பகுதி 1 / 4

அதிரசமும் பக்கும் உழுத நிலமும்

சிவயோகி அவர்களின் “பக்குவம்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது முதலாவது. மூல உரையைக் காண.

கூட்டம் கூடுவதற்கும், ஒருவருக்குக் கும்மி அடிப்பதற்கும், “ஜே” போடுவதற்கும் மனிதன் பக்குவப்பட்டிருக்கிறான். சாதியை ஒப்புக்கொள்வதற்கும், சாதியை உண்மை என்று நம்புவதற்கும் பக்குவப்பட்டிருக்கிறான். மதத்தை ஒப்புக்கொள்வதற்கும், மதத் திமிரில் வாழ்வதற்கும் பக்குவப்பட்டிருக்கிறான். எதற்கு மட்டும் பக்குவப்படவில்லை? மனிதனாக வாழ்வதற்கு மட்டும்.

இந்த உலகம் பக்குவப்படுமா, படாதா என்பது யாருடைய பிரச்சனை? அது உலகத்தின் பிரச்சனை. யாராவது பக்குவப்பட்டுவிடுவார்களா என்று காத்திருப்பது என் வேலை அல்ல. நான் புரிந்துகொண்டு பக்குவப்படுவதற்காகத்தான் இயற்கை, அல்லது கடவுள், எனக்கு இந்த வாழ்க்கையையே கொடுத்திருக்கிறது. நீ பிறந்ததே பக்குவப்படுவதற்குத்தான். உனக்குள் நீ எழும்பிவிட்டால் என்ன ஆகும்? அன்பும் கருணையும் பெருகும். அவை ஏன் உனக்கு வரவில்லை? நீ இன்னும் பக்குவப்படவில்லை.

பக்குவம் எல்லோருக்கும் ஒன்றா?

உன் பக்குவம் அப்படியே இன்னொருவருக்குப் பக்குவமாக ஆவதற்கு வாய்ப்பே இல்லை. நீ கடந்து வந்த பாதை, உனக்கான அனுபவங்கள், உனக்கு நேர்ந்த விஷயங்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒன்று போல நேர்வதில்லை. ஆகவே “எல்லோரும் ஒரே மாதிரி பக்குவப்படுங்கள்” என்று சொல்லக் கூடாது.

பக்குவம் ஆளுக்கு ஆள், காலத்துக்குக் காலம், நேரத்துக்கு நேரம் மாறுகிறது. சமூக ஒழுக்கம் எல்லோருக்கும் ஒன்று கிடையாது. சமூக ஒழுக்கத்தைச் சார்ந்து வாழ்வது பக்குவம் ஆகாது. சமூக ஒழுக்கத்தையும் கடந்து, நான் எப்படி வாழ வேண்டும், என்னை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவான புரிதலோடு வாழ்பவன் மட்டுமே பக்குவப்பட்டவனாக இருக்க முடியும். பக்குவத்தை எல்லோராலும் அடைய முடியும். அதற்கு மதமோ மொழியோ தடையில்லை.

மனிதன் எவ்வளவு தூரம் பக்குவப்படலாம்?

மனிதனின் மனம் மட்டும்தான் பக்குவப்படும். மற்றவை எல்லாம் அவற்றின் இயல்பிலேயே அப்படியே நின்றுவிடும். ஒரு சிங்கம் அதற்கு மேல் வளராது. ஒரு புலி, வேறு எந்த விலங்கும், அதற்கு மேல் பக்குவம் என்று ஒன்று இல்லை. அது ஏற்கெனவே பக்குவப்பட்டுத்தான் இருக்கிறது; அதற்கு மேல் அதனால் முடியாது.

மனிதன் எவ்வளவு தூரம் பக்குவப்படலாம் என்று கேட்டால், அதற்கு அளவே இல்லை. ரொம்ப தூரம் பக்குவப்படலாம். ஆகவே நாம் பக்குவத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும். பேசுவதற்குக் கூட நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு மனிதன் பக்குவப்பட்டுவிட்டால் அவன் பேசும் விதமே வேறு மாதிரி ஆகிவிடுகிறது.

