பகுதி 1 / 4
மனிதன் பழக்கப்படுத்தப்படுகின்ற விலங்கு

சிவயோகி அவர்களின் “பழக்கம்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது முதலாவது. மூல உரையைக் காண.
அடிமைத்தனம் என்றால் சாராயம் குடித்துவிட்டு உருளுபவனும், சிகரெட் பிடித்துக்கொண்டு இருப்பவனும் மட்டும்தான் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். அவனை மட்டுமே முட்டாள் என்று நினைக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் யார்?
நான் ஒரு விஷயத்துக்குப் பழக்கமாகிவிடுகிறேன். அந்தப் பழக்கத்தின் வழியாகவே எல்லாவற்றையும் பார்க்கிறேன். “அப்படித்தான் இருக்க வேண்டும், அதுதான் சரி” என்று சொல்கிறேன். இது அடிமைத்தனம் இல்லையா? இதுவும் ஒரு போதை இல்லையா? பழக்கம் வேறு, ஒழுக்கம் வேறு. ஆனால் மனிதன் பழக்கத்தையே ஒழுக்கம் என்று சொல்லித் திரிகிறான். “நான் பழக்கமாகச் செய்துகொண்டிருக்கிறேனே, இது சரியா தவறா?” என்று குடிகாரனும் கேட்க வேண்டும், மதவாதியும் கேட்க வேண்டும்.
இன்று எதைப் பற்றிப் பேசுகிறோம்?
இன்றைய தலைப்பு: பழக்கம், அல்லது ஏற்றுக்கொள்ளுதல். நீங்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டுவிட்டால், பிறகு அதை மறுக்க முடிவதில்லை; வேறு எதையும் ஒப்புக்கொள்ளவும் முடிவதில்லை. ஏற்றுக்கொண்டது, அல்லது ஏற்றுக்கொள்ளுதல். அந்தத் தலைப்பில்தான் இன்று பேசப்போகிறோம்.
மனிதக் குழந்தை பழக்கத்துக்கு எப்படி அடிமையாகிறது? எது நல்லது, எது கெட்டது என்று அதற்கு எப்படித் தெரிகிறது? ஏன் ஒன்றை ஏற்றுக்கொண்டது? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் இதற்குள்தான் இருக்கின்றன. ஆகவே தலைப்பு பழக்கம் என்றாலும், நாம் பேசப்போவது இதுதான்: நாம் ஏன் ஏற்றுக்கொள்கிறோம்? ஏற்றுக்கொண்டது எதனால்? நான் ஏன் அதைச் சரி என்று சொல்கிறேன்?
எது சரி, எது தவறு?
எப்போது ஒன்று சரி, எப்போது ஒன்று தவறு என்று கேட்டால், பதில் இதுதான். நான் செய்யும் செயல் எனக்குச் சரி என்று நான் நினைத்துச் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் அது சரி. அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால் அது சரியில்லை. அவ்வளவுதான்.
இப்போது நீங்கள் எல்லோரும் புடவை கட்டியிருக்கிறீர்கள். குதிரைச் சவாரி போனால் புடவை சரியா, தவறா? ஆறு முழத்தைச் சுற்றிக்கொண்டுவிட்டால் உங்களால் வேகமாக ஓட முடியாது. யாராவது அடித்தாலும், முடியைப் பிடித்து இழுத்தாலும், மானம் போய்விடுமோ என்று அமைதியாக இருப்பீர்கள். அப்படியானால் என்ன செய்யலாம்? உங்களை அடிமையாக வைத்திருக்கலாம்.
புடவை கட்டுவது ஒரு பழக்கம், அவ்வளவுதான். இப்போது வெளியிலிருந்து எல்லோரும் வருகிறார்கள், வட இந்தியர்கள் எல்லாம் வந்து போகிறார்கள். சுடிதார் வந்த பிறகு தமிழ்நாட்டு உடை என்ன ஆனது?
எங்கள் காலத்தில் பதினாறு, பதினேழு வயதுப் பெண்கள் வெறும் தாவணிதான் போடுவார்கள். அப்போது பாட்டே “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா…” என்று இருந்தது. இப்போது “சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே” என்று பாடுகிறோம். அப்படியானால் இப்போது எது சரி? புடவை என்பது வெறும் பழக்கம்தானே?
