பகுதி 3 / 4

கண் என்ன பாவம் செய்தது?

சிவயோகி அவர்களின் “புலால் மறுத்தல்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது மூன்றாவது. மூல உரையைக் காண.

தவறு புலனிலா, மனதிலா?

கணக்கைச் சரியாகப் போடவில்லை; வாழ்க்கையையும் சரியாகப் போடவில்லை. இதில் கண், காது, மூக்கு, வாய் என்ன தவறு செய்தன? தவறு செய்தது மனம்தானே? அப்படியிருக்க, புலனைத் தவறு என்கிறீர்கள்.

கண், காது, மூக்கு எல்லாம் கருவிகள். கருவியை யார் வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் போதாதா? கத்தி வெங்காயம் வெட்டவும் செய்யும், கைவிரலை வெட்டவும் செய்யும். கத்தி தவறா? “கத்தியே வைத்துக்கொள்ளாதே” என்பவன் முட்டாள்தானே? அதுதான் பேதைமை. துப்பாக்கி கூட மனிதனைப் பார்த்துச் சுடும்போதுதான் தவறு. அதைக் கண்டுபிடித்தது காட்டு விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்கு. இப்போது “காட்டு விலங்கு எதையும் கொல்லாதே” என்று சொல்லிவிட்டார்கள்.

காட்டுப் பன்றியும் மின்வேலியும்

இங்கே விவசாயமே செய்ய முடியவில்லை. காட்டுப் பன்றிகள் வயலில் ஆட்டம் போட்டுவிட்டுப் போகின்றன.

அதனால்தான் கடைசியில் விவசாயி மின்வேலி வைக்கிறான். பன்றி சாவதில்லை; மனிதன் சாகிறான். பாவம், அவன் நெல் போட்டு, இரவில் காவலுக்குப் போகிறான். அசந்த நேரத்தில் யாரோ ஒருவன் அதில் மாட்டிச் செத்துவிடுகிறான். பன்றியைக் கொல்ல வைத்த மின்சாரம் மனிதனைக் கொல்கிறது. பன்றியைக் கொல்லக் கூடாது என்று சொன்னதால்தான் இதெல்லாம் நடக்கிறது. மனிதன் நன்றாக வாழ்வதற்கு நாம் எந்த வழியும் செய்யவில்லை.

கண் என்ன பாவம் செய்தது?

புலனைத் தவறு என்கிறார்களே, கண் என்ன பாவம் செய்தது? காட்சியைக் காட்டுகிறது, அவ்வளவுதானே? காது, நாக்கு, மூக்கு, தோல் என்ன தவறு செய்தன?

நான் கறி மீன் பக்கமே போகவில்லை; புலன்களைப் பற்றித்தான் பேசுகிறேன். ஒருவன் தான் கறி மீன் சாப்பிடுவதால், நானும் அதைச் சாப்பிடச் சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்கிறான். அந்த அர்த்தத்தை மறந்துவிடுங்கள். நான் உங்களைக் கறி சாப்பிடச் சொல்லவில்லை. இதுவரை சாப்பிடாதவர் திடீரென்று சாப்பிட்டால் ஜீரணமாகாது. நீங்கள் டானிக் சாப்பிடுங்கள், மாத்திரை சாப்பிடுங்கள், காபி குடியுங்கள்.

சர்க்கரை எப்படி வெள்ளையாகிறது?

காபியில் போடும் சர்க்கரை தானாக வெள்ளையானது என்று நினைக்காதீர்கள். கரும்புச் சாறு வெள்ளையாக இருக்காது. அதில் போட வேண்டியதையெல்லாம் போட்டால்தான் வெள்ளையாக, கட்டம் கட்டமாக ஆகிறது. அதில் எலும்பும் சேர்கிறது. எலும்பு பொறுக்குவதற்கென்றே ஏழைகள் பையை மாட்டிக்கொண்டு வருவார்கள்; செத்த நாய், சுடுகாட்டில் கிடப்பது என்று எல்லா எலும்பையும் எடுத்துப் போவார்கள். அவர்களுக்குத் தேவை எலும்புதானே? நீங்கள் சாப்பிடும் சர்க்கரையில் எத்தனை மனித எலும்பு போயிருக்கிறதோ எனக்குத் தெரியாது.

தெரியவில்லை என்றால் அது தவறு இல்லை. தெரியாமல் எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுவிடுகிறீர்கள். தெரிந்ததுதான் பிரச்சனை. மீன் என்று தெரிந்தால் கஷ்டம்: “அது கடலில் வாழ்ந்தது, அதற்கு ஒரு மனம் இருக்கிறது, ஆன்மா இருக்கிறது.”

