பகுதி 2 / 4

புலன்கள் கொடுத்தது எதற்கு?

சிவயோகி அவர்களின் “புலால் மறுத்தல்” உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளில் இது இரண்டாவது. மூல உரையைக் காண.

காற்றை இழுத்தால்தான் வாசனை

ஒன்றை மோந்து பார்ப்பது என்றால் என்ன செய்வீர்கள்? மூக்கின் அருகில் வைத்துக் காற்றை இழுப்பீர்கள். இழுத்தால் வாசனை வரும், மூக்கை மூடினால் வராது. காற்றில் கலந்து வந்தால்தான் வாசனை. சுவாசம் எப்போதும் உள்ளே போய் வெளியே வந்துகொண்டிருப்பதால், வாசனைக்குத் தனி வழி வைக்கவில்லை; காற்றோடு சேர்த்தே கொண்டுவருகிறான்.

நாற்றம் அடித்தால் மூக்கை மூடுகிறீர்கள், முகத்தைத் திருப்புகிறீர்கள், கைக்குட்டையை வைக்கிறீர்கள். தெரிந்ததால்தானே இதெல்லாம் செய்தீர்கள்? ஆனால் கேட்டால் “தெரியாது” என்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும்; தெரியும் என்றே தெரியாது. இதுதான் பிரச்சனை.

புலால் என்றால் ஐந்து புலன்கள்

கண், காது, மூக்கு, வாய், தோல்: தனித்தனியாகச் சொன்னால் புலன்; மொத்தமாகச் சொன்னால் புலால். “கண் போன போக்கிலே கால் போகலாமா?” என்பதன் அர்த்தம் என்ன?

கண் “அழகு” என்கிறது. கண் அழகு என்று சொன்னதா, கண் வழியாகப் பார்த்த மனம் சொன்னதா? கண் வழியாகப் பார்த்தது மனம். அழகாக இருந்தது மனதுக்கு. பாட்டின் இனிமையும், ருசியும், மணமும் அப்படியே: காதுக்கோ நாக்குக்கோ மூக்குக்கோ அல்ல, மனதுக்கு.

மூக்குக்கு மட்டும் நேரடியாகவே பெயர் வைத்துவிட்டான். மனமே வாசனையை உணர்கிறது; அதனால் அது “மணம்”.

மூன்று சுழி, இரண்டு சுழி

பவணந்தி முனிவர் என்று ஒருவர் வந்து, மூன்று சுழி “ண”, இரண்டு சுழி “ன” என்று பிரித்து நம்மை ஏமாற்றிவிட்டார். பேசும்போது மணம், மனம் இரண்டும் கேட்பவருக்கு ஒன்று போலத்தான் கேட்கும்; “கல்”, “கள்” போல. இடத்தைப் பொறுத்துத்தான் பொருள் புரிகிறது: “கள் குடித்தேன்” என்றால் அது திடப்பொருள் இல்லை; “கல் மேல் உட்கார்ந்தேன்” என்றால் தண்ணீர் மேல் இல்லை. எழுத்துகளை மாற்றிக் குழப்பிவிட்டார்கள். ஆனால் மூக்கு செய்வது நேரடியானது; அதனால் நேரடியாகவே “மணம்” என்று பெயர்.

புலன்களை ஆள்வது மனம்

புலால் என்றால் எல்லாம் சேர்ந்தது. ஏன் சேர்த்துச் சொல்ல வேண்டும்? கண் வழியாகப் பார்ப்பதும் மனம், காது வழியாகக் கேட்பதும் மனம், மூக்கு வழியாக வாசனையையும் நாக்கு வழியாக ருசியையும் தோல் வழியாகத் தொடுதலையும் உணர்வதும் மனம். மனம்தான் இந்தப் புலன்களை எல்லாம் ஆள்கிறது.

அழகு என்று சொல்லிக் கொடுத்தது

நான் எதை அழகு என்று சொன்னேன்? எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்: வெள்ளையாக, சிவந்த தோலோடு இருந்தால் அழகு. உங்கள் அம்மா அழகாக இல்லை என்று சொல்வீர்களா? உங்களுக்கு அவர் எப்படி அழகாகத் தெரிந்தார்? பிறக்கும்போதே இந்த அறிவோடு பிறந்திருந்தால், அம்மாவையே ஏற்றுக்கொண்டிருக்க மாட்டீர்கள்.

வளர்ந்த பிறகு “அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது, அப்பா கிராமத்து ஆள்” என்கிறீர்கள். அப்பா ரிக்‌ஷா ஓட்டுபவர் என்றால் “எங்கள் வீட்டில் வேலை செய்பவர்” என்பவர்களும் உண்டு. ஏன்? எதைப் போதிக்கிறார்களோ அதுவாகவே மாறி, அதையே கண் வழியாகப் பார்க்கிறான்; மீதியைப் பார்க்கவே இல்லை. காட்சியைக் காட்சியாக மட்டும் பார்க்க வேண்டும், படிக்கக் கூடாது. எனக்குப் படிக்கத் தெரிந்ததால் காட்சியாகப் பார்க்க முடியவில்லை.