மனிதன் யார்?
மனிதன் பழக்கப்படுத்தப்படுகின்ற விலங்கு. பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு அல்ல; பழக்கப்படுத்தப்படுகின்ற விலங்கு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மனிதனுக்கு எப்போதுமே சுதந்திரம் இருக்கிறது. அன்றைக்கும் இருந்தது, இன்றைக்கும் இருக்கிறது, நாளைக்கும் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்: உங்களை மாற்றிக்கொள்வது.
எல்லோரும் புடவை கட்டினார்கள், நீங்களும் கட்டினீர்கள். ஒரு காலத்தில் சில ஊர்களில் யாருமே ரவிக்கை போடவில்லை. அப்போது முதன்முதலில் ரவிக்கை போட்டவர்களை என்ன சொல்லியிருப்பார்கள்? ரவிக்கை போடுவது நல்லதா, கெட்டதா? இன்றைக்கு இங்கிருந்து பார்த்தால் நல்லது. அன்றைக்கு அங்கிருந்து பார்த்தால்?
செருப்புப் போட்டவனை யார் திட்டியிருப்பார்கள்?
சாதி ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு சமூகத்தில், தாழ்ந்தவன் என்று வைக்கப்பட்ட ஒருவன் செருப்புப் போட்டுக்கொண்டு போகிறான். அது நல்லதா, கெட்டதா? அவனை யார் திட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அவன் சாதிக்காரனே திட்டியிருப்பான். “ஆண்டவர் வருகிறார், அவர் முன்னால் நீ செருப்புப் போட்டுக்கொண்டு போவாயா? உனக்கு அறிவில்லையா? ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? அவ்வளவு திமிரா?” என்று கேட்டிருப்பான்.
கை ரிக்ஷா இருந்த காலத்தில் நான் கை ரிக்ஷாவில் உட்கார்ந்து போவேன். எதற்கு? அவனுக்குச் சம்பளம் போக வேண்டும், அவன் வாழ வேண்டும். புரிகிறதா? “ஒரு மனிதனை இழுக்கச் சொல்லிவிட்டு இன்னொரு மனிதன் உட்கார்ந்து போகிறானே” என்று படத்தைப் பார்த்துவிட்டு, “உங்கள் தாத்தா காலத்தில் எல்லாம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறார்கள்” என்று சொல்கிறீர்கள். ஆனால் அங்கே நடந்தது யாருக்குத் தெரியும்? அவனும் நடந்து, நானும் ஏன் நடக்க வேண்டும்? ஒருவன் இழுக்கட்டும், நான்கு பேர் உட்கார்ந்து போகட்டும்; அந்த நான்கு பேரும் சேர்ந்து அவனுக்குச் சாப்பாடும் காசும் கொடுத்து வாழ வைக்கிறார்கள். அப்படியும் பார்க்கலாம்தானே?
பழக்கம் காலத்தோடு மாறுகிறதா?
ஆகவே, சமூகம் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பழக்கத்துக்கு, ஒரு வரைமுறைக்கு, ஒரு எல்லைக்கு, ஒரு ஏற்றுக்கொள்ளுதலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அப்படித்தான் வாழ்கிறது. இதில் மாற்றுக் கருத்து உண்டா? ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம்; ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி.
கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: இன்றைக்கு நான் எப்படி வாழ்கிறேன்? இன்றைக்கு இந்தச் சமூகம் எப்படி இருக்கிறது? இப்போது நான் எப்படி வாழ வேண்டும்? அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா, நான் முன்பு எப்படி இருந்தேன் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? என் தாத்தா எப்படி இருந்தால் எனக்கு என்ன? நான் எப்படி இருக்கிறேன்? இதை யார் யோசிக்க வேண்டும்? நான்தான்.
இந்த வாய்ப்பு இந்து மதத்தில் இருக்கிறது. என்னால் இப்போது மாற்றிக்கொள்ள முடியும். யாரோ, எப்போதோ, ஏதோ ஒரு பழக்கத்துக்காகச் செய்த ஒன்றை நான் காலம் காலமாகச் சுமந்துகொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இந்து மதத்தில் இல்லை.
