பகுதி 3 / 4

குளிப்பது எதற்கு?

சிவயோகி சிவக்குமார் அவர்களின் “நடைமுறைச் சிக்கல்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது மூன்றாவது. மூல உரையைக் காண.

பயிற்சியும் புரிதலும்

நடைமுறைச் சிக்கல் என்று சொல்லும்போது, எனக்குத் தெளிந்த அறிவு இல்லை என்பதுதான் பொருள். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

நான் ஒருவருக்கு ஒரு பயிற்சி தருகிறேன். அவர் வாங்கிக்கொண்டு போய் ஒரு வாரம் செய்கிறார். நெற்றியெல்லாம் துடிக்கிறது; உண்மையிலேயே துடிக்கிறது. “அதிசயமாக இருக்கிறது” என்கிறார். துடித்ததும் மிகவும் சந்தோஷப்பட்டு, பயிற்சியை விட்டுவிட்டு, இன்னொரு காணொளியைப் பார்க்கப் போய்விடுகிறார்.

சில பயிற்சிகளை ஒரு முறை செய்தால் போதும். காது குத்துவது போல. ஒரு முறை குத்திக் கம்மல் போட்டுவிட்டோம்; திரும்பத் திரும்பக் குத்திக்கொண்டிருப்போமா? ஓட்டை போட்டால் அது அடைக்காமல் இருக்கிறது. அடைப்பதற்கு ஐந்தாறு வருடம் ஆகும்.

அதே மனிதர் ஆறு மாதம் கழித்து எனக்கு ஒரு செய்தி அனுப்புகிறார்: “நீங்கள் ஓய்வாக இருக்கிறீர்களா? இரண்டாவது பயிற்சி எதற்கு? அதை ஏன் செய்ய வேண்டும்?” நான் கற்றுக்கொடுக்கும்போது என்ன சொல்லிக்கொடுத்தேன்? எனக்கே சந்தேகம் வந்துவிடுகிறது: நாம் சரியாகச் சொல்லித் தரவில்லையோ? புரியவில்லை என்றால் நேரடியாக வந்து கேள் என்றுதான் சொல்லி வைத்திருப்பேன்.

இன்னொருவர் சொல்வார்: “கடவுள் சூனியம், வெற்றிடம் என்று சொல்லிவிட்டார்தானே. அப்புறம் பயிற்சி எதற்கு? மூன்றாவது கண் எதற்கு? எப்படியிருந்தாலும் இரண்டு கண்ணால்தானே அந்தச் சூனியத்தைப் பார்க்கப் போகிறோம்.” வயிற்றுக்குள் போனால் எல்லாம் ஒன்றாகத்தானே ஆகப் போகிறது என்று சாம்பார், சட்னி, இட்லி, பூரி, பொங்கல் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் குடிப்போமா?

அடிப்படைக் கேள்வி: குளிப்பது எதற்கு?

பயிற்சி எதற்கு, ஒவ்வொரு விஷயமும் எனக்கு எதற்கு, நான் எதற்குப் பிறந்தேன் என்ற முதல் அடிப்படைக் கேள்வியை நீங்கள் கேட்காத வரை, நடைமுறைச் சிக்கலிலிருந்து வெளியே வர முடியாது.

நான் ஏன் குளிக்கிறேன்? எதற்காகக் குளிக்க வேண்டும்? குளிப்பது எதற்கு என்று புரிந்துவிட்டால், விளம்பரங்களில் வரும் சோப்பு, ஷாம்பு எல்லாவற்றுக்கும் வேலை குறைந்துவிடும். இப்போதோ அந்த ஷாம்பு போட்டுக்கொள்வதற்காகக் குளிக்க வேண்டியிருக்கிறது, அந்த பாடி வாஷ் போட்டுக்கொள்வதற்காக. “எவ்வளவு நாளாக சோப்பு போடுகிறீர்கள்? அதெல்லாம் வேண்டாம், பாடி வாஷ்தான் சரி” என்கிறார்கள்.

என் மகன் வந்து, “அப்படி இல்லை, பஞ்சு வைத்துத் தேய்க்க வேண்டும்” என்றான். பஞ்சு வைத்துத் தேய்த்தால் தோல் பிய்ந்து கறுப்புப் புள்ளி வரும் என்றும் சொல்கிறார்கள். இப்போது ஷாம்பு போடலாமா? எனக்கு ஒரே பதற்றமாகிவிட்டது.

“பல் துலக்கும் பிரஷை மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றுங்கள்; அதில் கிருமிகள் உட்கார்ந்துவிடும்” என்றான் ஒருவன். என் மகன் கேட்டான்: “இரண்டாவது நாள் மட்டும் கிருமி வராதா? தினமும் ஒரு புது பிரஷ் என்றால்தான் உனக்கு வசதியா?” ஹோட்டல்களில் தினமும் பயன்படுத்துவது போலத்தானே தருகிறார்கள். ஒரு ஐரோப்பிய நாட்டில் தங்கிய ஹோட்டலில், பேஸ்ட் பிரஷ்ஷுக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது; எடுத்துத் துலக்கினால் ஒரே முறையில் தீர்ந்துவிடும்.