“நெல்லைச் சாப்பிட்டால் நெல் மாதிரி இருப்பீர்கள், மாட்டைச் சாப்பிட்டால் மாடு மாதிரி ஆவீர்கள்” என்று பேசுகிறார்கள். அப்படியானால் மனிதனைச் சாப்பிட்டால் மனிதன் மாதிரி ஆகலாமா? எதைச் சாப்பிட்டாலும் உள்ளே போவது வைட்டமினும் தாதுக்களும்தான்; மனிதனோ, ஆடோ, மாடோ, கோழியோ உள்ளே போவதில்லை.

கண் சரியாக இருக்கிறது, அதை மறுக்கக் கூடாது. காது சரியாக இருக்கிறது, அதை மறுக்கக் கூடாது. “அப்படியானால் புலால் மறுத்தல் என்று பேசினீர்களே?” மறுக்கக் கூடாது என்பதுதான் என் பேச்சு.

கண்ணிலிருந்து போகும் வீச்சு

காட்சி எனக்கு எப்படித் தெரிகிறது? நான் அதன் மேல் நாட்டம் வைக்கிறேனா, அது என் மேல் நாட்டம் வைக்கிறதா? நான் பார்ப்பதால்தான் அது எனக்குத் தெரிகிறது.

உங்களை யாராவது பார்த்தால் அந்தப் பக்கம் திரும்புவீர்கள். மனிதன் கூட இல்லை; வீட்டு நாயோ பூனையோ உங்களைப் பார்த்தால், உங்களை அறியாமலே திரும்புவீர்கள். கண்ணிலிருந்து ஒரு வீச்சு போய் உங்கள் மேல் விழுகிறது. பின்னாலிருந்து ஒருவரைப் பார்த்துக்கொண்டே இருங்கள்; சொறிந்துகொள்வார்கள். இன்னும் நெடுநேரம் பாருங்கள், திரும்பிப் பார்ப்பார்கள்.

“ஏய்” என்றால் யார் திரும்புவார்?

கூப்பிடும்போது சத்தம் காதில் விழுவது மட்டும் இல்லை; அவரை நோக்கி அதைப் பாய்ச்சுகிறீர்கள். பெயர் சொன்னால்தான் கணவன் திரும்புவான் என்று நினைக்கிறீர்கள். கூட்டத்தில் ஒரு மனைவி “ஏய்” என்றால் யார் திரும்புவார்? கணவன்தான்.

வீட்டில் அம்மா, மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இருப்பார்கள். ஒருவன் “சனியனே” என்று திட்டுகிறான். யாருக்குக் கோபம் வரும்? அவன் யாரைத் திட்டுகிறானோ அவருக்கு மட்டும். அந்தச் சொல் யாருக்குப் போகிறதோ அவருக்குத்தான் கேட்கிறது.

அப்படியானால் புலன் எப்படி இருக்கிறது? மிகக் கூர்மையாக இருக்கிறது. அதை மறுத்துவிட்டால் மோசமாகிவிடுவாய். மறுக்கச் சொல்லும் பேச்சின் மொத்தப் பொருள் இதுதான்: நீ ஞானத்தின் பக்கம் திரும்பக் கூடாது, நிம்மதியாக வாழக் கூடாது, சந்தோஷமாக இருக்கக் கூடாது.

நன்றாக வாழ்வதைப் பார்த்தால் ஏன் பிடிக்கவில்லை?

உங்களுக்கு நன்றாக வாழ்வதே பிடிக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் நன்றாக வாழவில்லை. நீங்கள் என்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னைப் பார்த்தால் பிடிக்கவில்லை என்றால், உண்மையில் உனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. உன்னைப் பிடித்திருந்தால், “ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும்” என்று தோன்றும்.

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்.” வாழ்ந்துவிட்டுப் போ. அப்புறம் ஏன் என்னிடம் வந்து கஷ்டப்படுகிறாய்?

அரவணைப்புக்காகச் சோக முகம்

உனக்கு வேண்டியது என்ன? யாராவது மடியில் கிடத்திக்கொள்ள வேண்டும், கண்ணைத் துடைக்க வேண்டும். “நீ ஆறுதல் சொல்வதாக இருந்தால், நான் அழுதுகொண்டே இருப்பேன்.” உன்னிடமிருந்து எனக்கு ஒரு அரவணைப்பு தேவை; அதற்காகச் சோகமாக முகத்தை வைத்துக்கொள்கிறேன். அப்படியானால் நீ இன்னும் வளரவே இல்லை.

