பகுதி 3 / 4
உன் பக்குவம் உனக்கு மட்டுமே
சிவயோகி அவர்களின் “பக்குவம்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது மூன்றாவது. மூல உரையைக் காண.
ஜாதி இல்லை என்றால் ஏன் ஒழிக்க வேண்டும்?
ஜாதியை ஒழிக்க வந்திருக்கிறீர்களா? ஜாதி என்று ஒன்று இல்லையே! இல்லாத ஒன்றை ஏன் ஒழிக்கிறீர்கள்?
எல்லோரும் நன்றாக இருக்க வழிகாட்டுவதற்காகத்தான் அரசியலமைப்பே உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று எல்லோரும் நன்றாக இருக்கிறார்களா?
பி.எஸ்.என்.எல்லும் ஜியோவும்
பி.எஸ்.என்.எல் என்று ஒரு நிறுவனம்; “கனெக்டிங் இந்தியா” என்பது அதன் முழக்கம். இப்போது நீங்கள் ஜியோவில் இருக்கிறீர்களா, பி.எஸ்.என்.எல்லில் இருக்கிறீர்களா? ஏன் ஜியோவுக்குப் போனீர்கள்? “கனெக்டிங் இந்தியா” என்ன ஆனது? எல்லோரும் ஜியோவுக்கு மாறிவிட்டோம். எந்த ஆட்சி வந்தாலும் இது மாறவில்லை.
ஜியோவில் வேலை செய்பவன் சரியாக வேலை செய்கிறான்; பி.எஸ்.என்.எல்லில் வேலை செய்பவன் செய்வதே இல்லை. ஜியோவுக்கு போன் செய்து இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று சொன்னவுடனே, “அப்படியா சார், எந்த இடம்? சரிசெய்த பிறகு எனக்கு ஸ்டார் கொடுங்கள் சார்” என்று உடனே வருகிறான்.
ஏன் இந்த அவல நிலை? மனிதன் மாறவில்லையா? கட்சி மாறவில்லையா? பிரச்சனை அரசாங்கத்திடமா, நம்மிடமா?
அரசு வங்கியும் தனியார் வங்கியும்
அரசுடைமை வங்கிக்குப் போனால், “யார் நீ? எதற்கு வந்தாய்? முன்னாலேயே போன் செய்து சொல்லிவிட்டு வரக்கூடாதா? ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் எடுக்கக்கூடாது என்று தெரியாதா?” என்கிறார்கள். சரி, சொல்லிவிட்டு வரலாம் என்று போன் செய்தால், யாரும் எடுப்பதே இல்லை.
தனியார் வங்கிக்குப் போனால், “வாருங்கள் சார், உட்காருங்கள். என்ன வேண்டும்?” என்று கேட்டு அவர்களே செய்து கொடுக்கிறார்கள். “ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போட்டாலே போதும் சார்” என்கிறார்கள்.
அரசு வங்கியில் காசோலைப் புத்தகம் கேட்டுப் படிவம் கொடுத்தால், கையெழுத்து விடுபட்டதை அடுத்த முறைதான் சொல்வார்கள்; “நீங்கள்தான் பார்த்திருக்க வேண்டும்” என்பார்கள். அதன் பிறகு போனால் “உங்கள் பெயர் இல்லை” என்பார்கள். தவமாய்த் தவமிருந்துதான் ஒரு காசோலைப் புத்தகம் வாங்க வேண்டும்.
தனியார் வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டும் என்றாலே வீட்டுக்கே வந்து ஆவணங்களை வாங்கிப் போகிறார்கள்; கணக்கு எண் எஸ்.எம்.எஸ்ஸில் வந்துவிடும். கிளை எங்கே இருக்கிறது என்றுகூட உங்களுக்குத் தெரியாது.
அரசு வங்கிக் கிளையில் பாஸ்புக் அச்சிட ஓர் இயந்திரம் வைத்திருப்பார்கள்; அது வேலையே செய்யாது. அரசாங்கம் இப்படிப் பக்குவப்பட்டுவிட்டது.
அரசுப் பள்ளியும் கல்வித்துறையும்
சினிமாவில் அரசுப் பள்ளி என்றால் கூரை இடிந்து விழுகிறது, ஆடு மாடுகளைக் கட்டுகிறார்கள் என்று காட்டுவார்கள்; பக்கத்துக் கான்வென்ட் பள்ளி நன்றாக இருக்கும். நாங்கள் போட்டிருந்த காக்கி டவுசர் தேய்ந்து ஓட்டை விழும்; கறுப்பு நூலில் தைத்தால் “போஸ்ட் பாக்ஸ்” என்று கிண்டல் செய்வார்கள். இன்று என் மகன், “உனக்கு ஊசி நூல் எல்லாம் தைக்கத் தெரியுமா?” என்று கேட்கிறான். அந்தக் கஷ்டம் அவனுக்குத் தெரியாது.