அதிரசம் ஏன் எல்லோருக்கும் வருவதில்லை?

எங்கள் அம்மா ரொம்ப காலமாக முயற்சி செய்து, முயற்சி செய்து, கடைசியில் “அதிரசம் சுட முடியாது, எனக்குத் தெரியாது” என்று விட்டுவிட்டார். அரிசி மாவு, சர்க்கரை, பாகு காய்ச்சி, எடுத்துத் தட்டி எண்ணெயில் விட வேண்டும். வீடெல்லாம் மெழுகி, கோலம் போட்டு, சாமி கும்பிட்டு, விரதம் இருந்து பாகு காய்ச்சினால்தான் அதிரசம் வரும் என்று ஒரு பெண் எங்கள் அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறார். கடைசி வரை அதிரசம் சுடாமலேயே முடிந்துபோனது.

வெல்லத்தில் ஒரு அதிரசம் செய்தால், அவ்வளவு கெட்டியாக இருக்கும், கடிக்கவே முடியாது. கல்லை வைத்து அடித்து உடைத்துத்தான் சாப்பிட வேண்டும். ஏன்? அந்தப் பாகின் பக்குவம் தெரியவில்லை.

சர்க்கரை கொதிக்கும்போது கொஞ்சம் எடுத்துத் தண்ணீரில் விட்டால் கம்பி மாதிரி போக வேண்டும். அந்தப் பக்குவத்தில், அதற்கு ஏற்ற அளவுக்குத்தான் மாவைப் போட வேண்டும். அவ்வளவு சூட்டில்தான் கலக்க வேண்டும். ரொம்பவும் கொதிக்க விடக் கூடாது; பதமாக இறக்கி வைத்துவிட வேண்டும். உடனே செய்யக் கூடாது. ஒரு இரண்டு நாள் ஊற விட்டு, அதன் பிறகு எடுத்துத் தட்டி, மேலே கசகசா போட்டுச் சுட வேண்டும்.

ஆக, ஒரு அதிரசம் சுடுவதற்கே ஒரு பக்குவம் தேவைப்படுகிறது, அப்படித்தானே? எல்லோராலும் அதிரசம் சுட முடிவதில்லை. துப்பாக்கியைக் கூடச் சுட்டுவிடுவார்கள் போல, அதிரசத்தைச் சுட முடியவில்லை. துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து “சுடு” என்றால், டப்பென்று சுட்டுவிடுவான். ஒரு குருவியைப் பார்த்துக் குறி வைத்துச் சுட்டாலும் சுட்டுவிடலாம். ஆனால் அதிரசத்தைச் சுட முடியவில்லை. அதற்கு மாவின் பதமும் பாகின் பக்குவமும் தெரிய வேண்டும்.

ஒவ்வொரு செயலுமே பக்குவமான மனிதன் செய்வதற்கும் பக்குவமற்ற மனிதன் செய்வதற்கும் வித்தியாசமாக இருக்கிறது. எல்லோருமே பக்குவமாகச் செய்வார்களா? இல்லை. “பக்குவம்” என்ற ஒரு வார்த்தையைப் புரிந்துகொள்வதற்குக் கூடப் பக்குவம் வேண்டும்.

புண்ணுக்கு மேல் வரும் பக்கு எதைச் சொல்கிறது?

புண் வந்து, புரையோடி, வெடித்து, மேலே காய்ந்துவிட்டால் “பக்கு வந்துவிட்டது” என்போம். அப்போது பக்குவமாகிவிட்டது. பக்குவமாகி என்ன ஆனது? பக்கு பெயர்ந்தவுடன் ரணம் ஆறியிருக்கும்.

இந்த உடம்பு ரொம்ப விசேஷமானது. இயற்கையோ கடவுளோ, நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்பிக்கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம். ஆனால் இந்த உடம்பு ரொம்ப அறிவுபூர்வமானது. கீறினால் அதுவே ரத்தத்தைக் காய வைத்து ஆறிவிடும். “நீ மருந்து போட்டால்தான் ஆறுவேன், ஊசி போடாமல் ஆற மாட்டேன்” என்று எந்த உடம்பும் சொல்வதில்லை. எந்த வியாதி வந்தாலும் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்குத்தான் கடவுள் நம் உடம்பைச் செய்து வைத்திருக்கிறார்.

