பகுதி 4 / 4

முடிவெடுத்து வாழ்

சிவயோகி சிவக்குமார் அவர்களின் “நடைமுறைச் சிக்கல்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது நான்காவது. மூல உரையைக் காண.

நீ ஒன்றும் இல்லை

மறுபடியும் சொல்கிறேன்: “உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா…” இவை எல்லாவற்றையும் செய்வது இந்த வெற்றிடம். உன்னை உருவாக்கி, உன்னைக் கொண்டாட வைத்து, மறுபடி திரும்ப வாங்கிக்கொள்கிறது.

நீ ஒன்றும் இல்லை. முடி இருந்தால்தானே சிக்கல்? முடியே இல்லாவிட்டால் மொட்டைத் தலை. மொட்டைத் தலையில் சிக்கல் வருமா?

“மொட்டைத் தலைக்குச் சிக்கல் வராது” என்றதும் போய் மொட்டை அடித்துக்கொண்டாயா? காஞ்சிபுரத்தில் காலாட்டியவன் கதைதான் இதுவும். அவர் எதற்குச் சொன்னார், நீ என்ன புரிந்துகொள்ள வேண்டும்? மொட்டை அடிக்கச் சொன்னது சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு. நீ ஒன்றும் இல்லாமல் இரு. ஏதாவது இருந்தால்தானே சிக்கல்?

எதுவுமே இல்லை என்றால், நான் கொண்டாடுவதற்கு மட்டுமே பிறந்திருக்கிறேன். கொண்டாட்டமாக இருப்பேன். எனக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்வேன்; அறிவை வளர்த்துக்கொள்வேன்; ஏதாவது ஒரு வேலை செய்து பெற்றுக்கொள்வேன். இவ்வளவுதான் வாழ்க்கை.

வேலை எதற்கு?

வேலைக்கு எதற்குப் போகிறாய்? கொண்டாட்டமாக இருப்பதற்கு. ஆனால் சிலர், “உலகத்திலேயே நான்தான், நான் போய்ச் செய்தால்தான் இது நடக்கும்” என்பது போல ஆகிவிடுகிறார்கள். சிலர் கொடுக்கும் கூலிக்கு மட்டும் வேலை செய்கிறார்கள்: “பத்து ரூபாய்தானே கொடுத்தான், நான் ஏன் அதிகம் செய்ய வேண்டும்?” சிலர் வேலையே கதி என்று மனைவி, பிள்ளை, குடும்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறார்கள். சிலர் சம்பாதித்து வெளிநாட்டுக்குப் போய்விடுகிறார்கள்; சிலர் சம்பாதிக்காமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

தேவையும் ஆசையும்

எனக்கு என்ன புரியாமல் போய்விட்டது? வந்தேன்; வசந்தமாக, கொண்டாட்டமாக இருந்துவிட்டுப் போக வேண்டும். என் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

தேவையே இல்லாமல் ஒன்றை விரும்புவது தவறு; அதன் பெயர் ஆசை. தேவை இருந்தும் அதை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றம். தேவையே இல்லாத இடத்தில் ஒரு தேவையை உருவாக்கிக்கொள்வதும் குற்றம். ஒரு செயல் தேவையின் பொருட்டுச் செய்யப்படுகிறதா, ஆசையின் பொருட்டுச் செய்யப்படுகிறதா என்று புரிந்துகொள்ள வேண்டும். எளிமையாக முடிந்துவிட்டது அல்லவா? சிக்கல் இல்லாமல் இருக்க, பொறுமையாக, நிதானமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றும் இல்லாததிலிருந்து வந்தேன்; ஒன்றும் இல்லாததற்குப் போகப் போகிறேன். அதுவரை நான் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஜாதி பேசுவதெல்லாம் சும்மா பேசுவதற்கும், கூட்டம் சேர்ப்பதற்கும், தலைவராக இருப்பதற்கும்தான். ஆண், பெண் என்ற இந்த வடிவமைப்பு எதற்கு என்று புரிய வேண்டும். கல்யாணம் எதற்கு என்று புரிந்தால் கல்யாணம் செய்துகொள்ளுங்கள். வாரிசு எதற்கு என்று தெரியும். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழலாம், கொண்டாட்டமாக இருக்கலாம். இப்படி எனக்குப் புரிய வேண்டும்.