கோயில்கள் எல்லாம் வெறிச்சோடிப் போகின்றன. ஆறு கால பூஜை எல்லாம் இல்லை. எல்லாக் கோயில்களிலும் பூசாரிகள் இல்லை. நிறைய கோயில்கள் பாழடைந்துவிட்டன. ஆமாம்தானே? “இது உன் குலம், இது என் குலம்” என்று சொன்னவன் எங்கே? இடுப்பில் துண்டு கட்டச் சொன்னவன் எங்கே? சமூக ஏற்றத்தாழ்வு பார்த்தவன் எங்கே? புரட்சியாளர்கள் எல்லாம் சேர்ந்து அவர்களைத் தீர்த்துவிட்டோம், மாற்றிவிட்டோம் என்பது இல்லை. அவனே மாறிவிட்டான். இன்றைக்கு அதையே அப்படியே வந்து சொல்வானா ஒருவன்?
ஆனாலும் இன்றைக்கும் ஒருவன் “சைவம் சாப்பிடு, அசைவம் சாப்பிடாதே” என்று பேசிக்கொண்டிருக்கிறான். வெள்ளைச் சட்டை போட்டால்தான் ஆன்மீகவாதி என்று சொல்பவன் இன்றைக்கும் இருக்கிறான். ஒரு விஷயத்தைப் பழக்கமாக முழுவதும் கடத்திக்கொண்டே போகலாம், அதுதான் விசேஷம் என்று சொல்பவன் இப்போதும் இருக்கிறான்.
அடுத்தவருடைய உணவை நீங்கள் இழிவுபடுத்தக் கூடாது. அது அவர்களுடைய உணவு. அவர்கள் அதைச் சாப்பிடலாம், சாப்பிடாமலும் இருக்கலாம். சாப்பிடுபவர்கள் பக்கம் நின்றுகொண்டு நான் நியாயம் பேசவில்லை. சாப்பிடுவது அவர் விருப்பம். அதற்கு உங்களுக்குக் கோபம் வந்தால், அது யாருடைய பிரச்சனை?
குடுமி வைக்கவில்லை என்பதற்காக நீங்கள் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா? பட்டை போடவில்லை என்பதற்காக, நாமம் போடவில்லை என்பதற்காக, பஞ்சகச்சம் கட்டவில்லை என்பதற்காக நீங்கள் இந்து இல்லை என்று சொல்ல முடியுமா? உங்கள் மதம் உங்களுக்கு விசேஷமாக இருக்கலாம்; ஆனால் மனிதனுக்கு அது போதாது. உடையில் சுதந்திரம், உணர்வில் சுதந்திரம், அடையாளங்களை விட்டு வெளியே வருவதற்கான சுதந்திரம் இவையெல்லாம் இருக்கும்போதுதான் நீங்கள் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும்.
சுயம்வரத்திலிருந்து நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்?
“இருபது வயது வரை நான் பெற்றோரின் வசம் இருந்தேன்; இருபது செகண்டிலே நான் உன் வசமாகிவிட்டேன்; உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன்.” இதை யாரால் சொல்ல முடியும்? அந்தக் காலத்தில் ஒரு பெண் இப்படிச் சொல்லியிருக்க முடியாது.
ஒரு ராஜா பத்து, பதினைந்து ராஜாக்களை அழைத்து வந்து உட்கார வைத்து, “இவர்களில் யாராவது ஒருவர் உன்னைக் கட்டிக்கொள்வார்” என்று சொல்லிவிடுவார். கல்யாணம் ஆனவன், ஆகாதவன் எல்லோரும் ராஜா என்பதற்காக வந்து உட்கார்ந்திருப்பார்கள். அந்தப் பெண் பார்க்கும்போது கொஞ்சம் நிறமாக, அழகாக இருப்பவனைத் தேர்ந்தெடுத்துப் போனால், அவனுக்கு அவள் மூன்றாவது மனைவியாகவோ ஐந்தாவது மனைவியாகவோ இருப்பாள். நடந்ததா இல்லையா? சுயம்வரம் நடந்ததா இல்லையா?