ஆக, நாம் எப்படிப் பக்குவப்படுகிறோம்? நம்மை மிகப் பக்குவமாக முட்டாள்களாகவே வைத்துக்கொள்வதுதான் கல்வித்துறையின் வேலை.
பாடப்புத்தகத்தில் “தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம்” என்று எழுதி வைத்திருப்பார்கள். அந்த வரிகளைப் படித்தால் “தீண்டாமை என்றால் என்ன?” என்ற கேள்வி வருமா, வராதா? அது இல்லை என்றால் அதை ஏன் அச்சிட்டு வைத்திருக்கிறாய்? அந்த வரிகளை எடுத்துவிட்டால் மனிதர்களுக்குள் என்ன ஆகிவிடும்? இப்படித்தான் நம்மைப் பக்குவமாக வைத்துக்கொள்கிறார்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஒரு மனிதன் உண்மையில் பக்குவப்பட்டால் அவனுக்கு என்ன தோன்றும்? “யாதும் ஊரே யாவரும் கேளிர்.” பக்குவப்பட்ட மொழியும் நெறியும் சொல்வது இதுதான்: எல்லோரும் என் சொந்தக்காரர்கள். உனக்கு ஒரு காற்று, எனக்கு ஒரு காற்றா? காற்று ஒன்றுதான் தம்பி.
இதையெல்லாம் நான் மறைமுகமாகச் சொல்வதால் கொஞ்சம் யோசிக்கிறார்கள். நேரடியாகச் சொல்லவும் நான் தயார்; ஆனால் அதைத் தாங்கும் தகுதி இப்போது மனிதர்களிடம் இல்லை. நான் பக்குவப்பட்டுவிட்டேன்.
அதிரசமும் கேசரியும் சாம்பாரும்
எங்கள் அம்மா “அதிரசம் சுட முடியாது” என்று விட்டுவிட்டார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதிரசம்தான் சுட்டுத் தர வேண்டும் என்று என்ன கட்டாயம்? நாம் சுட்டால் கல்லு மாதிரிதான் இருக்கும். ஏதாவது இனிப்புக் கொடுக்க வேண்டும், அவ்வளவுதானே? கேக், ஜிலேபி, ஜாங்கிரி என்று எவ்வளவு வகைகள்! ரவையும் சர்க்கரையும் போட்டால் கேசரி. எப்போதும் அதிரசமே இருக்க வேண்டுமா? கேசரியை நன்றாகச் செய்யலாம்தானே?
கேசரியில் நெய்யும் முந்திரியும் தூக்கலாகப் போட்டால், “கேசரி நன்றாக இருக்கிறது” என்கிறான். எது நன்றாக இருந்தது? நாக்கில் என்ன பட்டது, எது சுவையைக் கூட்டியது என்று நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவர் கேசரியில் நெய்யும் முந்திரியும் இல்லை, அவ்வளவுதான்; அதை “கேசரி நன்றாக இல்லை” என்கிறான்.
சாம்பார் நன்றாக இருக்கிறது என்றால், அதில் போட்ட பருப்பு, தக்காளி, வெங்காயம் நன்றாக இருக்கின்றன. ஏழை வீட்டுச் சாம்பாரில் வெங்காயமும் தக்காளியும் இருக்காது. நூறு கிராம் தக்காளி வாங்கிக் குழம்பு வைப்பவருக்கும், கிலோ கணக்கில் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துச் சமைப்பவருக்கும் வித்தியாசம் இல்லையா?
ஒவ்வொருவர் பக்குவமும் வேறு
நான் சொல்கிறேன்: இன்னொருவரைப் பார்த்து நீங்கள் பக்குவப்பட முடியாது. பக்குவமான ஒருவரைத் தேடிப் பிடித்து அவரைப் போல ஆக முடியாது. அவர் பக்குவப்பட்ட விதமே வேறு.
அதே மைதா மாவுதான்; ஒன்று தண்ணீரில் வெந்தது, ஒன்று எண்ணெயில் பொரிந்தது. எண்ணெயில் பொரிந்தது பூரியாகிறது; மற்றது வேறொன்றாகிறது. சப்பாத்தி சப்பாத்திதான், ரொட்டி ரொட்டிதான்.
