ஆசீர்வதித்துவிட்டார்” என்று சொல்லிவிடுவார்கள். அவர் பெரிய சாமியார் ஆகிவிடுவார்.
நன்றாகத் தலைவாரிக் கொண்டை போட்டுத் தூங்கினாலும் தூக்கத்தில் தலையை அசைப்பதால் சிக்கிவிடும். சில பெண்கள் குளித்துவிட்டு முடியை நன்றாகப் பிரித்துக் காயவிட்டு, முதலில் விரலால் சிக்கு எடுப்பார்கள்; பிறகு சீப்பால். சிலர் அழகாகப் பின்னிவிடுவார்கள். சிலருக்குப் பின்னுவதே சிக்கலாகிவிடும். சிக்கும்போதெல்லாம் முடி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, கடைசியில் வழுக்கைத் தலை ஆகிவிடுவார்கள். இதுதான் நடைமுறைச் சிக்கல்.
இது முடிக்கு மட்டும் அல்ல, மனிதனுக்கும் பொருந்தும். கடவுள் அல்லது உண்மை, இந்த இயற்கை என்னை எப்படிப் படைத்திருக்கிறது, எதற்குப் படைத்திருக்கிறது என்று கேள்வி கேட்காத வரை சிக்கல்தான்.
“பெரிய இதுவாட்டம் பேசுகிறார்”
“நான் பெரிய ஆள்” என்ற நினைப்பில் வாழும் எவருக்கும் சிக்கல்தான். “நான் ஒன்றும் இல்லை” என்றால் ஒரு சிக்கலும் இல்லை.
“இவர் பெரிய இதுவாட்டம் பேசுகிறார்” என்று நாகரிகமாகச் சொல்வார்கள். அந்த “இது” எதைக் குறிக்கிறது? பெரும்பாலும் முடியைத்தான். முடி எங்காவது பேசுமா? அதற்கு வாய் இருக்கிறதா? சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லக்கூடத் தெரியவில்லை.
“நாயாட்டம் பேசாதே” என்று யாரும் சொல்வதில்லை; “நாய் மாதிரி நடந்துகொள்ளாதே” என்றுதான் சொல்வார்கள், ஏனென்றால் நாய் பேசாது என்று தெரியும். “பச்சைக்கிளி மாதிரி பேசுகிறார்” என்று சொல்வார்கள். அதன் பொருள், சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்கிறார் என்பது.
ஒருவன் அடிக்கடி ஒரு வீட்டுக்குப் போய் வருவான். அங்கே ஒரு பச்சைக்கிளி இருக்கும். அந்த வீட்டுப் பெண்ணின் பெயர் தேன்மொழி. போனதும், “தேன்மொழி, நல்லா இருக்கியா?” என்று கேட்பான். பிறகு அந்தக் கிளியைத் தன் வீட்டுக்குக் கொண்டுவந்து வைத்தான். வந்ததுமே கிளி, “தேன்மொழி, நல்லா இருக்கியா?” என்று கேட்டது. மனைவி கேட்டாள்: “யார் அந்தத் தேன்மொழி?” சொன்னதைச் சொல்லுமாம் கிளி.
கை சிக்கிக்கொண்டது, கால் சிக்கிக்கொண்டது என்று யாரும் சொல்வதில்லை. முடி அதிகமாகச் சிக்கினால் மொட்டை அடித்துவிடலாம்; இல்லையென்றால் சாமியாராகப் போய்விடலாம். தலைவாராமல் விட்டால் அழுக்கு சேர்ந்து சடை கட்டிக்கொள்ளும். பட்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்தால் போதும்; பாட்டுக் கூடப் பாட வேண்டாம். “இவரைத் தொட்டாலே நல்லது நடக்கும்” என்று கூட்டம் கூடிவிடும். பச்சை மிளகாயை அப்படியே மென்று தின்றால் ஒரு சாமியார், சாராயம் குடித்தால் ஒரு சாமியார், தொப்பி போட்டால் ஒரு சாமியார். இப்படிப் பலவிதமான சாமியார்கள் இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் போனால் காலாட்டு
“சிக்கல் சிங்காரவேலன்” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிக்கல் என்று ஒரு ஊரின் பெயரே இருக்கிறது. சிக்கல் முடியில் மட்டுமல்ல, ஊரிலேயே வந்துவிட்டது.
ஒருவன் சொன்னான்: “காஞ்சிபுரம் போனால் காலாட்டிக்கொண்டே சோறு சாப்பிடலாம்.” இன்னொருவன் அதைக் கேட்டுக் காஞ்சிபுரம் போய், ஒரு திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டிருந்தான். யாரும் சோறு போடவில்லை. சொன்னவன் சொன்னது நெசவைப் பற்றி. காஞ்சிபுரத்தில் தறி நெய்ய வேண்டுமானால் காலை ஆட்ட வேண்டும். இவனோ சும்மா காலை ஆட்டிக்கொண்டிருக்கிறான். காலாட்டினால் எப்படிச் சோறு வரும் என்று கேட்க வேண்டுமா இல்லையா? சொன்னவன் சம்பாதித்துவிட்டான். இவனுக்கு “நன்றாகப் புரிந்துவிட்டது”.
சிக்கல் தேர்ந்தெடுப்பதில்
அப்படியானால் சிக்கல் எங்கே? தேர்ந்தெடுப்பதில். தெளிவில்லாமல் தேர்ந்தெடுப்பதில், ஒருவன் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொள்ளாததில். பாதைகள் இருப்பது பிரச்சனை இல்லை. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் நான் சிக்கலில் இல்லை. எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல், இதில் கொஞ்ச நேரம், அதில் கொஞ்ச நேரம் என்று போய்ப் போய்த் திரும்பி வருபவன் எப்போது ஊர் போய்ச் சேருவான்?
அரக்கோணம் போக வேண்டும் என்று முடிவாகிவிட்டது. நடந்து போகலாம், ரயிலில் போகலாம், சைக்கிளில் போகலாம். நடந்து போனால் நான்கைந்து நாளில் போய்ச் சேரலாம். மாட்டு வண்டியில் போனாலும் தவறில்லை. ஆனால் ஒருவன் கொஞ்ச தூரம் நடக்கிறான்; திரும்பி வந்து ரயிலில் ஏறுகிறான்; நிலையத்தில் இறங்கி மறுபடி நடக்கிறான்; பிறகு வீட்டுக்குப் போய்ச் சைக்கிள் எடுத்து வருகிறான். இவன் எப்போது ஊர் சேருவான்?
எனக்குத் தெரிய வேண்டியது, சென்று சேரும் இடம். “காஞ்சிபுரத்தில் காலாட்டு” என்பதை நேரடியாகப் பொருள் எடுத்துக்கொண்டால் ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எனக்குப் புரியவில்லை; ஆனால் புரிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால்தான் சிக்கல்.
எனக்குப் புரிந்தால் எதிலுமே சிக்கல் இல்லை. எத்தனை பாதை இருந்தாலும் பிரச்சனை இல்லை. எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் எனக்குப் பிரச்சனையே இல்லை, ஏனென்றால் பிரச்சனையை எப்படிக் கையாள வேண்டும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது.