பகுதி 3 / 4
பழக்கம் வேறு, ஒழுக்கம் வேறு
சிவயோகி அவர்களின் “பழக்கம்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது மூன்றாவது. மூல உரையைக் காண.
குடிகாரன் மட்டும்தான் பழக்கத்துக்கு அடிமையா?
பழக்கத்துக்கு அடிமையானவர்களை எப்படிப் பார்ப்பது? குடிகாரன் மட்டும்தான் மோசமானவன் என்று நினைக்காதீர்கள். சமூகத்தைச் சுற்றிப் பாருங்கள், எல்லோரும் ஏதோ ஒரு பழக்கத்தைப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நானே ஒரு பழக்கத்துக்கு அடிமை. வாராவாரம் சத்சங்கம் நடத்துகிறேன்; வாரம் முந்நூறு, நானூறு பேர் வந்து உட்காருகிறார்கள். நானும் ஒரு பழக்கத்தில்தான் நிற்கிறேன்.
ஒருவருக்கு வணக்கம் சொல்கிறீர்கள்; அவர் பதிலுக்கு வணக்கம் சொல்லவில்லை. உடனே அவரை முறைத்து முறைத்துப் பார்க்கிறீர்கள். “நாம் வணக்கம் சொன்னோம், அவன் ஒன்றுமே செய்யவில்லையே. எவ்வளவு திமிராகப் போகிறான் பார்!” அவருக்கு அது பழக்கமே இல்லை. என்ன செய்ய முடியும்? நாயிடம் போய் வணக்கம் சொன்னால் அது பதிலுக்கு ஏதாவது செய்கிறதா? அதற்காக நாய் மேல் கோபப்படுகிறீர்களா? அவர்கள் அதில் பழகவில்லை, அவ்வளவுதான்.
இன்னொன்று பாருங்கள். ஒருவர் உங்களைப் பார்த்துக் கையைத் தூக்கினால் நீங்களும் கையைத் தூக்குகிறீர்கள். ஏன்? அதைப் பழகியிருக்கிறீர்கள். ஒருவர் உங்களைப் பார்த்துக் கண்ணடித்தால் நீங்கள் கண்ணடிப்பதில்லை. ஏன்? அதைப் பழகவில்லை. பழகாத வரைக்கும் அது வராது.
ஒரே மாதிரி செய்வதுதான் ஒழுக்கமா?
பழக்கம் வேறு, ஒழுக்கம் வேறு. ஒழுக்கம் பழக்கத்திலிருந்து மாறுபட்டது. மனிதன் ஒன்றைப் பழகுகிறான்; அதைப் போய் “ஒழுக்கம்” என்று சொல்லித் திரிகிறான். பழக்கம் ஒழுக்கம் ஆகாது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: ஒரே மாதிரியான ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதால் அதற்கு ஒழுக்கம் என்று பெயர் கிடையாது.
சட்டைப் பொத்தானை ஒவ்வொரு நாளும் சரியாக ஒரே மாதிரிப் போட்டுக்கொள்கிறீர்கள். அதனால் “நான் ஒழுக்கசீலன்” என்று சொல்ல முடியுமா? பொத்தானே இல்லாத டீ-சட்டை போட்டால் ஒழுக்கம் இல்லையா? வேட்டி கட்டினால் ஒழுக்கமானவர் இல்லையா? பேண்ட் போட்டால்தான் ஒழுக்கமானவரா? காலம் காலமாக வேட்டி கட்டுவதால் ஒருவர் பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறாரா? பாரம்பரியம் வேட்டியால் வருவதே இல்லை.
தாடி வைத்திருந்தால் அவர் சாமியாரா? திருடன் கூடத் தாடி வைத்துக்கொள்ளலாம்.
நீ பழக்கமாகச் செய்வதுதான் ஒழுக்கம் என்றால், தினமும் சாராயம் குடிப்பதும் ஒழுக்கம்தானே? அவனால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. உன்னால் திருநீறு பூசாமல் இருக்க முடியவில்லை, காபி குடிக்காமல் இருக்க முடியவில்லை. இருவருக்கும் என்ன வித்தியாசம்? அதற்குப் பெயர் ஒழுக்கமா?
அப்படியானால் ஒழுக்கம் என்றால் என்ன?
உடலாலும் மனதாலும் எனக்குத் தீங்கு வராதபடி ஒரு செயலைச் செய்வது, அதுதான் ஒழுக்கம். முதலில் யாருக்குத் தீங்கு வரக்கூடாது? எனக்கு.