உன் பக்குவம் இன்னொருவருக்குப் பக்குவமாக அமைய வாய்ப்பே இல்லை. நீ கடந்து வந்த பாதை, உன் அனுபவங்கள், உனக்கு நேர்ந்தவை எல்லோருக்கும் ஒன்றுபோல நேர்வதில்லை. அதனால் “எல்லோரும் ஒரே மாதிரிப் பக்குவப்படுங்கள்” என்று சொல்லக்கூடாது. சமூக ஒழுக்கமும் எல்லோருக்கும் ஒன்றல்ல.
ஒருவருக்கு இரண்டு இட்லி, ஒருவருக்கு மூன்று, இன்னொருவருக்கு இட்லியே பிடிக்காது. ஒருவர் “உப்புமா!” என்று ஆசையாகக் காத்திருப்பார்; இன்னொருவர் “உப்புமாவா?” என்பார். முதலாமவர் சாப்பிட்ட உப்புமாவில் பருப்புகளைப் பொரிய விட்டுச் செய்திருப்பார்கள். விஷயம் உப்புமா இல்லை; அதில் போட்ட பொருட்கள்தான்.
சிலர் “உப்புமா” என்று கொடுப்பது ரவைக் கஞ்சி; சிலர் கொடுப்பது கிச்சடி. நோன்புக் கஞ்சி ஏழைகள் குடிக்கும் கஞ்சி மாதிரி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? பேரீச்சம்பழமும் பாலும் கறியும் போட்டுக் கொதிக்க வைத்திருப்பார்கள்; பெயர்தான் கஞ்சி.
சமூக ஒழுக்கமும் உன் ஒழுக்கமும்
ஆக, பக்குவம் ஆளுக்கு ஆள் மாறும். அப்படியென்றால் நான் எப்படிப் பக்குவப்படுவது? யாரிடம் என்ன கேட்க வேண்டும்? “இறைவா, நான் பக்குவப்பட்டிருக்கிறேனா? உனக்குப் பதமாக வாழ்கிறேனா? இந்த இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்கிறேனா?”
எனக்குச் சரி என்றால் அது சரிதான். மற்றவர்களுக்கு அது தவறாகத் தெரிந்தால் அது யார் பிரச்சனை? என் சரிதான் எனக்குச் சரி; இன்னொருவருடைய சரி எனக்கு ஒத்துவராது. உன் ஒழுக்கத்துக்கும் சமூக ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே கிடையாது. முதலில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
உன் தலைவலி எங்கே தெரியுமா? சமூக ஒழுக்கத்தோடு நீ பொருந்தப் பார்க்கிறாய். உன் மனநோய், நிம்மதியின்மை, குற்ற உணர்வு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் இதுதான்: சமூகத்தோடு உன்னால் பொருந்த முடியாது; அது புரியாமல் பொருந்தப் பார்க்கிறாய். “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்ற பிடியை நீ விடவே மாட்டேன் என்கிறாய்.
வயலில் டிராக்டர் ஓட்டுபவரைச் சாலையில் ஓட்டச் சொன்னால், சுற்றிச் சுற்றித்தான் வருவார். செக்கு மாடு நாள் முழுக்கச் சுற்றலாம்; எந்த ஊருக்கும் போய்ச் சேராது. ஏன்? அது செக்கு மாடு.
மந்திரமும் மாடுலேஷனும்
தினமும் காலையில் மணியடித்து “சுக்லாம்பரதரம் விஷ்ணும்…” என்று சொல்கிறோம். சரியான அர்த்தம் தெரியாமல், மனப்பாடம் செய்து, ஓர் அழகான ராகத்தில் இழுத்து இழுத்துச் சொல்கிறோம். அர்த்தம் புரியாமல் இப்படி வெறும் ராகத்தில் சொல்லக்கூடாது.
ஒவ்வொருவனுக்கும் மொழியைப் பேசும் விதம் என்று ஒன்று இருக்கிறது. அது அவனுடைய மாடுலேஷன்; அதை யாராலும் மாற்ற முடியாது.
இது புரியாமல் நிறுவனங்கள் “இப்படித்தான் சொல்ல வேண்டும்” என்கின்றன. ஆனால் ஒருவர் சொல்வது போல இன்னொருவர் சொல்வதே இல்லை. அப்படியென்றால் கடவுள் எந்த மாதிரிச் சொன்னால் புரிந்துகொள்வார்? காலையில் மந்திரத்தை எந்த ராகத்தில் சொன்னால் அவருக்குக் கேட்கும்? அந்தக் கேள்வியை மட்டும் யாரும் கேட்கவே கூடாது.
என்னை ஏன் பேச வைத்தீர்கள்?