ஒரு அம்மா என்னிடம் சொன்னார்: “என் பெண் ‘என் கூட வந்து படுக்காதே’ என்று கடுமையாகத் திட்டுகிறாள்.” அம்மா, அவள் தனியாக இருக்க விரும்புகிறாள்; நீங்கள் போய்க் கூடப் படுத்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? இருபத்தாறு வயதுப் பையனிடம் போனால் “வா” என்பானா?

யாராவது பேசினால் என்ன பேசுகிறார்கள் என்று மட்டும் கவனிக்கிறோம்; ஏன் பேசுகிறார்கள் என்று கவனிக்கத் தெரியவில்லை.

பேசுபவரைப் பார்த்து ஏமாறுவது

யாராவது பேசினால், பேசுவது யார் என்று பார்த்து, “அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” என்று நம்பிவிடுகிறோம். “இவர் ஜிம்முக்குப் போகிறார்; இவரிடம் போனால் நம் உடம்பும் இப்படி ஆகும்.” பத்து வருடம் முக்குகிறோம்; வேறு மாதிரி ஆகிறது. கேட்டால், “பயிற்சியைச் சரியாகச் செய்யவில்லை” என்பார். உடலியல்படி அது சாத்தியமே இல்லை. அவருக்கு வியாபாரம் ஆக வேண்டும். அவரைப் பார்த்து நாம் ஏன் ஏமாற வேண்டும்?

வள்ளுவன் ஏன் புலனை மறுக்கச் சொன்னான்?

மனம் பயங்கரமான தந்திரங்கள் செய்கிறது. மனதைச் சரிசெய்ய வேண்டிய இடத்தில், புலன்களை மறுக்கச் சொல்வது நியாயமா?

வள்ளுவன் புலனை மறுக்கச் சொன்னதற்குக் காரணம், முட்டாள்களின் மனம் அந்த அளவுக்கு முட்டாள்தனமாகிவிட்டது; அதனால் மொத்தமும் வீண் என்று அவன் முடிவு செய்துவிட்டான். வள்ளுவன் தியானியோ யோகியோ இல்லை. ஒருவேளை அவன் கடவுளைப் புரிந்திருக்கலாம்; கடவுள் எப்படி இருக்கும் என்று யாராவது சொல்லியிருக்கலாம். அவன் சொல்ல வந்ததே வேறு: உன் முட்டாள்தனமான மனம் புலன்களை அடிமையாக்கி வைத்திருக்கிறது, அதனால் “அதை மறு” என்றான்.

நான் புலன்களை மறுத்தால் என்ன ஆகும்? “வள்ளுவர் சொல்லிவிட்டார், நான் யாரையும் பார்ப்பதில்லை, யாரிடமும் பேசுவதில்லை” என்றால் உங்கள் நிலைமை என்ன? நீங்கள் கேள்வி கேட்டால், நான் மண் மாதிரி உட்கார்ந்திருப்பேன். எப்போதோ ஒருவன் வந்து உங்களிடம் பேசுகிறான்; அவனும் பேசக் கூடாது என்றால்? நான் பேசுவது நல்லதா கெட்டதா என்று நீங்கள் யோசிக்கவில்லை என்றால் அது உங்கள் பிரச்சனை. ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியாது.

சான்றோன் யார்?

சான்றோன் எப்போதும் அமைதியாக இருப்பவன் இல்லை. சான்று என்றால் முன்னுதாரணம். சான்றோன் என்றால் வயதானவன், தாடி வைத்தவன், தலைப்பாகை கட்டிச் சிரித்துக்கொண்டிருப்பவன் என்று நினைக்கிறீர்கள். முன்மாதிரியாக இருப்பவனுக்குத்தான் சான்றோன் என்று பெயர். “சான்றோன் எனக் கேட்ட தாய்” என்றால், மகனுக்கு வயதாகும் வரை காத்திருந்தாள் என்றா அர்த்தம்?

எவனாவது ஏதாவது உளறுவான்; நீங்கள் “ஆமாம், ஆமாம்” என்று தலையாட்டுவீர்கள். நானும் ஜிப்பா போட்டுக் குங்குமம் வைத்துக்கொண்டு சொல்ல வேண்டும்: “சைவம் நல்லது. யோகிக்கு அழகு ஒரு வேளை சாப்பிடுவது.” “எந்த வேளை?” “நல்ல பகலில்.” “மழைக்காலத்தில் நல்ல பகலே வராதே?”

