பகுதி 3 / 5

பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு

சிவயோகி சிவக்குமார் அவர்களின் “நீயும் நானும் ஈசனே” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஐந்து கட்டுரைகளில் இது மூன்றாவது. மூல உரையைக் காண.

குருவும் கடவுளும்

எனக்கு என் குரு வேறு, கடவுள் வேறு கிடையாது. உங்களுக்கு நான் ஒரு சராசரி மனிதன்தான். நீங்கள் என்னைத் தெய்வமாக்கலாம்; நான் கடவுள் இல்லை. உங்கள் நினைப்பில் நான் ஒரு வடிவமாக இருக்கும் வரைதான் உங்களுக்கு நான் கடவுள். இல்லையென்றால் உங்களுக்கு நான் கடவுள் கிடையாது. நீங்கள் நேரில் வந்து செய்வதெல்லாம் கடவுளுக்குச் செய்வது அல்ல; தெய்வத்துக்குச் செய்வது. தெய்வீகத்தின் பொருட்டு நீங்கள் மதித்துக்கொள்ளலாம். ஆனால் அது நான் கிடையாது. “நான்” என்ற ஆணவம் இருக்கிறதே, அது நான் கிடையாது.

கடவுள் யாராக இருந்தாலும் சரி. “நீயும் நானும் ஈசனே” என்றாரல்லவா? நீயும் நானும் ஈசன் எப்போது? நான் என்னை விட்டுவிட்டேன், நீ உன்னை விட்டுவிட்டாய் என்றால், நாம் இருவரும் யார்? ஈசன்தான். இங்கே இருப்பது எல்லாமே சுத்தவெளிதான். “நான்” என்ற ஒன்று ஒரு தோற்றப் பொலிவு; அது ஒரு மாயை.

மாயை என்றால் இல்லை என்று அல்ல

இந்த உடம்பு மாயை என்றால், இல்லை என்று அர்த்தம் கிடையாது. இது மண்ணாலும் நினைப்பாலும் ஆனது. வடிவம் கொண்டிருக்கும் மண்ணும், நினைத்துக்கொண்டிருக்கும் மனமும் மாயையால் ஆனவை. மாயை என்றால் நீங்கள் இல்லை என்று அர்த்தம் கிடையாது.

“மண்ணும் மாயை” என்று ஒரு காணொளியில் பேசி வைத்திருக்கிறேன். அதையும் பார்த்தால்தான் நான் பேசுவது ஒன்றாகப் புரியும். இல்லையென்றால் ஏதோ உளறுகிறேன் என்று கூடத் தோன்றலாம்; அது உங்கள் பிரச்சனை. புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அதைப் போய்ப் பாருங்கள். “மாயை” என்று என்ன பேசுகிறார் என்று புரிந்துவிடும்.

மதம் இதை ஒப்புக்கொள்ளுமா?

“நீயும் நானும் ஈசன்” என்பதை மதம் ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்ளாது. இதில் சடங்குகளுக்கு எல்லாம் வேலை இல்லை. கோயிலுக்குப் போக வேண்டியதோ, சர்ச்சுக்குப் போக வேண்டியதோ, மசூதிக்குப் போக வேண்டியதோ இல்லவே இல்லை. அங்கே போய் நீங்கள் வழிபட வேண்டிய அவசியமே இல்லை.

நீங்கள் எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? பழக்கப்படுத்தியதால் போகிறீர்கள். எப்படிப் பழக்கப்படுத்தினார்கள்? உங்களுக்குப் பிரச்சனை வந்தபோது.

பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு

ஒரு விலங்கை எப்படிப் பழக்குகிறார்கள்? பட்டினி போடுவார்கள். ஒருவேளை உணவு போட வேண்டுமென்றால், “இதைச் செய்தால்தான் போடுவேன்” என்று பழக்குவார்கள். “இந்த நெருப்பைத் தாண்டினால்தான் உனக்குக் கறித்துண்டு” என்று சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் கறித்துண்டுக்காக அது வந்து செய்யும்.

மிருகக்காட்சிசாலையில் பயிற்சியாளர் ஒரு டப்பா வைத்திருப்பார். குச்சியில் கறியைக் குத்தி எடுப்பார். அதைச் சிங்கம் பார்க்கும்: “சரி, நமக்கான துண்டு தயாராகிவிட்டது.” அவர் வளையத்தைக் காட்டுவார். அது தாவி வந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விடும்.

