பகுதி 1 / 4

புலால் என்றால் என்ன?

சிவயோகி அவர்களின் “புலால் மறுத்தல்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது முதலாவது. மூல உரையைக் காண.

எல்லோரும் மனிதர்களாக, விடுதலை பெற்றவர்களாக, கொண்டாட்டமானவர்களாக மாற வேண்டும். அதுதான் என் நோக்கம். என் வாழ்நாளில் என்னால் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு, மனிதர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் சொல்லிவிட்டுப் போவதுதான் என் வேலை.

இன்றைய தலைப்பை நானே தேர்ந்தெடுத்தேன்: புலால் மறுத்தல். இது திருக்குறள் அதிகாரம் அல்ல. நான் சொல்லும் புலால் மறுத்தல்.

புலால் என்றால் என்ன?

கண், காது, மூக்கு, வாய், தோல்: இவை ஐந்து. தனித்தனியாகச் சொன்னால் புலன். மொத்தமாகச் சொன்னால் அதன் பெயர் புலால்.

“கண் போன போக்கிலே கால் போகலாமா?” என்று கேட்கிறார்கள். இதன் பொருள் என்ன? கண் ஒன்றை அழகு என்று சொல்கிறது. உண்மையில் கண் அழகு என்று சொன்னதா, கண் வழியாகப் பார்த்த மனம் அழகாக இருக்கிறது என்று சொன்னதா? இதுதான் கேள்வி. கண்ணுக்கு அது அழகாக இருந்ததா, மனதுக்கு அழகாக இருந்ததா? கண் வழியாகப் பார்த்தது கண்ணா, மனமா?

மனம் தெளிவாகாதவன் புலன்களுக்கு அடிமையாகி, புலன்களையெல்லாம் முட்டாளாக வைத்திருப்பான். ஒரு முட்டாளுக்குக் கண்ணால் என்ன தெரியும்? அவன் கூர்மையாகப் பார்ப்பானா? “இது எனக்குத் தெரியாது” என்றுதான் சொல்வான்.

புலன்களை மறுக்க வேண்டுமா?

கண் சரியாகத்தான் இருக்கிறது; அதை மறுக்கக் கூடாது. காது சரியாகத்தான் இருக்கிறது; அதை மறுக்கக் கூடாது. “அப்படியானால் புலால் மறுத்தல் என்று ஏன் பேசுகிறீர்கள்?” என்று கேட்பீர்கள். மறுக்கக் கூடாது என்பதுதான் என் பேச்சு.

கண்ணை விழிப்போடு கவனியுங்கள். காட்சி எனக்கு எப்படித் தெரிகிறது? கண்ணைத் திறந்தேன், காட்சி தெரிகிறது. ஏன் தெரிகிறது? நான் அதன் மேல் நாட்டம் வைக்கிறேனா, அது என் மேல் நாட்டம் வைக்கிறதா? நான் பார்ப்பதால் அது எனக்குத் தெரிகிறதா?

புலனை ஒழுங்காக மதித்தால், நான் விரும்பாதபோது என் புலன்கள் எதுவுமே செய்வதில்லை. நான் தூங்கும்போது, எதையுமே நினைக்காதபோது என்ன நடக்கிறது? கண் பார்ப்பதில்லை. காது கேட்பதில்லை. நாக்கும் மூக்கும் அப்படியே. இவையெல்லாம் எப்படி ஓய்வாயின?

மனம் ஓய்வானதால். எந்நேரமும் மனதை ஓய்வாக வைத்திருந்தால் புலன்கள் எப்படி இருக்கும்? ஏன் தூங்காமல் தூங்கக் கூடாது? கண், காது எல்லாவற்றையும் திறந்து வைத்துக்கொண்டு, மனதை அமைதியாக வைத்து, ஏன் சும்மா இருக்கக் கூடாது?

தவம் செய்பவனும் அவம் செய்பவனும்

புலால் மறுத்தலைப் பற்றிப் பேசுவதற்கு முன்பே வள்ளுவன் சொல்லிவிட்டான்:

“தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.”

அவம் செய்கிறவனுக்குத்தான் புலால் மறுத்தல். இந்த உலகத்தில் கோடானுகோடி மக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவனுக்குத்தான் புலாலை மறுக்க வேண்டியிருக்கிறது. தவம் செய்கிறவனுக்குப் புலன்களெல்லாம் அழகான புலன்கள்.

