பகுதி 2 / 4
மனிதனாக வாழ மட்டும் பக்குவப்படவில்லை
சிவயோகி அவர்களின் “பக்குவம்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது இரண்டாவது. மூல உரையைக் காண.
கான்சுலேட் கதவும் “சார்” என்ற சொல்லும்
“பூங்கதவே, தாழ் திறவாய்” என்று ஒரு பாட்டு உண்டு.
அமெரிக்க கான்சுலேட்டுக்குப் போனால் அங்கே கதவுகள் எல்லாம் அவ்வளவு பெரிதாக இருக்கின்றன. “கொஞ்சம் அழுத்தம் கொடுத்துத் தள்ளித் திறங்கள்” என்று அங்கே இருப்பவர் சொல்லவே சொல்கிறார். நான் தடவிப் பார்த்து, பாட்டுப் பாடிக்கொண்டிருந்தால்? கீழே இருந்து முறைப்பார்: “கொஞ்சம் அழுத்தித் திறக்கிறீர்களா?”
அவர் “யோ” என்று சொல்ல மாட்டார். கான்சுலேட்டில் வேலை பார்க்கிறார் அல்லவா; “சார்” என்றுதான் சொல்வார். ஆனால் அது உண்மையில் “யோ”தான். “சார்” என்று கேட்டவுடன் உங்களுக்குச் சில்லென்று ஆகிவிடும். அதற்குள் என்ன ஒளிந்து நிற்கிறது என்று தெரியாது; அந்த மொழியே உங்களுக்குப் புரியவில்லை.
பக்குவம், அபக்குவம்
அப்படியானால் பக்குவம் என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. பக்குவப்படுவது சாத்தியமா? சாத்தியம். பக்குவம், அபக்குவம் என்று சிவாகமத்தில் வருகிறது. அவை பற்றித் தனியாகவே பாடல்கள் எழுதியிருக்கிறார்.
அபக்குவம் என்றால் என்ன என்று கேட்டால், வேடம் போட்டு அந்த வேடத்துக்கு ஏற்ப நடிக்கத் தெரியவில்லை என்றால் நீ அபக்குவம்தான். மேடையில் ஏறி நீ பெண் வேடம் போட்டால், அங்கே போய்க் கம்பீரமான குரலில் பேசக்கூடாது. மெல்லிய குரலில்தான் பேச வேண்டும். அந்த வேடத்துக்கு ஏற்பப் பாட வேண்டும்:
“துள்ளித் துள்ளி நீ பாடம்மா, சீதையம்மா; கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா.”
ஏன்? வளைய வேண்டிய இடத்தில் வளைந்து, நெளிய வேண்டிய இடத்தில் நெளிந்து, குனிய வேண்டிய இடத்தில் குனிந்து, நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்துதான் வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. நதி நேராக ஓடுவதில்லை; வாழ்க்கையும் அப்படித்தான். பக்குவப்பட்டுவிட்டேன் என்ற பெயரில் நான் விறைப்பாக நேராக நின்றுவிட்டால் என்ன ஆகும்?
ஊசியும் நூலும்
ஊசியின் பக்குவம் கூர்மையாகவும் நேராகவும் இருப்பது. நூலின் பக்குவம் வளைந்து கொடுப்பது. ஊசி வளைந்து கொடுத்தால் துணிக்குள் போகுமா? தைக்க முடியுமா? முடியாது.
இப்போது ஊசியும் நூலும் சண்டை போடுகின்றன. ஊசி சொல்கிறது: “நான்தான் பக்குவப்பட்டவன்.” நூல் சொல்கிறது: “இல்லை, நான்தான் பக்குவப்பட்டவன்.” இரண்டில் எது பக்குவம்?
ஒரு பண்டிதர் வந்து சொல்லிவிட்டார்: “நாணலைப் போல வளைந்து கொடு.” எப்போதும் நாணல் மாதிரியே வளைந்துகொண்டிருந்தால், ஒரு புழு பூச்சியாவது உன் பக்கத்தில் வந்து தங்கும் என்று நினைக்கிறாயா? ஒரு பாம்பாவது உன் நிழலில் வாழ முடியுமா? முடியவே முடியாது.
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி
ஆலமரம் மாதிரி இருந்தால் எவ்வளவு பறவைகள் தங்கலாம், எத்தனை பேர் அதன் கீழ் இளைப்பாறலாம்! அப்படியானால் ஆலமரம் மாதிரி இருக்க வேண்டுமா, அருகம்புல் மாதிரி இருக்க வேண்டுமா?