டால்பின் வரும். சின்னச் சின்ன மீன்களை வைத்துக்கொண்டு நிற்பார்கள், தூக்கிப் போடுவார்கள். ஒரு நடனம் ஆடினால் தருவார்கள் என்று அதற்குத் தெரியும்; அது ஒரு நடனம் ஆடும்.

உங்களுக்கும் அதற்கும் பெரிய வித்தியாசமே கிடையாது. எனக்கும் அப்படித்தான் வந்தது. உங்களிடமிருந்து நான் மாறுபட்டவன் என்றால், நான் புரிந்துகொண்டதால்தான்; அவ்வளவுதான். நானும் நீங்களும் வேறு இல்லை. ஒரு கட்டத்தில் நானும் அப்படித்தான் வந்து, இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன்.

நம்மை ஒரு மிருகக்காட்சிசாலையில்தான் வைத்திருக்கிறார்கள். நம்மைப் பழக்குகிறார்கள். சொல்லிச் சொல்லிக் கொடுக்கிறார்கள்: நீ நாயக்கர், நீ முதலியார், நீ செட்டியார், நீ பறையர், நீ இந்து, நீ கிறிஸ்தவன், நீ இஸ்லாமியன், நீ இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும்.

எப்படிப் பழக்கினார்கள்? உனக்குப் பிரச்சனை வரும், கஷ்டம் வரும், துன்பம் வரும், கவலை வரும்; கடவுளைக் கும்பிட்டால் அதிலிருந்து காப்பாற்றப்படுவாய் என்று.

அதிசயங்கள் எல்லாம் வித்தைகள்

சாமியார்கள், சத்சங்கம் நடத்துபவர்கள் பலரும் இப்படித்தான். அங்கே போனால் பொங்கல், சுண்டல் கொடுப்பார்கள். வருபவர்களுக்கு எல்லாம் விபூதி பூசி அனுப்புவார்கள். வந்தவுடனே வருபவர்கள் எல்லாம் காலில் விழுவார்கள்.

சிலர் என்னிடம் வந்து குழம்பிப்போய் நிற்பார்கள்: “என்னடா செய்கிறான்?” எனக்கும் என்ன செய்வது என்று தெரியாது. அவர்கள் வேறு எங்கோ வேறு மாதிரி பயிற்சி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். சில சாமியார்கள் காற்றிலிருந்து எதையோ எடுத்துக் கொடுப்பது போல நானும் எடுத்துக் கொடுப்பேனா என்று கூடப் பார்ப்பார்கள். அந்தச் சாமியார் நான் இல்லை.

கடவுள் அப்படி எல்லாம் இல்லை. அந்த மாதிரி எல்லாம் நீங்கள் கடவுளிடம் கேட்க முடியாது. அவை எல்லாம் என்ன? வித்தைகள். ஒற்றைச் சக்கரத்தில் சைக்கிள் ஓட்டுவது போன்ற வித்தைகள்.

இரண்டு சக்கரம் இருக்கும்போதே அது பெரிய ஆபத்தான விஷயம்தான். கற்றுக்கொள்ளும்போதுதான் அது ஆபத்து என்று தெரியும். பிறகு மிகவும் எளிது என்று நினைத்துக்கொள்கிறோம். ஆனால் அது எப்போதுமே ஆபத்துதான். பைக்கில் போய்க்கொண்டிருக்கும்போது நீங்கள் மிகவும் ஆபத்தாகத்தான் போய்க்கொண்டிருக்கிறீர்கள்; உங்களுக்குத் தெரிவதில்லை. கொஞ்சம் அதிகமாகச் சாய்ந்து பாருங்கள், காணாமல் போய்விடுவீர்கள். சொர்க்கத்தில் போய்க் கடவுள் கேட்பார்: “நீ ஏன்டா சமநிலை தவறி வந்தாய்?”

ஒரு தகவல் போதும்

கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றுகொண்டிருந்த லாரியில் மோதிச் செத்துப் போனார்கள் என்று எல்லோரும் அழுது அழுது இருந்தார்கள். “குடித்துவிட்டுப் போனார்கள்” என்றதும் அழுகையை நிறுத்திவிட்டார்கள். ஒரு சின்னத் தகவல் சொன்னால் நாம் அழுகையை நிறுத்திவிடுவோம். குடித்துவிட்டுப் போனாலும் செத்தது பிள்ளைகள்தானே?

ஏதாவது ஒரு தகவலைச் சொன்னால் நாம் நின்றுவிடுகிறோம். பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு. நம்மைப் பழக்கிவிட்டார்கள்.