ஸ்டிக்கர் பொட்டு வைத்து வைத்து நெற்றி வெளுத்துப்போனவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு காலத்தில் மஞ்சளையும் சுண்ணாம்பையும் சேர்த்துக் குங்குமம் செய்தார்கள். மாட்டுச் சாணத்தைக் காய வைத்து, எரித்துப் பஸ்பமாக்கி, பொடியாக்கி எடுத்தால் அது திருநீறு. இன்றைக்குச் சோப்பு செய்யும் தொழிற்சாலையின் கழிவை எடுத்து வந்து உனக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். முழுக்க ரசாயனமாகிப்போன இந்த உலகத்தில் நீதான் கவனமாக இருக்க வேண்டும்.
ஒழுக்கம் என்ற பெயரில் திருநீறு பூசுவதும் குங்குமம் வைப்பதும் மட்டும்தான் ஒழுக்கமா? பழக்கம் ஒழுக்கம் ஆகாது. ஒழுக்கத்தையும் பழக்கத்தையும் ஒன்றாக்கக் கூடாது.
எல்லோருடனும் உறவாட என்ன வேண்டும்?
நான் பழக்கமாகச் செய்துகொண்டிருப்பது சரியா தவறா என்று யார் கேட்க வேண்டும்? குடிகாரனும் கேட்க வேண்டும், மதவாதியும் கேட்க வேண்டும். அடுத்தவர்களுக்குத் தொல்லையாக இருக்கிறது என்று சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றால், அது யாருடைய பிரச்சனை?
ஒரு விமானி “நான் ராகு காலத்தில் விமானம் ஓட்ட மாட்டேன்” என்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் விமானியாக வந்திருக்கவே கூடாது; ஏதாவது ஒரு கோயிலில் போய் உட்கார்ந்திருக்க வேண்டும். ஜோசியம் பார்ப்பவர் “ராகு காலத்தில் வேண்டாம்” என்பார்.
நாம் ஒரு வீட்டுக்குப் போகிறோம். அந்தக் குடும்பத்துக்கு ஏதோ ஒரு பழக்கம் இருக்கும். அதற்கு நாம்தான் ஒத்துப்போக வேண்டும். ஏன்? அதை நம்மால் மாற்ற முடியாது. நான் ஒன்றைப் பழகிக்கொண்டு அப்படியே இறுகி நின்றால், எல்லோருடனும் என்னால் உறவாட முடியுமா? இந்தச் சமூகத்தில் எல்லோருடனும் உறவாட வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? அதைக் கற்றுக்கொள்ளுங்கள். நான் சொல்வது அதைத்தான்.
காலம் காலமாக ஒன்றைப் பழகிக்கொண்டு அதையே சரி என்று பிடித்துக்கொண்டிருந்தால், எல்லோருடனும் எப்படிப் பேச முடியும்? எல்லோருடனும் எப்படி வாழ முடியும்? உங்கள் மதம் உங்களுக்கு விசேஷமாக இருக்கலாம்; ஆனால் ஒரு மனிதனுக்கு அது போதாது.
மனிதாபிமானம் உள்ள மனிதனாக நீங்கள் மாற வேண்டுமென்றால், அடுத்தவர்களின் உணவை நீங்கள் இழிவுபடுத்தக் கூடாது. அது அவர்களுடைய உணவு. அவர்கள் அதைச் சாப்பிடலாம், சாப்பிடாமல் இருக்கலாம். “சாப்பிடுவது என் விருப்பம், நான் சாப்பிடுவேன்” என்று ஒருவன் சொன்னதும் உனக்குக் கோபம் வந்தால், அது யாருடைய பிரச்சனை? நீ பழக்கத்துக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறாய்.
நிறைய பேர் பேசுவதற்கே வெட்கப்படுகிறார்கள், உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிக்கொள்கிறார்கள். “இந்த ஆள் எல்லோரையும் கட்டிப்பிடித்துக்கொள்கிறார்.” அதில் உனக்கு என்ன பிரச்சனை? கட்டிப்பிடிப்பவருக்கும் கட்டிப்பிடிக்கப்படுபவருக்கும் இடையிலான விஷயம் அது. உனக்குக் கட்டிப்பிடிக்கப் பிடிக்கவில்லை என்றால் கட்டிப்பிடிக்காதே. காலில் விழப் பிடிக்கவில்லை என்றால் விழாதே. மாலை போடப் பிடிக்கவில்லை என்றால் போடாதே. இங்கே வரப் பிடிக்கவில்லை என்றால் வராதே. நீ சுதந்திரமாக வாழ்ந்தால் நீ சரி என்கிறேன் நான்.