“உன் கதையை மட்டும் பேசு. மற்றவர்களை ஏன் திட்டுகிறாய்?” என்று என் கமெண்டில் ஒருவர் கேட்கிறார். நீங்கள் ஏன் யூடியூபிலும் மேடையிலும் பேசினீர்கள்? புத்தகமாக அச்சிட்டு என் கையில் கொடுத்தது நீங்கள்தானே? நிறுவன மதங்கள் இப்படி இல்லாமல் இருந்திருந்தால் நான் பேசுவேனா? எனக்குத் தெரியாமல் இருந்திருந்தால் பேசுவேனா?
பள்ளிப் பாடத்தில் அதையெல்லாம் ஏன் வைத்தீர்கள்? என்ன கற்றுக் கொடுத்தீர்கள்? என்னை எப்படிப் பக்குவமாக்கிவிட்டார்கள்?
தவளையும் தேரையும்
ஒரு தவளையைக் குட்டிக் குட்டி, “நீ தவளை இல்லை, தேரை” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அடி தாங்க முடியாமல் அதுவும் “நான் தேரைதான்” என்று ஒப்புக்கொள்கிறது. அடித்தவன் “அதற்குப் புரிந்துவிட்டது” என்று நினைக்கிறான். ஆனால் அந்தக் கஷ்டம் அடி வாங்கிய தவளைக்குத்தான் தெரியும்.
தவளையும் தேரையும் ஒன்று போலத் தெரிந்தாலும் வேறு வேறு. தவளை பெரிதாக வளரும்; தேரை பாறைக்குள்ளும் இருக்கும்.
ஆனால் நம்மை என்ன ஆக்கிவிட்டார்கள்? குட்டுக்கு மேல் குட்டு வாங்கி, என்னிடம் வந்து “நான் தவளையாகிவிட்டேன்” என்கிறீர்கள். அப்போதும் நீ தேரைதான்! “என்ன இருந்தாலும் எங்கள் நிறுவனர் சொல்வதில் நல்லது இருக்கிறது, தெரியுமா உனக்கு?” என்கிறீர்கள்.
மகானும் நீயும்
எந்த மகான் கண்ணால் சாப்பிட்டார்? காதால் சாப்பிட்டார்? வாயால்தானே சாப்பிட்டார்? அவரும் வாயால் சாப்பிட்டார், நீயும் வாயால்தான் சாப்பிடுகிறாய். அப்படியென்றால் நீயும் மகான்தானே? இதை மட்டும் நீ ஒப்புக்கொள்ளவே மாட்டாய்.
தேர்வில் ஒரு மகாத்மாவைப் பற்றி எழுதச் சொன்னால், அவர் எந்த ஆண்டு, எந்த ஊரில், யாருக்குப் பிறந்தார் என்று எழுதி வைத்தால் தேர்ச்சி கொடுப்பார்கள். ஆனால் அந்த மகான் சொன்னதைச் சொன்னால் உனக்குப் புரியாது.
ஆசிரியர் பக்குவப்பட்டிருக்கிறாரா? எந்த மாணவனையாவது பக்குவப்பட வைத்தாரா? “நீ ஒரு விசேஷமானவன். இந்தப் பூமியில் நீ இருக்கப் போவது ஒரு நூறு வருடம்தான். எத்தனை கோடி சம்பாதித்தாலும் ஒரு கவளம் சோறுதான். ஒரு கட்டத்துக்கு மேல் பணம் ஒன்றுமே இல்லை” என்று சொல்லிக் கொடுத்தாரா?
நடிகர் விஜய்கூட “அதெல்லாம் ஒன்றுக்கும் உதவாது” என்கிறார். ஆனால் அந்த உதவாத பணத்தில்தான் கார் வாங்கிச் சுற்றிக்கொண்டிருக்கிறார். நாமும் இப்படித்தான் பக்குவப்பட்டோம்.
உடம்பு மட்டும் நான் இல்லை
அப்படியென்றால் பக்குவப்படுதல் என்றால் என்ன? நான் வந்தேன், நான் போய்விடுவேன். எங்கிருந்து வந்தேன்? எங்கே போவேன்? அம்மா வயிற்றிலிருந்து மட்டும்தான் வந்தேனா? சுடுகாட்டில் இந்த உடம்பை எரிப்பதோடு நான் முடிந்துவிடுகிறேனா? நான் வெறும் உடம்பு மட்டும்தானா?
ஒரு ஞானி “உடம்பு மட்டும் நான் இல்லை” என்று சொன்னார். அவரைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாத ஒருவன் “உடம்பு நான் இல்லை” என்று சொல்லிவிட்டான். நடுவில் இருந்த “மட்டும்” என்ற ஒரு சின்ன வார்த்தையைத் தூக்கிவிட்டான். அதை எடுத்துவிட்டு, “உடம்பு நான் இல்லை” என்றே சொல்லிக்கொண்டு திரிகிறான்.