பசியாறுவதற்குச் சாப்பிடுகிறோம். எது கிடைக்கிறதோ, எது பிடிக்கிறதோ சாப்பிடலாம்; தவறு கிடையாது. உங்களுக்குத் தயிர் பிடிக்கலாம், கறி பிடிக்கலாம், மீன் பிடிக்கலாம். இதில் சரி தவறே இல்லை. ஒருவன் மாட்டுக்கறி சாப்பிடுவான், ஒருவன் சாப்பிட மாட்டான். ஒருவன் பன்றிக்கறி சாப்பிடுவான், ஒருவன் சாப்பிட மாட்டான். ஏதாவது ஒரு கதை சொல்லி “அந்தக் கறியைச் சாப்பிடாதே” என்பார்கள். அந்தக் கதைகளெல்லாம் சும்மா சொல்வதுதான்.

குளிப்பது எதற்கு என்று தெரிந்தால் நன்றாகக் குளிப்பாய்: அழுக்கு போக வேண்டும். அந்தக் காலத்தில் ஆற்றில் குளித்து, மண்ணைப் பூசித் தேய்த்தார்கள். சாம்பலைப் போட்டுப் பாத்திரம் தேய்த்தோம். அழுக்கைப் போக்க அழுக்கைப் போட்டுத் தேய்க்கிறோம். சோப்பும் ஒரு அழுக்குதான்; கட்டியாக வைத்திருக்கும் அழுக்கு. ஷாம்பு, கொஞ்சம் எண்ணெய்ப் பசையோடு இருக்கும் அழுக்கு. வடிவத்தை மாற்றி, வாசனையைச் சேர்த்திருக்கிறார்கள். உன் வசதியைப் பொறுத்து எதை வேண்டுமானாலும் பயன்படுத்து. நான் எதையும் தவறு என்று சொல்லவில்லை; எது சரி என்றும் சொல்ல முடியாது. அது உன்னைப் பொறுத்தது.

கீழே உட்கார்ந்து சாப்பிடுவது நல்லதா, நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லதா? வசதியைப் பொறுத்தது. பயணத்தில் உட்கார இடமில்லை என்றால் கீழேதான் உட்கார வேண்டும். சாப்பிடுவது முக்கியமா, உட்காருவது முக்கியமா? நண்பரோடு ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றால் நாற்காலியில் உட்கார்ந்தால்தான் காலை நீட்டலாம். இடம், பொருள், ஏவல்: எங்கே உட்கார்கிறாய், எதற்கு, எப்படி?

முடிவெடுக்காததுதான் சிக்கல்

நடைமுறைச் சிக்கல் எங்கே? எனக்குப் புரியாததில்தான். வாழ்க்கை எதற்கு? கொண்டாட்டத்துக்கு. எது இன்பம் தருகிறதோ அதைச் செய்தால் அது எனக்குக் கொண்டாட்டம்.

“நான் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழப் போகிறேன்”, அல்லது “ஒருத்திக்கு ஒருவனாக வாழப் போகிறேன்” என்றால் தவறே இல்லை. அது அவரவர் விருப்பம். அப்படி ஒருவர் முடிவு செய்துவிட்டால் சிக்கல் இருக்கிறதா? முடிவெடுக்காததுதான் சிக்கல். என்னைப் பற்றிய ஒரு முடிவு எனக்கு வரவில்லை.

யார் யாரோ வரைந்து கொடுத்த பக்கமெல்லாம் போகிறேன். எந்தெந்தப் பக்கம் போய் வந்தேனோ அவ்வளவு சிக்கல் உள்ளே. ஒருவன் “இப்படி நில்” என்கிறான், இன்னொருவன் “இந்தப் பக்கம் திரும்பி நில்” என்கிறான். சில நடிகர் நடிகைகள் ஒளிப்பதிவாளரிடமே சொல்வார்கள்: “இந்தப் பக்கம் எடுங்கள், அந்தப் பக்கம் எடுக்காதீர்கள், கேமராவை மேலே வையுங்கள், கீழே வையுங்கள்.” ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம். நீ எப்படி இருக்க வேண்டும் என்று யாரைக் கேட்க வேண்டும்?