கண், காது, மூக்கு எல்லோருக்கும் ஒன்றுதான்; பார்வையில் ஆளுக்கு ஆள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம். கண் காட்சியைக் காட்டுகிறது, காது சத்தத்தைக் கேட்கிறது. அவை எப்படி ஓய்வெடுப்பது? இந்த வித்தை என்னிடம் இருக்கிறது. நீங்கள் என்னோடு இருக்க, தங்க, பழக இடம் வைத்திருக்கிறேன். இதுவரை பயிற்சி செய்யவில்லை என்றாலும் இப்போதிருந்து செய்யப் பாருங்கள். நான் போன பிறகு புலம்பிப் பயனில்லை.

நான் ஆபத்தானவன், வாழாதவர்களுக்கு. வாழ நினைக்கும், தன்னை மதிக்கும் ஒவ்வொருவருக்கும் நான் விசேஷமானவன். நான் நாகரிகமாகப் பேச மாட்டேன்; உண்மையைப் பேசுவேன். பொய்யை மாற்றி மாற்றிப் பேசலாம்; உண்மையை மாற்ற முடியாது.

என் குருவை நான் விமர்சிக்கலாம்

இந்தச் சமயத்தில் என் குருவை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் இந்தப் புலாலைப் பற்றி, புலன் மறுத்தலைப் பற்றி அவன் போராடியிருக்கிறான், சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறான்.

என்னைப் போல ஓர் அமைப்பை உருவாக்குவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் என்னைப் போலச் சமூகத்தோடு போராட வரவில்லை. அவனுக்கு அவனுடைய நிம்மதி, அவனுடைய மகிழ்ச்சி, அவ்வளவுதான் போல. அது அவன் விஷயம். ஆனால் அவன் எனக்குக் குரு. என் குருவை நான் விமர்சிக்க முடியும்.

நீங்களும் என்னை விமர்சிக்கலாம். சிலர் என்னைப் பற்றி வீடியோ போடுகிறார்கள்; பாராட்டியோ ஏசியோ. எனக்குச் சந்தோஷம்தான். அவர் மனதில் நான் வாழ்ந்திருக்கிறேன். சரியா தவறா என்பது இரண்டாவது.

“இப்படி ஒரு மனிதனைப் பார்த்தது தவறு” என்று ஒருவன் சொன்னால், அவன் என்னிடமே வந்து கேட்கலாமே. அந்த வாய்ப்பைத் திரும்பத் திரும்பக் கொடுத்து வைத்திருக்கிறேன். நீ எதைத் தவறு என்கிறாயோ, அது உனக்கானது, எனக்கானது அல்ல என்று சொல்வேன். அதனால்தான் அவன் வருவதில்லை.

சோப்பும் பெரும்பான்மையும்

கழிவறைக்குப் போய் வந்த பிறகு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்று உனக்குத் தோன்றுகிறது; வெறும் தண்ணீரே போதும் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் தவறு என்று நீ எப்படிச் சொல்ல முடியும்? வெறும் தண்ணீரில் கழுவுபவர்கள் பெரும்பான்மை என்றால், சோப்பு வேண்டும் என்றவனும் “நான் ஏன் ரசாயனம் பயன்படுத்த வேண்டும்?” என்று ஒரு நியாயம் சொல்லித் தண்ணீருக்கு மாறிவிடுவான். சோப்பு போடுபவர்கள் பெரும்பான்மை என்றால், தண்ணீரே போதும் என்றவனும் சோப்பு போடுவான்.

எதை மறுக்கிறோம் என்று தெரிய வேண்டும்

என் குரு போராடிச் சொன்னான்: “புலால் புலால் என்று பேதமை பேசுகிறீர்.” புலால் புலால் என்று பேசுவது பேதைமையாம், முட்டாள்தனமாம்.

முதலில் புலால் என்றால் என்ன என்று எனக்குப் புரிய வேண்டும். புலால் மறுத்தல் என்று ஒருவர் சொன்னால், புலால் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டுதான் மறுக்க வேண்டும். எனக்கு அது என்னவென்றே தெரியவில்லை.