நம் முன்னோர் இரண்டையும் சொல்லிவிட்டார்கள்: “ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி.” “வேர்தான் பெரிது, அருகு மாதிரி இரு” என்று ஒருவர்; “ஆல்தான் பெரிது” என்று இன்னொருவர். இரண்டையும் சொன்னவுடன் எப்படிப் பக்குவமாக இருப்பது? புல்லாக இருப்பதா, மரமாக இருப்பதா?
நல்லவன் யார்?
“நல்லவனாக இரு” என்று ஒரு குரு சொன்னார். நான் ஏற்கெனவே நல்லவன்தான் என்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்கிறார்கள். எப்படி? குடிக்க மாட்டேன், அதனால் நல்லவன். சிகரெட் பிடிக்க மாட்டேன், நல்லவன். கறி மீன் சாப்பிட மாட்டேன், நல்லவன். வேதங்களை எல்லாம் பாராயணம் செய்வேன், நல்லவன்.
இப்படி ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு “நான் பக்குவப்பட்டவன்” என்று நினைத்துக்கொள்கிறான். மனைவியோ வெளியே சொல்ல முடியாமல் சகித்துக்கொண்டு வாழ்கிறாள்: “இவனை நம்பித்தான் வாழ்கிறோம், வேறு வழியில்லை.” பட்டியலில் இருப்பது எல்லாம் சரியாக இருக்கிறது; ஆனால் அவன் பக்குவப்பட்டுவிட்டானா?
பக்குவப்பட்ட மனிதனைப் பார்க்க முடியுமா?
பக்குவம் என்ற வார்த்தையை அழகாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் பக்குவப்பட்ட ஒரு மனிதனை நீங்கள் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா? நீங்கள் பக்குவப்பட்டால்தான் அது உங்களுக்குத் தெரியும்.
“தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே; அந்தத் தன்மை வர உள்ளத்திலே உண்மை வேண்டுமே.”
நான் திருடனாக இருந்தால், மற்றவனை என்னவாகப் பார்ப்பேன்? திருடனாகத்தான் பார்ப்பேன். பிரச்சனை என்னிடமா, அவனிடமா?
சாதிக்குப் பக்குவப்படுத்தப்பட்ட மனிதன்
மனிதர்களையே அப்படிப் பக்குவப்படுத்தி வைத்துவிட்டார்கள். “நீ சாதியில் தாழ்ந்தவன்” என்று ஒருவனிடம் சொன்னார்கள். அவனும் ஒப்புக்கொண்டுவிட்டான். பக்குவப்படுத்தினார்களா இல்லையா?
ஒரு பூனையை இப்படிப் பக்குவப்படுத்த முடியாது. சோறு போடுகிறீர்கள் என்பதற்காக உங்கள் பேச்சையெல்லாம் அது கேட்குமா? ஆனால் மனிதன் எப்படிப் பக்குவப்பட்டுவிட்டான்!
“சாதியில் தாழ்ந்தவர்கள்” என்று சொன்னவுடன், அதையே ஏற்றுக்கொண்டு ஒரு கூட்டமாகச் சேர்ந்துகொள்கிறோம். அடுக்கு அடுக்காக நம்மையே பிரித்துக்கொள்கிறோம். வர்ணம் வரைக்கும் போகிறது: “நீ இந்த வர்ணம், அவர் அந்த வர்ணம்; இந்த வர்ணத்தவரும் அந்த வர்ணத்தவரும் சமமாக உட்காரக்கூடாது.” நம் மேல் நாமே எப்படிச் சாயம் பூசிக்கொள்கிறோம்!
வர்ணம் இல்லையென்றால் கட்சி இல்லை, தலைவர் இல்லை. உண்மையில் பிரச்சனை தலைவர்களுக்குத்தான். நாம் அதை நம் பிரச்சனை என்று நினைத்துக்கொள்கிறோம்.
பணமும் நம்பிக்கையும்
“ஒரு கட்டத்துக்கு மேல் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?” என்று நான் ஒருமுறை சொன்னேன். கேட்டவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். மனிதர்கள் நாம் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கிறோம்!