இப்படி அறிவு மேல் அறிவு சேர்ந்து, இந்த உலகத்தில் சொல்லப்பட்ட அறிவுரைகள் எல்லாவற்றையும் கேட்டால், “இந்த வாழ்க்கை எதற்கு?” என்று ஆகிவிடும். நடிகர் தாமு நன்றாகச் சொல்லியிருந்தார்: அறிவியல் முன்னேறியது, விஞ்ஞானிகள் முன்னேறினார்கள், வாழ்க்கைதான் முன்னேறவில்லை. பலர் பல விஷயங்களைச் சொன்னால் குழம்பிவிடுவோம். அப்படிக் குழம்பிப்போன ஒருவன் “கடவுளே இல்லை” என்கிறான். இன்னொருவன், “உங்களுக்கெல்லாம் இருப்பது சாதாரண அறிவு; எனக்கு இருப்பது தனி அறிவு” என்கிறான். அதுவும் நடைமுறைச் சிக்கல்தான்.

சிக்கலை எடுக்க நிதானம் வேண்டும்

நான் ஏன் சிக்கலான வாழ்க்கை வாழ்கிறேன்? எந்த மனிதன் துக்கமாகிறானோ, அவனுக்குள் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

முடி சிக்கிக்கொண்டால் பார்த்தாலே தெரிகிறது; விரல் போகவில்லை, சீப்பு போகவில்லை. நூல் சிக்கிக்கொண்டால் புரிகிறது. நூலிலோ முடியிலோ சிக்கல் எடுக்க என்ன வேண்டும்? நிதானம் வேண்டும். எனக்குள் இருக்கும் சிக்கலை எடுக்கவும் அதுதான் வேண்டும்.

நிதானம் இல்லாவிட்டால்தான் சிக்கல் பெரிதாகிறது. பிடித்துப் பிடித்து இழுத்தால் இறுகிக்கொண்டே போகும். சிலர் நூலை வெட்டி வெட்டி முடிச்சுப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஊசியில் கோத்துத் தைக்கும்போது அந்த முடிச்சு மாட்டிக்கொள்ளும்; தைக்க முடியாது.

முடி உதிர்கிறது என்று தினமும் சீப்பில் வரும் முடியை எண்ணிக்கொண்டிருப்பார்கள். யாரோ “எண்ணெய் தேய்த்துவிட்டுத் தலைக்குக் குளி” என்று சொன்னதால், குளிக்கும்போதெல்லாம் எண்ணெய் தேய்த்துவிட்டுக் குளிக்கிறார்கள். அதனால்தான் கேட்கிறேன்: சோப்பு தவறா, ஷாம்பு தவறா என்பதல்ல; குளிப்பது எதற்கு?

சிக்கலைத் தீர்க்கப் பொறுமை அல்லது நிதானம் வேண்டும். ஒரு நூல் எப்படிப் போய் எப்படி வந்தது, ஒரு ஒயர் எப்படிப் போய் மாட்டிக்கொண்டது என்று பார்க்க வேண்டும். நான் எந்தெந்தத் தவறான வழிகளில் நுழைந்து இதில் வந்து மாட்டிக்கொண்டேன் என்று பார்க்க வேண்டும்.

விலங்குகளுக்குச் சிக்கல் இல்லை

விலங்குகளுக்குச் சிக்கலே இல்லை. நாய் போகிற இடமெல்லாம் காலைத் தூக்கி அடையாளம் வைத்துவிட்டுப் போகும்; மோந்து பார்த்துக்கொண்டே போகும். நாய் முட்டாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அந்த வாசனையை வைத்தே அது சரியாக வழி கண்டுபிடித்து வெளியே வந்துவிடும். உன் வாசனை உனக்குத் தெரியுமா? எந்தப் பள்ளியிலும் சொல்லித் தரவில்லையா?

மனிதனுக்கு எதையாவது கற்றுக்கொடுத்தால், கற்றுக்கொண்டதை மட்டும்தான் செய்வான். அது ஏன் என்று அதற்கு மேல் யோசிக்க மாட்டான்.

“நீ பணக்காரன், கீழே உட்கார்ந்து சாப்பிடக் கூடாது” என்பார்கள். ஏன்? மேஜையில் உட்கார்ந்தாலும் கீழே உட்கார்ந்தாலும், கையில் எடுத்து வாயில்தான் வைக்க வேண்டும். வேறு வேலை கிடையாது. இதைச் சொன்னால் நம்மைத் திட்டுவார்கள்.

“நான் யார் தெரியுமா?” என்பான். ஏதோ ஒரு ஜாதியைச் சொல்லி, ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என்று தரம் பிரிப்பான். ஒரு கூட்டத்தைப் பற்றி ஏதாவது சொன்னால், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள்: “நாங்கள் இவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறோம், வாரம் தோறும் வந்திருக்கிறோம், எங்களைப் பற்றிப் பேசக்கூடாது.” ஏன் கேள்வி கேட்கக் கூடாது? சிக்கல்.