எனக்குக் கிச்சிலிக்காய் முச்சிலி பிடிக்காது. இப்படி நான் சொன்னால் நீங்கள் என்ன புரிந்துகொள்வீர்கள்? நீங்களும் ஞானிகள் ஆகிவிட்டீர்கள் அல்லவா, இங்கே வந்து உங்கள் குருவைப் பார்த்துவிட்டீர்கள். நீங்களும் போய், “எனக்குக் கிச்சிலிக்காய் முச்சிலி பிடிக்காது, ஏனென்றால் என் குருவுக்கும் அது பிடிக்காது” என்பீர்கள். நீங்களாகவே முடிவு செய்துவிட்டீர்கள். கிச்சிலிக்காய் முச்சிலி என்றால் என்ன? புலால் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

வள்ளுவன் சொன்ன ஊன் பெருக்கல்

வள்ளுவத்தைப் படித்துவிட்டுப் புலாலைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் வள்ளுவர் என் குருவின் முன்னால் வந்திருந்தால், என் குரு அவரைப் பேதை என்று சொல்லியிருக்க மாட்டான். ஏனென்றால் வள்ளுவனிடம் நல்ல பதில் இருக்கிறது:

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.”

எதற்காகச் சாப்பிடக் கூடாது என்கிறான்? ஊனைப் பெருக்குவதற்காக. சாப்பிட்டால் உடம்பு வளரத்தான் செய்யும். ஆனால் நான் உடம்பு வளர்வதற்காகச் சாப்பிடவில்லை, பசிக்காகச் சாப்பிடுகிறேன். ஊன் வளர வேண்டும் என்று நினைத்துச் சாப்பிட்டால், சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்; உடல் பருமன் வருகிறது. வள்ளுவன் சொல்வது இதுதான்: சாப்பிடுவதை ஒரு வேலையாக வைத்துக்கொள்ளாதே. பசிக்குச் சாப்பிடு. வள்ளுவன் தெளிவாக இருக்கிறான்; மிக அழகாகச் சொல்லி வைத்திருக்கிறான்.

திருப்புகழ் பாடினால் வாய் மணக்குமா?

திருமந்திரமும் புலால் மறுத்தலைப் பேசியிருக்கிறது. “திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்பார்கள். அப்படியானால் குளியலறையில் பேஸ்ட், பிரஷ் எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டுத் தினமும் காலையில் நான்கு திருப்புகழ் பாடலாம். வாய் நாறாது என்று மட்டுமல்ல, மணக்கும் என்கிறார்கள். ஆனால் அவர்களும் பேஸ்ட், பிரஷ் வாங்கத்தானே செய்கிறார்கள்?

எனக்கு இருபத்தேழு இருபத்தெட்டு வயதிருக்கும்போது பட்டிமன்றங்களுக்கு ஆர்வமாகப் போவேன். அங்கே ஒருவர் திருப்புகழைப் பற்றிப் பேசுவார். அவருக்கு வாய் நாற்றம். நல்ல மனிதர், அது வேறு விஷயம். நல்ல மனிதர் என்றால் வாய் நாறாதா?

கிச்சிலிக்காய் முச்சிலி என்றால் என்ன?

அப்படியானால் புலால் என்றால் என்ன என்று நான் சொல்ல வேண்டும். நீங்களும் “ஐயா, கிச்சிலிக்காய் முச்சிலி என்றால் என்ன?” என்று கேட்க வேண்டும். கேட்காவிட்டால், அடுத்த வாரம் “எங்கள் ஐயாவுக்குக் கிச்சிலிக்காய் முச்சிலி பிடிக்காது” என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்.

அது ஒன்றுமில்லை, வெள்ளரிக்காய். அதற்கு நான் வைத்துக்கொண்ட பெயர்தான் கிச்சிலிக்காய் முச்சிலி. எனக்கு அது ஜீரணம் ஆகாது, பிடிக்காது. உங்களுக்குப் பிடிக்கலாம். எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உனக்கும் பிடிக்கக் கூடாதா?

கவனிப்பதும் உன்னித்துப் பார்ப்பதும்

புலாலோடு ஒட்டி உறவாடுபவனைப் புலால் உண்ணி என்கிறார்கள். உண்ணுதல் என்ற சொல்லோடு நினைவுக்கு வரும் இன்னொரு சொல் இருக்கிறது: “உன்னிப்பாகப் பார்” என்று சொல்வார்கள். உன்னிப்பாகப் பார்ப்பது என்றால் என்ன? கூர்மையாக, கத்தியைப் போல, பென்சில் முனையைப் போல. கண்ணைத் தீட்டிக்கொண்டு பார்ப்பது. பார்ப்பது ஒன்று; உன்னிப்பாகப் பார்ப்பது இன்னொன்று.

