பகுதி 4 / 5

வெறுமையே கடவுள்

சிவயோகி சிவக்குமார் அவர்களின் “நீயும் நானும் ஈசனே” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளில் இது நான்காவது. மூல உரையைக் காண.

நான் பேச வந்தது “நீயும் நானும் கடவுள்” என்பதைத்தான். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்களும் நானும் கடவுள். நானும் கடவுள், நீயும் கடவுள். நான் கடவுள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கும் சொல்கிறேன்: நீயும் கடவுள்.

வெறுமை

கடவுள் என்றால் நீங்கள் நினைப்பது போல ஒரு மாயப் பொருளோ, ஒரு பொருளோ, ஒரு நெருப்போ, ஒரு தண்ணீரோ, ஒரு காற்றோ கிடையாது. இவை அத்தனையையும் கட்டுப்படுத்தக்கூடிய தகுதியோடு, தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் இருப்பது. அதை இப்படி என்று அடையாளப்படுத்த முடியாது. வெறுமை என்று சொல்லலாம். உணர்ந்தால்தான் உண்டு; இல்லையென்றால் கிடையாது, அது பொய்தான்.

“உனக்கும் எனக்கும் முன்னால் வெறுமை இருக்கிறது” என்றால் ஒப்புக்கொள்ளவே முடியாது. “அது எப்படி? ஒன்றும் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?” நீ பேசுகிறாய், நான் கேட்கிறேன். நம் இருவருக்குள்ளும் இருப்பது என்ன? நீ பேசுவதும் நான் கேட்பதும். நம் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு புரிதல் இருக்கிறது, ஏதோ ஒரு தேவை இருக்கிறது. அதுதான் நம் இருவருக்கும் உள்ளது.

வெறுமை இருக்கிறது என்பதை மனிதனால் ஏன் ஒப்புக்கொள்ள முடியவில்லை? காலம் காலமாகப் பொருள் மயக்கத்திலேயே இருக்கிறான். அன்பு என்றால் ஒரு சாக்லேட் கொடுக்க வேண்டும், ஒரு முத்தம் கொடுக்க வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும், பேச வேண்டும், ஏதோ ஒன்று செய்ய வேண்டும்; அதுதான் அன்பு என்று நினைக்கிறான். அது இல்லாவிட்டால் அன்பே இல்லை என்று நினைத்துக்கொள்கிறான். ஆனால் சிலர் நினைப்பாலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

ஆமை போடும் முட்டையை யாராவது எடுத்துப்போய்ப் பொரிக்க வைத்து அனுப்பலாம். அந்தக் குஞ்சு கடலுக்குப் போய்த் தாயிடம் சேர்ந்துவிடும். தாயும் அதை இனம் கண்டு சேர்த்துக்கொள்ளும். காடையும் அப்படித்தான். “இதுதான் என் முட்டை” என்று அதன் தாய்க்குத் தெரியும்; அது அதன் இயல்பிலேயே இருக்கிறது. அப்படி எல்லாச் சூட்சுமத்தையும் வெற்றிடம் வைத்திருக்கிறது. ஒப்புக்கொண்டால் ஒப்புக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் போங்கள். அது தவறு இல்லை.

ஒருவர் எழுந்து நின்று சொன்னார்: “இவர் ஒன்றுமே இல்லாததை உங்களுக்கு விற்கிறார், நீங்கள் ஏமாறுகிறீர்கள்.” நான் என்ன செய்ய முடியும்? அப்படி ஒன்று சொல்லலாம்தானே? அதை என்னால் நிரூபிக்க முடியாது. நான் பலசாலி என்றால் பத்து கிலோ தூக்கிக் காட்டலாம். ஆனால் “என் கண்ணால் வெறுமையைப் பார்க்கிறேன்” என்று சொல்லும்போது, “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்” என்றால் நான் என்ன செய்ய முடியும்?

“நீயும் நானும்” என்று வேறு யார் சொன்னார்கள்?