நான் எப்படி வாழ வேண்டும் என்று என்னையே கேட்டு ஒரு முடிவு எடுத்துவிட்டால் சிக்கல் ஏற்படுமா? ஏற்படவே ஏற்படாது. முடிவே எடுக்காமல், போன இடத்திலெல்லாம் ஒவ்வொருவர் காட்டும் வழியில் கொஞ்ச நேரம் ஓடினால் எவ்வளவு சிக்கிக்கொள்ளும்!

யார் வேண்டுமானாலும் வரட்டும், போகட்டும் என்று இருக்கலாம்; தவறு கிடையாது. அல்லது கதவு இருக்கும், பூட்டு இருக்கும், தட்டிவிட்டுத்தான் வர வேண்டும், மரியாதை முக்கியம் என்று இருக்கலாம். அதுவும் உன் இஷ்டம். தெளிவாக முடிவெடுக்க வேண்டியது யார்? நீ. முடிவெடுக்காமல் இருப்பதுதான் உன் பிரச்சனை.

நான் நீரில் நீந்தும் ஒரு மீன். வெளியிலிருந்து யாராவது தூண்டிலில் இரை கோத்துப் போட்டால் நான் சாப்பிட மாட்டேன்; எவ்வளவு பசித்தாலும் உள்ளே இருக்கும் சின்ன மீனைத்தான் சாப்பிடுவேன் என்று முடிவெடுத்திருந்தால் மாட்டுவேனா? முடிவெடுக்காவிட்டால், யாராவது தூண்டில் போட்டதும் போய் மாட்டிக்கொள்வேன்.

பணம் உன் கைக்கு எப்படி வருகிறது? முடிவெடுத்து வந்தால் அது திருட்டு இல்லை. எப்படிச் சம்பாதிக்க வேண்டும் என்று தெரியாவிட்டால் சிக்கலில் மாட்டுகிறாய்: கடன் வாங்குகிறாய், கடன் கொடுக்கிறாய், கடன் பிரச்சனை ஆகிறது, அல்லது யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறாய். என்ன பிரச்சனை? முடிவெடுக்கவில்லை.

முடிவெடுக்காததால்தான் நீ திருடன் ஆனாய். முடிவெடுக்காததால்தான் ஏழை ஆனாய். முடிவெடுக்காததால்தான் நிம்மதி இல்லாமல் போனாய். முடிவெடுக்காததால்தான் எல்லாப் பிரச்சனையும். முடிவெடுத்துவிட்டால், “நான் இப்படி வாழ்வேன்” என்பது; அதுதான் நேர்மை. நான் ஒரு நான்கு பேருக்கு உதவியாக இருப்பேன்; நானும் உதவி பெறுவேன். என் தேவை எதுவோ அதில் நான் சரியாக இருப்பேன். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக்கொள்வேன். நன்றாக இருப்பேன்.

“வந்தது கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் என்பதும் ஒரு வரைமுறைதான். “என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், நான் சந்தோஷமாக இருப்பேன்” என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் “எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், ஆனால் எனக்குப் பிரச்சனையும் வரக் கூடாது” என்பது சாத்தியமா? இல்லை. பத்துப் பாதைகள் இருக்கட்டும். ஒரு நாள் ரயிலில், ஒரு நாள் சைக்கிளில், ஒரு நாள் நடந்து போ. ஊர் தெரிந்துவிட்டால் எல்லா வழியும் உனக்குத்தான்.

நீ உனக்காக வாழ்ந்து பார்

இங்கே இருக்கும் ஒட்டுமொத்த உலகத்தையும் கடவுள் உனக்குத்தான் கொடுத்திருக்கிறார். எதற்காக? நீ எப்போதாவது சந்தோஷமாக இருப்பாயா? துக்கம் இல்லாமல் இருப்பாயா? கொண்டாட்டமாக இருப்பாயா? நன்றி சொல்வாயா? உன் வாழ்க்கை நன்றியோடு இருப்பதே இல்லை. ஏன்? சும்மா நடிக்கிறாய். யாரோ சொல்கிறார்கள் என்று பொட்டு வைக்கிறாய், யாரோ சொல்கிறார்கள் என்று பூ வைக்கிறாய். நீயாக வைத்தாயா? “என் கணவனை மயக்குவதற்காகப் பூ வைத்துக்கொள்கிறேன்” என்று எப்போதாவது வைத்திருக்கிறாயா? “பூ வைத்தால் அழகாக இருக்கிறாய்” என்று உன் கணவன் சொன்னானா?