அதனால் நாம் மதத்துக்குள் இருப்பது ஒன்றும் பெரிய அதிசயம் இல்லை. ஆறறிவு இருந்தால் எளிதாகப் பழக்கிவிடலாம். ஐந்தறிவு என்றால் பழக்குவதற்குக் கொஞ்சம் நேரம் ஆகும்.

அந்தச் சிங்கத்தைத் திரும்பக் காட்டில் விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பயிற்சியாளர் அங்கே போய், “இதோ உன் கறித்துண்டு” என்று நின்றால் என்ன செய்யும்? அவனையே மொத்தமாகச் சாப்பிட்டுவிடும். ஆனால் மனிதன் அப்படி இல்லை. என்ன புரிய வைத்தாலும், “என்ன இருந்தாலும் எங்கள் அம்மாவைவிட, அப்பாவைவிட, அண்ணனைவிட யார் பெரிய ஆள்?” என்பான். இவ்வளவு நாள் அவனை ஏமாற்றியவர்தான் அவனுக்குப் பெரியவர்.

பாட்டின் அர்த்தம் தெரியுமா?

“நீயும் நானும் ஈசன்” என்றதும் ஏமாந்துவிடக் கூடாது. அவர் என்ன சொல்ல வருகிறார், எதற்காகச் சொல்கிறார், அவர் தன்னைக் கடவுளாக எப்படி உணர்ந்தார்? இப்போது என் குருவைப் போய் நீங்கள் கேட்க முடியுமா?

அவர் பாட்டில் சொல்கிறாரே, அதற்கு விளக்கம் உங்களுக்குத் தெரியுமா? “கால் இல்லாத கண்” என்றால் என்ன, தெரியுமா? “கருக்கொள்ளாத குழி” தெரியுமா? கர்ப்பமே ஆகாத கருக்குழி எது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு பாட்டின் அர்த்தம் புரியாமலேயே அதைப் பாடுகிறான். பள்ளியில் சின்னக் குழந்தைகள் ஏதோ ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்கள்; அந்தப் பாட்டு என்ன சொல்கிறது என்று அந்தக் குழந்தைகளுக்குப் புரியுமா? அந்தப் பாட்டை எழுதுபவன் எதற்கோ எழுதுகிறான், பாடுபவன் எதற்கோ பாடுகிறான், நடிப்பவர்கள் எதற்கோ நடிக்கிறார்கள். ஒரு பாட்டின் அர்த்தம் தெரியாமல் பாடுவது போலவே, வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் வாழ்கிறான். இந்த உலகத்தில் “நீதான் கடவுள்” என்று சொன்னால் என்ன ஆகும்?

ஆணும் பெண்ணும்

கடவுள் ஆணுக்குத் தனியாக, பெண்ணுக்குத் தனியாகச் செய்திருப்பானா? அப்படிச் செய்தால் அவன் கடவுளாக இருப்பானா? ஆணுக்கு வழி கொடுத்துவிட்டுப் பெண்ணுக்கு வழி கொடுக்காமல் இருப்பானா? “ஆண் அடைய முடியும், பெண் அடைய முடியாது” என்று செய்திருப்பானா? அவ்வளவு கேடுகெட்டவனா கடவுள்?

கொண்டாடுவதற்காக ஆண் பெண் என்று பிரித்தானா, அவமானப்படுவதற்காகப் பிரித்தானா? கீழ்மைப்படுத்துவதற்காகப் பிரித்தானா? ஒருவரை ஒருவர் மதிப்பதற்காகத்தான் ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தான்.

யார் சமைத்தாலும் அரிசி மறுக்குமா?

தங்கத்தை யார் தட்டினால் என்ன, தங்கம் “வேண்டாம்” என்று சொல்லுமா? ஒருவர் பிரியாணி செய்கிறார். அரிசி “வேண்டாம்” என்று சொல்லுமா? கறி சொல்லுமா? பூண்டு சொல்லுமா? வெங்காயம் சொல்லுமா? “நீ இந்தத் தொழில் செய்பவன்; நீ செய்தால் நான் நன்றாக இருக்க மாட்டேன்” என்று சொல்லுமா? யார் செய்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.

இவ்வளவு புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நம் மண்டையில் நிறைய இருக்கின்றன. நான் பேச வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அசிங்கம் செய்து வைத்திருக்கிறான் மனிதன் இந்த உலகத்தில். திருத்தவே முடியாதது போல இருக்கிறான்.