ஆனால் இந்த உடம்பைக் கேடுகெட்டதாக மாற்றுவதற்காகவே நிறைய பேர் வேலை செய்திருக்கிறார்கள். மருந்துகளாலும், கெடுக்கப்பட்ட உணவாலும், செயற்கைக் காய்கறிகளாலும் சாப்பிட்டது ஜீரணமாகவே முடியாத மாதிரி நம் உடம்பை ஆக்கி வைத்திருக்கிறோம். அப்படித்தானே? உடம்பு பக்குவமாகத்தான் இருந்தது.

உடம்புக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?

இறைவன் செய்த ஒவ்வொரு செயலையும் ரொம்பப் பக்குவமாகச் செய்திருக்கிறான். பூனையையும் புலியையும் செய்த விதம் வேறு, மனிதனைச் செய்த விதம் வேறு. உடம்பைப் பொறுத்தவரை அது பக்குவப்பட்டிருக்கிறது, ரொம்ப ரொம்பக் கவனமாக இருக்கிறது. நீங்கள் அதற்கு எதையும் சொல்லித் தர வேண்டியதில்லை.

மீசை முளைக்க வேண்டும் என்று நீங்கள் எந்தச் சாமியிடமும் எந்தக் கடவுளிடமும் வேண்டவில்லை. “நான் ஆணாக வேண்டும்”, “நான் பெண்ணாக வேண்டும்” என்று தவம் இருக்கவில்லை. ஆனாலும் அது நடந்தது. உடம்பு தானாகவே அதைச் செய்தது.

உடம்பைப் பொறுத்தவரை வயது வித்தியாசமும் ஒரு தடை இல்லை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பக்குவப்பட்ட, பூர்த்தியான ஒரு வயது வந்துவிட்டால், உடம்பு தன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கும். காதலுக்கு வயது தடை இல்லை.

ஆனால் சமூகம் வேறு மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கிறது. “பத்து, பன்னிரண்டு வயது வித்தியாசம் இருந்தால் அவன் உனக்குத் தோதானவன் இல்லை. சீக்கிரம் வயதாகிவிடுவான்” என்று பெண் குழந்தைகளின் மனதில் பதிய வைத்துவிட்டார்கள். தனி நபர் ஒழுக்கத்தின் மேல் எனக்கு அக்கறை இல்லை. நான் கேட்பது இதுதான்: எது பக்குவம் என்று பார்த்தால், சமூகம் உனக்கு எதைச் சொல்லிக் கொடுக்கிறதோ அதையே பக்குவம் என்று நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய்.

விலங்குகள் பக்குவப்பட்டிருக்கின்றனவா?

பூனை பக்குவப்பட்டிருக்கிறது, நாய் பக்குவப்பட்டிருக்கிறது, சிங்கம் பக்குவப்பட்டிருக்கிறது. மனிதனைப் பார்த்தால் பக்குவப்பட்ட மாதிரியே இல்லை. தனக்குத் தேவையோ இல்லையோ, அடுத்தவன் வாழ்க்கையைப் பார்ப்பதையே ஒரு வேலையாக வைத்துக்கொள்கிறான். அதனால்தான் நாடகமும் சினிமாவும் ஓடுகின்றன. இப்போது சினிமாவில் அவனே எழுதி, “இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று அவனே நடித்து, அவனே பார்த்துக்கொள்கிறான்.

பக்கு மாதிரி ஒட்டிக்கொண்டிருக்கிறாயா?