சுதந்திரம் எங்கே இருக்கிறது?
என் சித்தாந்தம் இதுதான்: ஒவ்வொரு மனிதனும் தனக்கானதைத் தானே வரையறுத்துக்கொண்டு, தன்னைத் தானே வழிநடத்திக்கொள்ள வேண்டும். உனக்கு எது பிடித்தாலும் அதைச் செய், தவறு கிடையாது. அடுத்தவர்களுக்குத் தொல்லை இல்லாமல் இருந்தால் போதும்.
இரண்டு பேர் ஒத்துப்போகும்போது மூன்றாவது ஆளுக்கு அங்கே இடம் இருக்கிறதா? இதில் வேறு ஏதோ ஒரு புத்தகத்தைக் காட்டி “அதன்படி இது தவறு, நீ இப்படித்தான் வாழ வேண்டும்” என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
எந்த உடை உடுத்தலாம், எதை உடுத்தக் கூடாது என்று எந்த நெறி சொல்கிறது, எது சொல்லவில்லை என்று யோசித்துப் பாருங்கள். எது உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள். அப்போதுதான் சுதந்திரம் எங்கே இருக்கிறது என்று தெரியும்.
இங்கே வேட்டி கட்டலாமா, பேண்ட் போடலாமா என்பது உன் விருப்பம். கோயிலுக்குப் போகவில்லை என்றால் உன்னை யாரும் அடிக்க மாட்டார்கள், திட்ட மாட்டார்கள். அது உன் விருப்பம். நான் இந்து மதத்தில் பிறந்ததால்தான் இப்படிச் சுதந்திரமாகப் பேச முடிகிறது. மனித சமூகம் சுமூகமாக வளரவும், மனிதன் உச்சத்தை அடையவும், பரிபூரணமாக வாழவும் அங்கே வாய்ப்பு இருக்கிறது.
ஏனென்றால் அங்கே பழக்கத்தையே மாற்றிக்கொள்வதற்கான தகுதி இருக்கிறது. எங்கள் தாத்தா குடுமி வைத்திருந்தார். நீங்கள் யாராவது குடுமி வைத்திருக்கிறீர்களா? இல்லை என்பதற்காக நீங்கள் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா? பட்டை போடவில்லை என்பதற்காக, நாமம் போடவில்லை என்பதற்காக, பஞ்சகச்சம் கட்டவில்லை என்பதற்காக நீங்கள் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா?
உடையில் சுதந்திரம், உணர்வில் சுதந்திரம், மத அடையாளங்களை விட்டு வெளியே வருவதற்கான சுதந்திரம், இவையெல்லாம் இருக்கும்போதுதான் நீ பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும்.
போதைக்கு அடிமையாகலாமா?
“எங்கள் மதத்தில் குடிக்கக் கூடாது” என்பார்கள். குடிக்கக் கூடாது என்று சொன்னவுடன், போதையை வேறு இடத்திலிருந்து கொண்டு வருவார்கள்; வேறு ஒரு போதையைப் பழக்கமாக்கிக்கொள்வார்கள். குடிக்கக் கூடாது என்றுதானே சொன்னார்கள்?
நான் சொல்வது இதுதான்: என் மனதை நான் எந்தப் போதைக்கும் அடிமையாக்கக் கூடாது. போதையில்லாத பொருளே இந்த உலகத்தில் இல்லை. தாய்மை கூட ஒரு போதைதான். எது எப்படிப்பட்ட போதை என்று பிரித்துப் பார்க்கும் வல்லமை நமக்கு வேண்டும்; அதற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.
எனக்குப் பேசுவதே ஒரு போதை. வாராவாரம் சத்சங்கம் வருகிறது என்றால், என்னோடு நெருங்கியவர்களுக்குத் தெரியும்: களைப்பாக இருந்தாலும் சரி, சத்சங்கம் என்றால் எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவேன். உபதேசம் தொடங்கியதும் எந்தத் தலைவலியும் காணாமல் போய்விடும். ஏன்? அதில் எனக்கு ஒரு போதை இருக்கிறது. இன்னொருவரை நல்லவராக்குவது எனக்கு ஒரு போதை.