இந்தக் கூற்றை வேறு யாருமே சொல்லவில்லை: “நீயும் நானும்.” வேறு யாராவது இப்படிச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வேறு சிலர் துவைதம் என்கிறார்கள். அதை உடைப்பதற்காக விசிஷ்டாத்வைதம் என்றார்கள். முதலாவது சொல்வது: கடவுள் வேறு, நான் வேறு; நாம் இருவரும் ஒன்றாகவே முடியாது. கடவுள் ஒரு தனிச் சிறப்பான தன்மை; நீ அது ஆக முடியாது. “கடவுளாம்” என்பதெல்லாம் பொய்; கடவுள் வேறு, மனிதன் வேறு. அது பரமாத்மா, நீ ஜீவாத்மா. ஒருவேளை நீ மகாத்மா ஆகலாம்.

எல்லோரையும் மகாத்மா என்று சொல்ல மாட்டார்கள். “மகாத்மா சிவக்குமார் பேசினார்” என்று யாராவது சொல்கிறார்களா? சொல்லுங்களேன் பார்க்கலாம். நாளைக்குக் கூடக் கருத்துப் பகுதியில் வந்து எழுதுங்களேன்: “மகாத்மா சிவயோகி அவர்கள் பேசியிருந்தார்.” எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்று பார்க்கலாம்.

ஜீவாத்மா என்ன ஆகலாம்? மகாத்மா ஆகலாம். என்ன ஆக முடியாது? பரமாத்மா ஆக முடியாது. இப்படி இரண்டாகச் சொல்கிறார்கள். இல்லை. பரமாத்மாதான் இத்தனை ஜீவாத்மாக்களாக ஆகியிருக்கிறது. மரம், செடி, கொடியும் நானே. எல்லாம் யார்? நான்தான், கடவுள்தான். எல்லாமாக, சர்வ வியாபியாக, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது.

கடவுள் நமக்கு எங்கே தகுதி கொடுத்திருக்கிறான்? நமக்குச் சில பொருட்களைக் கொடுத்து, “அவற்றைக் கையாளக் கற்றுக்கொண்டால் நீயும் வெறுமையை அனுபவிக்கலாம்” என்கிறான். பொருட்களையும் கொடுத்து, வெறுமையையும் அனுபவித்தால் நீ என்ன செய்யலாம்? நீயும் அதை அடையலாம். அப்படிப்பட்ட கருவிகளைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறான், படைத்திருக்கிறான்.

நேரடியாகச் சொன்னவர்

“தன்னைத் தான் அர்ச்சிக்கத் தானிருந்தானே” என்று ஒருவர் சொன்னார். அதில் “நான் ஈசன்” என்கிறார். நீ அதைக் கண்டுபிடித்தால் நீயும் ஈசன் என்பதை வேறு வடிவத்தில் சொல்கிறார். இருவர் சொன்னதும் ஒன்றுதான். ஆனால் அவர் நேரடியாகச் சொல்லவில்லை. மூவாயிரம் பாட்டு எழுதி நிறைய தந்திரங்களைச் சொல்கிறார்.

நேரடியாக யார் சொல்கிறார்? என் குருதான் நேரடியாகச் சொல்கிறார்: நீயும் நானும் யார்? சிவன்தான்.

என் குரு மிகவும் எளிமை. “மூலமாம் குளத்திலிருந்து” அந்த “நாலு கட்டை” அறுத்துவிடு. “ஓடி ஓடி உட்கலந்த சோதியை” தெரிந்துகொள். ரொம்ப எளிமையாக இருக்கிறது.

என் எளிமையைப் பார்த்துக் கூட நிறைய பேர் விட்டுவிடுவார்கள்: “ரொம்ப சிம்பிளாகத்தானே இருக்கிறது. இதற்கா இவ்வளவு காசு?” என்ன செய்வது? அதுதான் உண்மை. அப்படித்தான் இருக்கிறது. உண்மை எப்போதுமே எளிமையாகத்தான் இருக்கிறது.