படிக்கத் தெரிய வேண்டுமா, கண் தெரிய வேண்டுமா?

என் செய்திகளை ஒருவர் இந்தியில் மொழிபெயர்த்து விளக்கக் குறிப்பில் போடுகிறார். மேலே கோடு போட்டு, ஜாங்கிரியைப் பிழிந்தது போல வட்டம் வட்டமாக இருக்கிறது. அந்த மொழி தெரிந்தவருக்கு அது ஒரு ஒலியை எழுப்பும்; நமக்கு எழுப்பாது. அதனால் காட்சியில் பிழையா?

படிக்கத் தெரிய வேண்டுமா, கண் தெரிய வேண்டுமா? படிக்கத் தெரியவில்லை என்றால் கண் வீணா? வள்ளுவர் சொல்கிறார்:

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

இந்தி படித்தால் கற்றோரா? கற்றோர் என்றால் யார்?

புலால் என்றால் கறி என்று சொல்லிக் கொடுத்தான்

புலால் என்றபோது எனக்குப் புரியவே இல்லை. ஒருவன் “ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழி, இதுதான் புலால்” என்றுவிட்டான்.

கிச்சிலிக்காய் என்ற சொல்லை நான் எங்கிருந்து எடுத்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்; அதற்கு எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. உனக்கோ ஒருவன் காரணத்தையே சொல்லிக் கொடுத்துவிட்டான்: புலால் என்றால் கறி. இப்போது எந்தப் பாட்டைப் படித்தாலும் அதையே பொருத்துகிறாய்.

புலால் மறுத்தல் என்றால் எதை மறுத்தார்? ஊன், புலால் என்று ஏன் இரண்டையும் சொல்கிறார்? “ஊன், புலால், நரம்பு” என்று ஒருவர் சொல்கிறார். திருமந்திரத்திலும் திருவாசகத்திலும் புலால் வருகிறது; “புலையர்” என்றும் வருகிறது.

முன்னே பின்னே தெரியாதவர்

மனம் தெளிவாகாதவன் புலன்களுக்கு அடிமையாகி, அவற்றை முட்டாளாக வைத்து நிற்பான். கண் தெரிகிறது, பார்க்கிறான்; ஆனாலும் “எனக்குத் தெரியாது” என்பான்.

“அவரை உனக்கு முன்னே பின்னே தெரியுமா?” என்று கேட்டால், “முன்னால் போய்ப் பார்த்தால் முன்னே தெரியும், பின்னால் போய்ப் பார்த்தால் பின்னே தெரியும்” என்பேன். தெரியாதவர் குருடனுக்குத்தான் இருப்பார். எனக்குக் கண் தெரியும்போது எனக்குத் தெரியாதவர் யார்?

“அவர் பேசுவது புரியாது” என்கிறீர்கள். சூழ்நிலையைப் பார்த்தால் புரியாதா? அடர்ந்த பாலைவனத்தில் ஒருவர் ஏதோ ஒரு மொழியில் கேட்கிறார். என் கையில் தண்ணீர் டப்பா இருக்கிறது. அவர் என்ன கேட்கிறார் என்று புரிய மொழி தெரிய வேண்டுமா?

“இருபது வயது வரை பெற்றோரின் வசம் இருந்தேன்; இருபது நொடியினிலே உன் வசமாகிவிட்டேன்” என்கிறார்கள். அது மொழியாலா நடந்தது? “பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?” விலங்குகள் மொழி இல்லாமலே பரிமாறிக்கொள்கின்றன.

நாய் பேசிய மொழி

ஒரு காணொளி. ஒரு குழந்தை பொம்மைத் துப்பாக்கியால் ஒரு நாயைச் சுடுகிறது; அது விழுகிறது. இன்னொன்றைச் சுடுகிறது; அதுவும் விழுகிறது. மூன்றாவதும் விழுகிறது. அடுத்த நாய் மட்டும் விழவில்லை. அப்போது இன்னொரு நாய் அதை ஒரு தட்டுத் தட்டுகிறது. குழந்தை மறுபடி சுடுகிறது; இப்போது அதுவும் விழுகிறது. ஒரே சிரிப்பு. அந்த நாய் என்ன மொழி பேசியது?

தெரியாத மொழியிலும் சந்தோஷமா, துக்கமா, கோபமா என்று தெரிகிறது. சிரித்துக்கொண்டே திட்டினால் நீ கோபப்பட மாட்டாய். இது புரிந்தால்தான் வாழ முடியும். அப்போதுதான் “நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே” என்று பாட முடியும்.

இப்போது புலன்கள் மனதை அடிமையாக்கி வைத்திருக்கின்றன. விசேஷமான கண்களை, உனக்கு ஏற்கெனவே தெரிந்ததையே தேடவும் தடவவும் வைத்திருக்கிறாய்.

சுவை ஆறுதானா?