அழகுக்காக எதையும் செய்துகொள்வதில் தப்பு கிடையாது. ஆனால் நீ அதை மட்டுமே செய்துகொண்டிருக்கும்போதுதான் அது தப்பாகிவிடுகிறது. அப்போது உன் பக்குவம் எப்படி? பக்குவப்படவில்லை. நீ ஒரு இடத்தில் பக்கு மாதிரி ஒட்டிக்கொண்டிருக்கிறாய். அதைப் பிய்த்துப் போட வேண்டும். பக்கு எடுத்தால்தான் புண் ஆறும். பக்கைப் பதமாக எடுத்துவிட வேண்டும்; அப்போதுதான் பக்குவம். இல்லையென்றால் அப்படியேதான் இருக்கும், பக்குக்கு அடியிலேயே புரையோடிப்போகும்.

மனதில் பட்ட வடு ஏன் ஆறுவதில்லை?

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.”

மனதில் ஏற்படும் வடு ரொம்பப் பெரியது. உடம்பில் வடு ஏற்பட்டால் ஆறிவிடும். நாளைக்குப் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உடம்பில் தழும்பே இல்லாமல் ஆக்கிக்கொள்வார்கள்; ஆனால் மனதில் பட்ட தழும்பை அப்படி ஆற்ற முடியாது. இது யாருக்குப் புரிந்திருந்தது? நம் தாத்தா வள்ளுவருக்குப் புரிந்திருந்தது. உடம்பைச் சரி செய்துகொள்வார்கள், மனிதனை ஒன்றும் செய்ய முடியாது என்று அப்போதே சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நிலத்தைப் பக்குவப்படுத்துவது எப்படி?

ஒரு நிலத்தைப் பக்குவப்படுத்துவது என்றால் அதை ரணப்படுத்துகிறோமா, அல்லது உழுகிறோமா? அதுவும் “அகல உழுவதை விட ஆழ உழு” என்கிறார்கள். ஒரு மனிதனிடம் ஆழமாக உழ வேண்டுமென்றால் எப்படிச் சொல்ல வேண்டும்?

“தம்பி ராஜா, எழுந்திரு, பொழுது விடிந்துவிட்டது பார். போர்வைச் சிறையை விட்டு உடனே வா” என்று பாட்டுப் பாடுகிறோம். அவர் எங்கே இருக்கிறார்? படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார். பாட்டை எங்கே பாடுகிறோம்? நடுத் தெருவில் நின்று. அது அவர் காதில் விழுமா?

“எழுந்திரு, பள்ளிக்குப் போக வேண்டும்.” “இன்றைக்குப் போகவில்லை அம்மா.” “ஏன்?” “வயிறு வலிக்கிறது.” “என் செல்லமே, இன்றைக்குப் போக முடியாதா? பரவாயில்லை, டியூஷன் வாத்தியார் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம்” என்றால் என்ன ஆகும்? டியூஷன் வாத்தியார் வேறு வரப்போகிறார் என்றால் அவன் இன்னும் நிம்மதியாகத் தூங்குவான்.

இப்போது எது பக்குவம்? நிலத்தைத் தடவிக் கொடுப்பதா? விதையை எடுத்துக்கொண்டு போய் நிலத்தின் மேலே தூவிவிட்டு, “தண்ணீர் ஊற்றினால் மூழ்கிவிடுமே” என்று லேசாகத் தெளித்துவிட்டு வந்துவிட்டால், முளைத்துச் செடியாகி நான் அறுவடை செய்துவிடுவேனா? முடியுமா?

“சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி, சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி” என்று பாடுகிறோம். அப்படி நிலத்தைக் கொத்தி, உழுது, வரப்பு வெட்டி, தண்ணீர் ஊற்றி ஊற விட்டு, திரும்பச் சேறாக்கி, அவ்வளவும் செய்த பிறகுதான் அந்தச் சேற்றில் நாற்று விட வேண்டும். நாற்றைத் தனியாக வளர்த்து, அதைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய்த் திரும்ப நட்டு, அழகாக, நேர்த்தியாக வைக்க வேண்டும். நட்டுவிட்டுச் சும்மா வந்துவிடக் கூடாது. நடுவில் களை வந்தவுடனே அதைப் பிடுங்கிப் போட வேண்டும். அப்போதுதான் நிலம் விளையும்.

உன்னை எப்படித்தான் புரிய வைக்க முடியும் என்று நீ நினைக்கிறாய்? பக்குவம் என்றால் என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?