அதனால்தான் அவனிடம் யாரும் கேள்வி கேட்பதில்லை. அவன் புத்தகத்தை எழுதி வைத்துவிட்டான்; நீங்களே போய் வாங்கி வந்தீர்கள். சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது என்றால் இதுதான்.

சஷ்டியை நோக்க

“சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும்…” அந்தப் பாட்டுக்கு அர்த்தம் கேட்டீர்களா? சஷ்டி என்றால் ஆறாவது நாள்: பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி. இன்று நவீனமாக ஆங்கிலம் பேசுவது போல, அன்று வடமொழி பேசினார்கள். “சஷ்டியை நோக்க” என்றால் எண் ஆறைப் போட்டுப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதானா?

சரம் என்றால் சுவாசம், வனம் என்றால் காடு. சரவணம் என்றால் காற்று இருக்கும் காடு. அதைப் பணிந்திருப்பவனுக்கு உதவும். பாட்டு எழுதியவன் தெளிவாக இருக்கிறான்; மிக அற்புதமாக எழுதியிருக்கிறான்.

மனப்பாடம் செய்தால் புரிந்ததா?

கண்ணுக்குப் புரியவில்லை, காதுக்குப் புரியவில்லை. மனம் புரிந்தது போலவே பாடிக்கொண்டிருக்கிறது. உனக்குப் புரிந்ததா? யாரிடமாவது கேட்டாயா? தெரியாது என்று ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என்கிறாய். மனப்பாடம் செய்து பாடினால் தெரிந்துவிட்டது என்று அர்த்தமா?

கடவுளை எப்படிக் கும்பிட வேண்டும்?

ஏன் சாமி கும்பிடுகிறாய்? “எல்லோரும் கும்பிடுகிறார்கள், நாமும் கும்பிடுவோம்.” “உன்னை எப்படிக் கும்பிட வேண்டும்?” என்று அவரிடம் கேட்டாயா? ஒருவன் காலைத் தூக்கி வணக்கம் வைத்தால் வேண்டாம் என்பாரா? “அவர் நாகரிகமானவர்” என்பீர்கள். அவருக்குக் கால், கை, கண் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். ஒன்றுமே இல்லாதவருக்கு எப்படிக் கும்பிட்டால் என்ன? “அறிவே இல்லையா?” என்று கோபிப்பாரா? அறிவு இருந்திருந்தால் உன்னையும் என்னையும் படைத்திருப்பாரா?

பாடியவன் தெளிவாகச் சொல்லிவிட்டான்: “பித்தா.” எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறான்! கடவுளைப் போல ஒரு பித்தன் இந்த உலகத்திலேயே இல்லை. “பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா.” “அருளாளா” என்று முதலில் சொல்லிவிட்டுப் “பித்தா” என்று கடைசியில் சொல்லியிருக்கலாமே? ஏன் எடுத்த உடனே “பித்தா” என்றான்? அவனுக்குப் புரிந்ததும் முதலில் வந்தது அதுதான்.

புலன்கள் எவ்வளவு அற்புதம்!

முருகனிடம் “ஏன் என் கண்ணுக்குத் தெரிய மாட்டேன் என்கிறாய்?” என்று கேட்டால், “அதோ முருகர், அதோ தெரிகிறார்” என்கிறார்கள். ஒப்புக்கொள்வாயா?

உன் புலன்கள் எவ்வளவு அற்புதம்! கண்கள் காட்சியைக் காட்டவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன்? கண்கள் இல்லையென்றால் இந்த உலகத்தைப் பார்த்திருக்க முடியுமா? ஏதாவது புரிந்திருக்குமா? இப்போது அதைத் தவறு என்கிறான் ஒருவன். ஒப்புக்கொள்ளலாமா? நான் தவறா, கண் தவறா?

நான் என்ற மனம் தவறாகப் போய்விட்டு, கண்ணைத் தவறு என்கிறது, காதைத் தவறு என்கிறது; “அதை மறுத்துவிடு” என்கிறது. நான் சொல்கிறேன்: உன் கண்ணை, காதை, மூக்கை எல்லாம் நீ நேசிக்க வேண்டும். உண்மையைக் காட்டக்கூடிய என் கண்கள் இதுவரை பொய்களைக் காட்டியிருக்கின்றன என்று புரிய வேண்டும்.