நீ யாரைக் கொண்டாடுவதில்லை? உன்னையோ, உன்னை நேசிப்பவர்களையோ. உன்னை நீ கொண்டாடினால்தான் உன்னை நேசிப்பவர்கள் யார் என்று உனக்குத் தெரியும். உன்னை நீ மதித்தால்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பது உனக்குத் தெரியும். நடைமுறையில் சிக்கல் உன்னிடம்தான். முடிவெடுத்துவிட்டு எப்படியும் வாழ். “எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்” என்பதும் ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன்.

சரணடைய வேண்டியது கடவுளுக்கு மட்டும்தான். உலகம் யாவையும் ஆக்கி, நிலைபெறுத்தி, நீக்குவது வெற்றிடமாக இருக்கிறது. அது எல்லோருக்கும் சம பங்கு கொடுக்கிறது; எவ்வளவு வேண்டுமானாலும் அனுபவித்துக்கொள்ளலாம். கடவுள் ஒரு பொருளாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? யாராவது ஒருவர் அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டால் நமக்குக் கிடைக்காது.

கடவுள் எல்லை வகுக்காமல் இருக்கிறான். யாருக்காக இருக்கிறான்? உனக்காக. ஆனால் நீ யாருக்காக இருக்கிறாய்? இந்த ஜென்மத்தை உனக்காக வாழ்ந்து பார். நீ யாரிடம் அன்பாக இருந்தாலும் அது உனக்காக இருக்கட்டும். யாருக்கு நன்றி சொன்னாலும் அது உனக்காக இருக்கட்டும். யாருக்குச் சோறு போட்டாலும், யாருக்கு உதவி செய்தாலும், அது யாருக்காகச் செய்தாய்? உனக்காகச் செய்தாய்.

நான் அப்படித்தான். “யாருக்கோ உதவி செய்கிறார்” என்று சொல்வார்கள். ஆனால் உதவி செய்யும்போது நான் சந்தோஷப்படுகிறேன். “இந்தக் குழந்தை அழகாக இருக்கிறது” என்று சொல்வதில் எனக்குத் தெம்பு. “நம்மைப் போய் அழகு என்கிறாரே” என்று அவர்கள் வெட்கப்படலாம். அது அவர்கள் பிரச்சனை.

ஒரு கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால், “நீ கேட்டதே சரியில்லை” என்கிறார்கள். “எனக்குத் தெரியாது” என்பதை ஒப்புக்கொள். உன்னை நீ மதித்தால், உனக்குத் தெரியாததையும் மதிப்பாய். “தெரியாது” என்று சொல்வதில் என்ன கஷ்டம்? போலியாக மதிக்கும்போதுதான் மறைக்கிறோம். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்த ஆள் இந்த உலகத்தில் உண்டா? “அதர்வண வேதத்தில் எழுபத்தெட்டாவது ஸ்லோகத்தைச் சொல்” என்றால் நான் எப்படிச் சொல்வேன்? எனக்கு இந்தியே தெரியாது; சமஸ்கிருதம் எங்கிருந்து தெரியும்? பக்கத்து வீட்டுக்காரர் பேசும் ஆங்கிலமே எனக்குப் புரியவில்லை.

நான் யார் என்று எனக்குப் புரிய வேண்டும். நான் சரணடைய வேண்டியது இறைவனுக்கு. அவன் முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறான். நான் எப்படி வேண்டுமானாலும் வாழும் அதிகாரத்தை எனக்குக் கொடுத்தது கடவுள். கவனமாக இருங்கள்; முடிவெடுத்துவிட்டால் சிக்கல் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ முடியும்.

ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் ஏதோ ஆட்டம் நடக்கிறது; “அது நன்றாக இருக்கிறது” என்று இறங்கிவிட்டால் ஊர் போய்ச் சேருவேனா? ஊருக்குப் போவதற்குத்தான் ஆட்டோவில் ஏறினேன். சிக்கல் எங்கே ஏற்பட்டது? நடுவழியில் அதைப் பார்த்து, இதைப் பார்த்து மயங்கியது யார்? நான் இப்போது எதற்காகப் போய்க்கொண்டிருக்கிறேன்?

நன்றாக இருங்கள். சிறப்பாக இருங்கள். கொண்டாட்டமாக இருங்கள். உங்களை மதிப்பு மிகுந்தவராக மாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. நான் ஒரு வாய்ப்பு; என்னைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.