மனிதனாக வாழ மட்டும்
கூட்டம் கூடுவதற்கும், ஒருவருக்குக் கும்மி அடிப்பதற்கும், “ஜே” சொல்வதற்கும் பக்குவப்பட்டிருக்கிறான் மனிதன். சாதியை ஒப்புக்கொள்வதற்கும், சாதியை உண்மை என்று நம்புவதற்கும் பக்குவப்பட்டிருக்கிறான் மனிதன். மதத்தை ஒப்புக்கொள்வதற்கும், மதத் திமிரில் வாழ்வதற்கும் பக்குவப்பட்டிருக்கிறான் மனிதன். எதற்கு மட்டும் பக்குவப்படவில்லை? மனிதனாக வாழ மட்டும்.
“பாம்பின் கொடும் விஷத்தைச் சொல்லில் கொடுக்கத் தெரிந்துகொண்டான்; குள்ளநரி போல் தந்திரத்தால் குடியைக் கெடுக்க அறிந்துகொண்டான்; கள்ளப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்க அறிந்துகொண்டான்; மனிதனாக வாழ மட்டும்…”
நான் ஒரு மனிதன். எனக்கு ஏதோ ஒன்று புரிகிறது, அதைச் சொல்கிறேன். சொல்வது என்ன என்று பார்ப்பதில்லை. “இவன் யார்? எதற்காகச் சொல்கிறான்? இவன் ஏன் இதைச் சொல்ல வேண்டும்?” என்றுதான் கேட்கிறார்கள்.
இந்த உலகத்திலேயே பெரிய முட்டாள் யார் என்றால் நான்தான். ஏன்? யாராவது பக்குவப்படுவார்களா என்று இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேனே!
நீ பிறந்ததே பக்குவப்படத்தான்
இந்த உலகம் பக்குவப்படவும் படாது. அது யார் பிரச்சனை? அது உலகத்தின் பிரச்சனை. நான் புரிந்துகொண்டு பக்குவப்படுவதற்காகத்தான் இந்த இயற்கை, அல்லது கடவுள், எனக்கு வாழ்க்கையையே கொடுத்திருக்கிறது.
நீ பிறந்ததே பக்குவப்படத்தான். உனக்கு வரும் பிரச்சனைகள் எல்லாம் எதற்கு? பக்குவப்படத்தான். மனைவி, கணவன், பிள்ளைகள், நண்பர்கள், தொழில், சுற்றியிருக்கும் சமூகம் எல்லாம் உன்னை வெறுப்பேற்றுவது உன்னைப் பக்குவப்படுத்துவதற்காக. இல்லையென்றால் உன் கதி அதோ கதிதான். எப்போதும் கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு அப்படியே வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதான்.
உனக்குள் இருக்கும் அந்த உண்மையைக் கண்டுபிடி. கண்டுபிடித்தவுடன் பயிற்சியை ஏற்றுக்கொள்; நீ பக்குவப்பட்டுவிடுவாய். நீ ஒரு விசேஷம். உனக்குள் தூண்டப்பட வேண்டிய ஒரு விளக்கு இருக்கிறது; குண்டலினி இருக்கிறது. அது எழும்பும், அது வெளிச்சம். நீ பக்குவப்பட முடியும்.
உடம்பும் மனமும்
“உடம்பு ஏற்கெனவே பக்குவப்பட்டது” என்றுதானே சொன்னேன். அப்படியானால் மனம் பக்குவப்பட்டால் இந்த உடம்பே வேறாக மாறுமா? பக்குவப்படுவதற்கான வாய்ப்பை உடம்பு உனக்குக் கொடுத்திருக்கிறது. ஆனால் நீ அந்த உடம்பை வைத்து வேறு வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாய்.
இந்த உடம்பில் மனம் ஏன் இருக்கிறது? உடம்பு செய்ய வேண்டிய வேலைகளை உடம்பு செய்யும். அது உணர்ச்சிவசப்படும். ஏன் உடம்பை நீ மதிக்கவில்லை? மனதுக்கு ஏற்ப உடம்பை உடன்படச் செய்யத் தெரிகிறதே தவிர, உடம்புக்கு ஏற்ப உன் மனதை உடன்படச் செய்ய முடியவில்லை. அதுதான் உன் பிரச்சனையே.
மனதுக்காக உடம்பை ஆட்டிப் படைக்கிறாய். சாதிப் புத்தகங்களைப் படிக்கிறாய், மத ஒழுக்கப் புத்தகங்களைப் படிக்கிறாய், அந்த ஒழுக்கத்தின்படி உன் உடம்பை மாற்றுகிறாய். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்க மாட்டேன் என்கிறாய். உடம்புக்கு ஏற்ப மனதைத் திருத்த ஒருநாள்கூட முயலவில்லை.