ஒரு முன்முடிவோடு ஒன்றைப் பார்த்தால் அதன் பெயர் கவனமாகப் பார்ப்பது. “அங்கே அது இருக்கிறதா?” என்று பார்த்தால் அது கவனித்தல். “அங்கே என்ன இருக்கிறது?” என்று பார்த்தால் அது உன்னித்தல். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒருவன் கத்தி வைத்திருக்கிறானா, குத்திவிடுவானா என்று பார்ப்பது கவனம். அவன் எதை வைத்திருக்கிறானோ இல்லையோ, கூர்மையாக, தெளிவாகப் பார்ப்பது உன்னித்தல்.

புலன்கள் எப்படி வேலை செய்கின்றன?

நாக்கில் வெல்லத்தை வைத்தால், நாக்கில் படுவதால் ருசி தெரிகிறது. சத்தம் கேட்கிறது என்றால் உள்ளே இருக்கும் செவிப்பறை அசைகிறது; அந்த அசைவு ஒலியாக மாறி உள்ளே போய்ப் புரிகிறது. காட்சி தெரிகிறது என்றால், பிம்பம் கண்ணின் மேல் விழுகிறது. மூக்கில் வாசனை தெரிகிறதே, அது எங்கே பட்டால் தெரிகிறது?

யாராவது சொல்லிக்கொடுத்தால் மட்டும்தான் தெரிந்துகொள்கிறோம்; “தேவையில்லை” என்று நினைக்கிறோம். ஆனால் தேவை இருக்கிறது. கண்ணை மூடினால் காட்சி மறைகிறது, காதை மூடினால் சத்தம் போகிறது. மூக்கில் வாசனை எங்கே படுகிறது என்று தெரிந்தால் என்ன செய்யலாம்? மூக்கின் பக்கவாட்டில் பட்டால் வாசனை தெரிகிறது என்றால், அதன் மேல் ஒரு பசையைத் தடவிவிடலாமா இல்லையா?

“அறிவியல் சொல்லியிருக்கிறதே.” அறிவியல் சொல்லியிருக்கிறதா? அறிவியல் சொல்லவில்லை என்றால் மூக்கில் வாசனை தெரியாதா? வாசனை எங்கே பட்டால் வருகிறது? வாசனை மூக்கில் இருக்கிறதா, அங்கே இருக்கிறதா?

வாசனை எங்கே இருக்கிறது?

“இப்படி ஏடாகூடமான கேள்வி கேட்கிறாரே. நாங்கள் ஏதோ முகர்ந்தோம், போனோம், வந்தோம் என்று நிம்மதியாக இருந்தோம்” என்பீர்கள். தியான மையங்களில் “அது மேலே ஏறுகிறது, இழுக்கிறது, சுற்றுகிறது” என்று சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டீர்கள்; இந்தக் கேள்வியை யாராவது கேட்கச் சொன்னார்களா?

வாசனை எங்கே இருக்கிறது? “மலரில் இருக்கிறது.” மலரில் இருக்கும் வாசனை என் மூக்குக்கு எப்படி வந்தது? “அருகில் வைத்தால் வருகிறது.” அருகில் வைத்தால் வந்தது என்றால், அதற்குக் கால், கை இருக்கிறதா? இன்னும் மோசமாகக் கேட்கிறேன்: நடந்து வந்ததா, பறந்து வந்ததா?

“வெட்டவெளியில் வருகிறது.” வெட்டவெளியில் வராது. காற்று இருப்பதால் வருகிறது. என் மூச்சுக்காற்று அதன் மேல் பட்டு, திரும்ப நான் உள்ளே இழுக்கும்போது வாசனை எனக்கு வருகிறது. மூச்சை இந்தப் பக்கம் விட்டுவிட்டு இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டால் அந்த வாசனை எனக்கு வராது. விட்ட காற்றை அங்கிருந்து கொஞ்சம் திரும்ப இழுத்தால்தான் எனக்கு வருகிறது.

உங்கள் மூக்கைத் தடவிவிட்டு முகர்ந்து பாருங்கள்; ஒரு வாசனை வரும். எப்போதாவது செய்து பார்த்திருக்கிறீர்களா? குளிக்காமல் இருக்கும்போது காதை நன்றாகத் தேய்த்துவிட்டு முகர்ந்து பாருங்கள். இப்படியெல்லாம் செய்து பாருங்கள்.