நான் ஏன் யாரையும் பாராட்டுவதில்லை?
நான் அடுத்தவர்களை நேரடியாகப் பாராட்ட மாட்டேன். பாராட்டினால் அவர்கள் அதிலேயே அடங்கிவிடுவார்கள், அதையே பெரிதாக்கிக்கொள்வார்கள்.
என் நோக்கம் என்னவென்றால், நீ அடைந்த இடம் எல்லை இல்லை; அதையும் தாண்டி உன்னால் வர முடியும். நான் உன்னைப் பாராட்டும்போது உன்னை ஓர் எல்லைக்குள் அடைத்துவிடுவேன். ஆனால் நீ அதையும் கடந்து வாழலாம். அதனால் உன் கதவை நான் மூட மாட்டேன். அதனால்தான் நான் பாராட்டுவதில்லை. பாராட்டு கூட ஒரு தடையாக அமைந்துவிடும்.
அலாரத்தை அணைக்கவும் தெரிய வேண்டுமா?
ஆகவே நீங்கள்தான் கவனிக்க வேண்டும்: நான் எந்த மாதிரிப் பழக்கங்களை வைத்திருக்கிறேன், எதையெல்லாம் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் என்ன பழக்கத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களைத் திட்டுவது உங்கள் வேலை கிடையாது. “பழக்கம்” என்றவுடன் “குடிகாரன் தவறு, அது தவறு” என்றெல்லாம் பேசப்போகிறோம் என்று நினைக்காதீர்கள். உங்களைக் கவனிக்கத் தொடங்குங்கள்: நீங்கள் எப்படிப் பழகியிருக்கிறீர்கள்.
ஒரு நேரம் வைத்து, அலாரம் வைத்துக் காலையில் எழுந்துகொள்வது மிக மிக நல்ல பழக்கம்தான்; இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஒரு திருமணத்துக்குப் போய்விட்டு நள்ளிரவில் திரும்புகிறீர்கள். தினமும் அலாரம் அடிக்கும்தான்; அன்றைக்கு என்ன செய்வீர்கள்? அணைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். அணைக்க முடியவில்லை என்றால் நீ பழக்கத்துக்கு அடிமை. அணைத்தால் நீ ஒழுக்கமானவன் என்று அர்த்தம்.
இன்றைக்கு நான் இரவு ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன் என்றால், நாளைக்கு வழக்கமான நேரத்தில் எழுந்துகொள்ள மாட்டேன். எப்போது எழுந்துகொள்ள வேண்டுமோ அப்போது எழுந்துகொள்வேன். “இன்றைக்கு எனக்குக் களைப்பாக இருக்கிறது, சீக்கிரம் எழுந்துகொள்ளக் கூடாது” என்று அதை அணைக்கிறான் பாருங்கள், அவன்தான் ஒழுக்கசீலன்.
விபூதி பூசிக்கொள்ளுங்கள்; உங்களுக்கு நல்லது என்றால் பூசிக்கொள்ளுங்கள், தவறு கிடையாது. ஆனால் “சிவயோகியிடம் போகிறோம், விபூதி வைத்துக்கொண்டு போனால் அவருக்குப் பிடிக்குமா” என்று அழித்துவிட்டு வந்து உட்காருகிறீர்கள். என்ன பிரச்சனை? விதவிதமாக வைத்துக்கொண்டு வந்தால் நான் சந்தோஷப்படுவேன். எனக்கு வெறுப்பு வராது.
இப்போது பழக்கத்துக்கும் ஒழுக்கத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிகிறதா? ஒழுக்கத்தால் மாற்ற முடியும், நிறுத்த முடியும், திருத்த முடியும். பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் நீ ஒரு சிறையில் இருக்கிறாய். அப்போது உன்னால் சந்தோஷமாக இருக்க முடியுமா?
“நீறில்லா நெற்றி பாழ்” என்று யாரைப் பார்த்துச் சொல்கிறோம்?
யாராவது விபூதி பூசவில்லை என்றால் அவர்கள் நெற்றியைப் பார்த்து, “இவனெல்லாம் வீண்; நீறில்லா நெற்றி பாழ்” என்கிறோம். மனப்பாடம் செய்தது உள்ளே போய் அப்படியே எதிரொலிக்கிறது: “நீறில்லா நெற்றி பாழ்.” புரிந்துகொண்டு சொல்வதில்லை; பழக்கத்தில் சொல்கிறோம்.