எல்லோரும் கடவுள் என்றால்

நான் கடவுள், நீ கடவுள், நாம் எல்லோருமே கடவுள். எல்லோரும் கடவுள் என்றால் எப்படி வாழலாம்? யோசித்துப் பாருங்கள். எல்லோருக்கும் புரிந்துவிட்டது என்றால், எப்படிக் கொடுப்போம், எப்படி வாங்குவோம்? வீட்டைப் பூட்ட மாட்டோம். கதவை மூடுவோம்; அது குளிரூட்டிக்காக இருக்கும், திருட்டுக்காக இருக்காது.

எதைத் திருடிக்கொண்டு போவான்? திருடிக்கொண்டு போய் என்ன செய்வான்? சாப்பிடுவதைச் சாப்பிடுவான். சாப்பிட முடியாததை வீணாகக் கொட்டுவான். மனிதனே பணத்தைக் கண்டுபிடித்தான். அதைக் கண்டுபிடித்து எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அதை வைத்து “நான் பணக்காரன்” என்கிறான். எவ்வளவு பணம் இருந்தாலும் புரிதலை யாரும் தர முடியாது. நீ கடவுள் அளவுக்கு விசேஷமானவன் என்று புரிந்துவிட்டால், மற்றதெல்லாம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அங்கிருந்துதான் சொல்கிறேன்: இந்த வாழ்க்கை ஒரு அற்ப விளையாட்டு. இப்படி வாழ்வதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நான் நிறைய வாழ்ந்திருப்பேன்; உங்களுக்கு அது நினைவில் இல்லாமல் இருக்கிறது. நீங்கள் அந்தப் பயிற்சிகளை எல்லாம் செய்தால் உங்களுக்கும் அது வரலாம். இல்லையென்றால், இப்போதே கூட வாழ்ந்துகொள்ளலாம். ஒன்றும் தவறு இல்லை.

“நான் இந்த உலகத்தைச் சரியாக அனுபவிக்கவில்லை, நிறைய சாப்பிடவில்லை, நன்றாக வாழவில்லை” என்றால், இப்போதே கூட வாழ்ந்துகொள்ளலாம். தவறு இல்லை. ஆனால் கடவுளை மறுக்கலாமா? போலியாக ஒரு சிலை வைத்து, பொம்மையாகக் கும்பிடலாமா? மதத்துக்குள் சிக்கிக்கொள்ளலாமா? நீங்கள் ஒரு விசேஷம் இல்லையா?

உங்களை நீங்களே ஒப்புக்கொள்வதில்லை

நீங்கள் கடவுள் ஆகும் அளவுக்கு விசேஷமான அறிவு எங்கே இருக்கிறது? மனிதனிடம்தான். ஒரு நாயிடம் போய், “உனக்குள் உயிராக இருப்பது கடவுள்” என்று சொன்னால் ஒப்புக்கொள்ளுமா? அது நாய்.

ஆனால் மனிதன் சொல்கிறான்: “இவன் பொய் சொல்வதற்காகச் சொல்கிறான், நம்மைப் போய்க் கடவுள் என்று. நானே ஒரு மோசமான ஆள்; என்னிடம் எப்படிக் கடவுள் இருக்கும்?” அப்படியானால் யார் யாரை ஒப்புக்கொள்ளவில்லை? நீங்கள் அடிப்படையிலேயே உங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்.

நீங்கள் விசேஷம். உங்களை உங்களுக்கு மீட்டுக் கொடுப்பதுதான் என் வேலை. நீங்கள் நன்றாக இருங்கள். உங்களைக் கொண்டாடுங்கள், உங்களை மதியுங்கள், நன்றாகச் சாப்பிடுங்கள், கொண்டாட்டமாக இருங்கள். நீங்கள் ஒரு கடவுள் இல்லையா என்று கேட்கிறேன். நான் சொல்வது என் குரு சொன்னதுதான்.