கற்றுக்கொள்வதுதான் பக்குவமா?
மனிதன் எப்படிப் பக்குவப்படுகிறான்? ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்வதற்குப் பெயர் பக்குவமா? அதை நாய்கூடச் செய்கிறது. “எஜமான் வந்தால் வாலாட்டு” என்று யாரோ சொல்லிக் கொடுத்தார்கள்; அது பக்குவப்பட்டுவிட்டது. ஆனால் அந்த எஜமான் விஷம் கொடுத்தால்கூட அது சாப்பிட்டுவிடும். அதற்கு அது தெரியாது. மனிதனுக்குத் தெரியும்.
என் பேச்சைப் பக்குவப்பட்டவன் கேட்டால், “இந்த உலகத்தில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று மகிழ்வான். பக்குவப்படாதவன் கேட்டால் என்ன ஆவான் தெரியுமா? குக்கரில் கொதிப்பது மாதிரி கொதிப்பான். “இவர் பேச்சே சரியில்லை. இவர் பேச்சை நடு வீட்டில் போட்டீர்களே, பிள்ளைகள் என்ன ஆவார்கள்?” என்று கேட்பான்.
அவன் பிள்ளைகள் வெளியே போய் இதைவிட மோசமானவற்றைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்; அதற்கு நன்றாகவே பக்குவப்படுகிறார்கள்.
மனிதனுக்கு என்ன புரியவில்லை? ஏதோ ஒன்று புரிந்துவிட்டது என்று நினைத்துவிட்டால், வேறு எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவன் முயலவே மாட்டான்.
குண்டலினி பற்றிய பயம்
“குண்டலினிதானே?” என்று ஒவ்வொருவரும் வேறு பயமுறுத்துகிறார்கள். ஒருவன் சொன்னான்: “குண்டலினி வந்துவிட்டால் பேசவே மாட்டான்.” “குண்டலினி இருந்தால் சாமியாராகப் போய்விடுவார்கள்.”
இதையெல்லாம் கேட்டுவிட்டு ஒருவன் “எனக்குக் குண்டலினி எழும்பிவிட்டது” என்று திருவண்ணாமலைக்குப் போனான். “குண்டலினி எழும்பிவிட்டது, எனக்குப் பயமாக இருக்கிறது.”
குண்டலினி எழும்பினால் என்ன ஆகும் என்று பார்க்க வேண்டுமா? என்னைப் பார். உனக்கு எழும்பியது எனக்கு எழும்பியிருக்காதா? குண்டலினி எழும்பினால் அன்பும் கருணையும் பெருகுமே! அது ஏன் உனக்கு வரவில்லை? அப்படியானால் நீ பக்குவப்படாமல் இருக்கிறாய்.
பக்குவம், அபக்குவம் பற்றிச் சிவாகமத்தில் அழகாகச் சொல்கிறார்: பக்குவப்படாதவனுக்கு எதுவும் செய்ய முடியாது. “சரி, இவனுக்குக் கற்றுக் கொடுத்தால் பக்குவப்படுவான்” என்று நினைத்துக் கற்றுக் கொடுத்தால், அவனுக்கு அது எளிதாகக் கிடைத்ததால் அதன் மதிப்பு தெரிவதில்லை. அவன் அங்கேயேதான் இருக்கிறான்.
“ஐயா, நான் ரொம்ப காலத்துக்கு முன்பே உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள்” என்கிறான் ஒருவன். “பரவாயில்லை, அந்த நான்காவது பயிற்சியை மட்டும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.” அது என்ன நான்காவது பயிற்சி?
நோக்கம் என்ன?
பக்குவப்படுதல் எங்கே நடக்கிறது? சம்பவத்திலோ செயலிலோ அல்ல. உங்கள் நோக்கம் என்ன என்பதில்தான்.
உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்? எதற்காகப் பிறந்தீர்கள்? உடல் இன்பத்தை அனுபவிப்பதற்கு மட்டும்தான் வந்தீர்களா? பாலுணர்வுக்கும் இனக்கவர்ச்சிக்கும் மட்டும்தான் வந்தீர்களா? இல்லை, சாதிப் பற்றுகளை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றுக்காக வாழ்ந்துவிட்டுப் போக வந்தீர்களா?