அடித்துத் திருத்தினாலும் திருந்த மாட்டான். எவ்வளவு சொல்லிப் புரிய வைக்க முடியும்? புரியாதது போலவே நடிப்பான், இல்லையென்றால் புரியாமலேயே கிடப்பான். ஒப்புக்கொள்ளவே மாட்டான், சிந்திக்கவே மாட்டான். சிந்திக்கக் கூடாது என்று முடிவு செய்து, மூளையை எங்கோ ஒரு மூலையில் கட்டி வைத்துவிட்டான். எங்கே வைத்தான் என்று தெரியாமல் அவனே தேடிக்கொண்டிருக்கிறான்.

நீ ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்

நான் சொல்கிறேன்: நீ பெரிய ஆள். நீ மகத்துவமானவன், ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட சிறந்தவன். “ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டுகிறார்” என்று போய் நிற்கிறாயா? நான் சொன்னது, நீ ஜாதிகளுக்கு எல்லாம் மேலோங்கியவன் என்பது. அதனால்தான் “நீ கடவுள்” என்கிறேன்.

நீ என்ன சொல்கிறாய்? “இல்லை இல்லை, நாங்கள் இந்தக் குலம், அந்தக் குலத்தைவிட மேல்.” ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று சொன்னதும், மறுபடி ஒரு ஜாதிக்குள் போய் நின்றுகொள்கிறாய்.

தனித்து உணர்ந்தால் கடவுள்

“ஓம் சக்தி” என்று போன முறை பேசியிருந்தேன்; இது அதன் தொடர்ச்சிதான். பெண்ணைப் படைத்தது கொண்டாடுவதற்காகத்தான். ஆனால் சிவனால் எப்படி இருக்க முடியும்? தனித்து இருக்க முடியும். வெறுமை எப்போதும் ஒன்றும் இல்லாமலேயே இருக்க முடியும். தனித்து உன்னை நீ உணர்ந்தால், நீ கடவுள்.

“ஒன்றவன் தானே” என்று எழுதித் தொடங்கியிருப்பார்கள். “ஒன்று” என்றால் என்ன? எண் ஒன்றா? இல்லை. நீ ஒன்ற வேண்டும்; “நான்” இல்லாமல், அந்த வெற்றிடத்தோடு ஒன்ற வேண்டும்.

எவ்வளவோ பிரபஞ்சங்களை, எத்தனையோ கோடி உயிரினங்களை, எவ்வளவோ ஜீவராசிகளை, எத்தனையோ கோள்களை, கண்டுபிடிக்க முடியாத, பார்க்க முடியாத, உணர முடியாத, அறிய முடியாத, என் மூளைக்கு எட்டாத அளவுக்குப் படைத்த ஒன்று எப்படி இருக்கிறது? ஒன்றும் இல்லாமல் இருக்கிறது.

நடுவில் நின்றது எது?

“நானதேதடா, நீயதேதடா, நடுவில் நின்றதேதடா?” நான் ஆனது எது, நீ ஆனது எது? நான் இருக்கிறேன், நீ இருக்கிறாய்; நடுவில் இருப்பது எது? நம் இருவருக்கும் நடுவில் காதல் இருக்கலாம், கொடுக்கல் வாங்கல் இருக்கலாம்.

நீ ஆண், நான் பெண் என்று வைத்துக்கொள்வோம். நாம் இருவரும் காந்தம் போல. அந்தக் காந்தம் எங்கே இருக்கிறது? நீ கொடுக்கிறாய், நான் வாங்கிக்கொள்கிறேன்; நான் கொடுக்கிறேன், நீ வாங்கிக்கொள்கிறாய். நம் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்றுதான் இருக்கிறது. அப்படி ஒன்றினால், நீயும் நானும் ஈசன்; நீயும் நானும் கடவுள்.

பாதி அல்ல, முழுமை

நானும் ஒன்றும் இல்லை, நீயும் ஒன்றும் இல்லை. இங்கே பாதி எல்லாம் இல்லை. “நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி” என்பது இல்லை. பாதி பாதியாக இருந்து ஒன்றும் ஆக முடியாது.

நான் ஆண், நான் ஒரு முழுமை. நீ பெண், நீயும் ஒரு முழுமை, உமை. நம் இருவரையும் சேர்த்து வைத்திருக்கும் வெறுமைதான் உண்மை. நம் இருவருக்குள்ளும் வெறுமை இருந்தால்தான் சேர முடியும். நடுவில் ஒரு திரை இருந்தால் சேர முடியாது.