தாங்களே சிக்கலாக இருப்பவர்கள்

நிறைய பேர் மிகத் தெளிவாக வாழ்வார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஒரு சிக்கலும் இருக்காது. ஏனென்றால் அவர்களே சிக்கலாக இருப்பார்கள். கேட்டால், “என்ன பிரச்சனை?” என்று கேட்பார்கள்.

சிலர் சிக்கலோடு வாழ்வதே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். “சிக்கல் சிங்காரவேலன்” போல; சிக்கல் என்பது ஒரு ஊரின் பெயர் மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். இந்தச் சிக்கலை எடுக்கப் போனால் நாம்தான் மாட்டிக்கொள்வோம்.

ஜாதியில் சிக்கிக்கொள்கிறான். அவனைத் திருத்த முடியாது. ஜாதி வெறி ஏதோ ஒரு ஜாதிக்கு மட்டும் உரியது அல்ல; எந்த ஜாதியிலும் தன் ஜாதியைப் பற்றி வெறியோடு பெருமைப்படுபவன் இருக்கிறான். “நாங்கள் வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள்” என்பான். “நீ பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறாய்” என்று சொன்னால் ஒப்புக்கொள்வானா?

அவனுக்கு ஒரு வசதியான வட்டம் வேண்டும். ஊசியில் கோத்த நூலை முடிச்சுப் போட்டுக் கட்டித் தைக்கும் அளவுக்கு எடுத்துக்கொள்வது போல. முதலில் பாழாக்கிவிட்டானா இல்லையா? இப்படி முழுச் சிக்கலையும் முடிச்சுப் போட்டு வைத்திருப்பான். “இவ்வளவு வெட்டி முடிச்சுப் போட்டிருக்கிறீர்களே” என்று கேட்டால், “நாங்கள் நேர்த்தியாகத்தான் இருக்கிறோம்” என்பார்கள்.

“நாம் பெரிய சிக்கலில் இருக்கிறோம் போலிருக்கிறதே; நிம்மதியாக இல்லையே; என் பையன் சோகமாக இருக்கிறானே; நாம் சரியாக வாழவில்லையோ” என்று ஒருவர் நினைக்க வேண்டும் அல்லவா? சிக்கலானவன் ஒரு போதையில் இருப்பான்: “என்னைவிடப் பெரிய பக்திமான் இல்லவே இல்லை.” மொட்டை அடித்து, பட்டை போட்டு, உருத்திராட்சம் கட்டிக்கொண்டிருப்பான். அவனிடம் போய் எதையாவது சொல்ல முடியுமா?

பேய் ஓட்டுதலும் நம்பிக்கைகளும்

பரிசுத்த வேதாகமத்தைத் தலைமாட்டில் வைத்தால் பேய் போய்விடும் என்று நம்புபவர்கள் உண்டு. எந்த இந்துவாக இருந்தாலும், அதிகாலை ஐந்து மணிக்குக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மசூதி வாசலில் போய் நிற்பான், ஓதிக்கொள்வதற்கு. கடை கடையாக வந்து சாம்பிராணிப் புகை போடுபவர்கள் இருக்கிறார்கள்; புகை போட்டால் வியாபாரம் நன்றாக நடக்கும், வாடிக்கையாளர் வர வேண்டியதே இல்லை என்பது போல. நான் யாரையும் அவமதிக்கவில்லை.

இன்னொருவர் தினமும் சாவியால் கதவில் “டர்” என்று கீறிக்கொண்டே இருப்பார்; கதவில் கோடு விழுந்திருக்கும். உள்ளே இருக்கும் பில்லி சூனியம் ஓடிவிடுமாம். கதவைப் பூட்டிவிட்டு, பூட்டுக்குக் கற்பூரம் கொளுத்துவார்கள். இவர்கள் எல்லாம் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது, சிக்கலாக இருக்கிறார்கள்.

என் பேச்சைக் கேட்டால் உங்கள் மனம் குழம்பும்: “நேற்று வரை இப்படி நினைத்திருந்தேன், இவன் வேறு மாதிரிச் சொல்கிறானே. உண்மையிலேயே இவன் சாமியார்தானா?” சந்தேகமே பட வேண்டாம்; நான் சாமியார் இல்லை. நான் ஒரு தெளிந்த நீரோடை. இதுவரை டீத் தண்ணீர், காபித் தண்ணீர் நிறத்தில் ஓடும் ஆறுகளையே பார்த்திருக்கிறாய். இந்தத் தெளிந்த நீரோடையைப் பார்த்ததும் பயந்துவிடுவாய்: “இவ்வளவு தெளிவாக இருக்கிறதே! ஆறு என்றால் சேறு கலந்து வர வேண்டாமா?” “கடவுள் வெற்றிடமா?” என்று உள்ளுக்குள் பதறுவான்.

அவர்களை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. ஏன்? அவர்கள் புனித ஆத்மாக்கள். நிறைய புரிந்து வைத்திருக்கிறார்கள். கோட்டை கட்டி, விதவிதமாகப் பொம்மை வைத்து, சாமியைக் கூப்பிட்டு வைத்திருப்பார்கள். இதெல்லாம் சிக்கல் என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?