இப்போது திருமணத் தளத்தில் பதிவு செய்கிறார்கள், போன் செய்கிறார்கள், அழகாகப் புகைப்படம் எடுத்து அனுப்புகிறார்கள்; நேரில் போய்ப் பார்த்தால் வேறு ஒரு ஆளாக இருக்கிறார்கள். அதுவும் நடக்கிறது. “இப்போது எடுத்த புகைப்படத்தை அனுப்புங்கள்” என்று கேட்கும் நிலைமை வந்திருக்கிறது. இன்றைக்கு எந்த அளவுக்கு மாறியிருக்கிறோம்! சுயம்வரத்தைக் கடந்த சிந்தனை நமக்கு வந்திருக்கிறது. ஆமாம்தானே?
அப்படியானால் காலம் காலமாக ஒரு பழக்கம், ஒரு ஏற்றுக்கொள்ளுதல் வந்துகொண்டே இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்? என்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காலத்துக்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கொள்ள வேண்டும். என் வாழ்க்கையை, என் பழக்கத்தை நான்தான் திருத்திக்கொள்ள வேண்டும். திருத்த வேண்டுமா, வேண்டாமா?
ஏற்றுக்கொண்டது ஏன் போவதில்லை?
“எங்கள் பழக்கத்தில் அது இல்லை; உங்கள் பழக்கம் எப்படி?” என்று கேட்கிறார்கள். “நாங்கள் அப்படி இல்லை” என்கிறார்கள். உணவுக் கடைகளில் கூட, ஒரு நாட்டில் எல்லோரும் வாங்கும் உணவு இன்னொரு நாட்டில் விற்கப்படுவதே இல்லை.
நீங்கள் அப்படிப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள். பழக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டதாக நினைக்கிறீர்கள்; ஆனால் இல்லை. நூறு சதவீதம் உங்களால் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியவில்லை. ஏன்? ஏற்றுக்கொண்டது உள்ளே இருக்கிறது.
இதில் பெரிய விஷயம் என்ன என்றால், என்னை நம்ப வைத்திருக்கிறார்கள்; நான் அதை ஒப்புக்கொண்டிருக்கிறேன். அதைச் சரி என்று ஒப்புக்கொண்டு அப்படியே வாழ்கிறேன்.
“சமூகத்தில் நான்கு பேரோடு என்னால் பேச முடியாதுங்க. போனில் பேசுவேன், குரல் செய்தி அனுப்புவேன்; ஆனால் நேரில் யாரோடும் பேச மாட்டேன்.” யார் சொன்னது? ஏன் பேச முடியாது? நிறைய பேரால் பொது இடத்தில் பேசவே முடிவதில்லை; பேசவே மாட்டார்கள். அவர்களுக்கு என்ன ஆகிவிடுகிறது?
“எங்கள் குடும்பத்தில், எங்கள் அண்ணன் தம்பிகள் யாருமே பெண்களை வெளியே பேச விடமாட்டார்கள். முதலில் அப்பா கண்டித்து வைத்திருந்தார்; வளர்ந்த பிறகு அண்ணன்கள் கண்டித்தார்கள்; இப்போது கணவர் கண்டித்து வைத்திருக்கிறார். என் கணவர் சுதந்திரம் கொடுத்தால் கூட இப்போது என்னால் பேச முடியாது.” ஏன்? “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம் செய்த கோலம்…” இது யாரிடம் இருக்கிறது? பிரச்சனை எங்கே இருக்கிறது?
நாம் நம்மை எந்த மாதிரி பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம்? இன்னொருவர் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க நாம் யார்?
ஒழுக்கம் கெட்டவன் யார்?
ஒவ்வொரு மதமும் என்ன சொல்லிக் கொடுக்கிறது? “இவன் ஏற்புடையவன், இவன் ஏற்புடையவன் அல்ல; இவன் சரி, இவன் சரியில்லை.” எதை வைத்து? மூக்கால் சாப்பிட்டவன் யாராவது உண்டா? அப்படியானால் ஒழுக்கம் கெட்டவன் என்று யாரும் கிடையாது. ஆனால் நீங்கள் ஒழுக்கம் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்.
யார் ஒழுக்கம் கெட்டவர்? குடிக்கிறார்; அவர் ஒழுக்கம் கெட்டவர். சிகரெட் பிடிக்கிறார்; அவர் ஒழுக்கம் கெட்டவர். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் திரும்பிப் பார்க்கிறார், உடனே காதல் கடிதம் எழுதிவிடுகிறார், யாருக்கு வேண்டுமானாலும் தன் தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுக்கிறார்; அவரும் ஒழுக்கம் கெட்டவர்.