நாக்கு உணர்வது ஆறே சுவைதானா? கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், தேன் எல்லாம் இனிப்பு. எல்லாம் ஒன்று என்றால், கண்ணைக் கட்டிக்கொண்டு நக்கினாலும் இது தேன், இது வெல்லம், இது கற்கண்டு, இது பனைவெல்லம் என்று எப்படிப் பிரித்துச் சொல்கிறாய்? அப்படியானால் இனிப்பு ஒன்று இல்லை.

புலால் புலால் என்று பேசுவது பேதைமை என்று என் குரு ஒரே வரியில் எல்லோரையும் அடித்துவிட்டுப் போய்விட்டார்.

ஒரு இனிப்புக்கே இத்தனை வகை. காய்ந்த மிளகாயின் காரமும், பச்சை மிளகாயின் காரமும், மிளகைக் கடித்த காரமும் ஒன்றா? ஒவ்வொன்றையும் எப்படித் தனித்தனியாகப் பிரித்தீர்கள்? எங்கே ஏமாந்தீர்கள்? “யார்தான் என் போல் ஏமாந்த சோணகிரி” என்று பாட வேண்டியதுதான்.

புலன்கள் கொடுத்தது எதற்கு?

நான் ஏற்கெனவே ஏமாந்துவிட்டவன். என் புலன்களோ சரியாகக் காட்டுவதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றன: என்றாவது இவன் உண்மையை உணர மாட்டானா என்று.

கடவுள் கண்களை எதற்குக் கொடுத்தான்? நான் கற்றுக்கொண்டதைப் பார்ப்பதற்கா, பார்த்துக் கற்றுக்கொள்வதற்கா? காதுகள்? நான் எதிர்பார்ப்பதைக் கேட்பதற்கா, கேட்பதிலிருந்து கற்றுக்கொள்வதற்கா? நாக்கு? சுவையை உணர்வதற்கா, சொல்லப்பட்ட சுவை இதில் இருக்கிறதா என்று சரிபார்ப்பதற்கா? மூக்கு? ஒரு வாசனையை உணர்வதற்கா, வாசனைகளின் வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்கா?

இது இருவாட்சி, இது ரோஜா, இது முல்லை, இது மலம் என்று நன்றாகச் சொல்கிறாய். “என் மகள் வாசனையைப் பார்த்தே உப்பு அதிகமா குறைவா என்று சொல்லிவிடுவாள்” என்பவர்களும் உண்டு. நம் உறுப்புகள் அந்த அளவுக்கு நுட்பமானவை, முழுமையானவை.

இப்போது மனம் கெட்டுப்போயிருக்கிறது. மனம் கெட்டவர்கள் “புலன்களை அடக்கிவிடு; கண்களை விடு, காதுகளை விடு” என்கிறார்கள். நான் சொல்கிறேன்: உன்னிடம் இருக்கும் கண்ணை, காதை, மூக்கைச் சரியாகப் பயன்படுத்து. என் குருவும் அதைத்தான் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

மேய்ந்து திரியும் ஐந்து பசுக்கள்

திருமூலர் புலன்களை மேய்ந்து திரியும் ஐந்து பசுக்கள் என்பார். “உன் கண் மேய்கிறதா?” என்று கேட்கிறோமே, அதுதான். ஆண்களின் கண்கள் மேயும்; அதனால்தான் பெண்கள் துப்பட்டா இல்லாமல் வெளியே போவதில்லை. ஒரு ரஜினி பாட்டில் “முகம் இங்கே இருக்கிறது” என்று சொல்வார். தலையைத் தூக்கி நிறுத்தினாலும் பார்வை இறங்கிவிடும்.

நாய், பூனை, சிங்கம், புலி எல்லாம் உன் கண்களைப் பார்த்துத்தான் பேசும். மனிதன் மட்டும் கண்ணைத் தவிர எங்கெல்லாம் பார்க்க முடியுமோ அங்கெல்லாம் பார்ப்பான்: “நெக்லஸ் நிறைய போட்டிருக்கிறாரா? வளையல் இருக்கிறதா? வசதியானவரா?” புலன்கள் இப்போது யாருக்கு அடிமையாக இருக்கின்றன?

பெய்யெனப் பெய்யும் மழை

மனதுக்கு அடிமையானவன்தான் “புலன்கள் சொல்வதைக் கேட்காதே” என்கிறான். அவன் ஒரு பேதை; கண்ணுடையவனும் இல்லை, கற்றவனும் இல்லை. முதலில் தெய்வத்தையும் கடவுளையும் ஒன்றாக்கிவிட்டான். வள்ளுவர் சொல்கிறார்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.

“தெய்வம் தொழாள்” என்றால் கடவுளைக் கும்பிடாதவள் என்று பொருள் சொல்லிவிட்டான், தி.க. கட்சிக்காரர் போல: “கடவுளைக் கும்பிடாதே, கணவனை மட்டும் மதி; அப்போது நீ பெய் என்றால் மழை பெய்யும்.”

“பெய்யெனப் பெய்யும் மழை” என்றால் அவள் சொன்னால் பெய்யும் மழை என்று பொருள் இல்லை. ஒரு விவசாயி நிலத்தை உழுதுவிட்டு, மழை பெய்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கும்போது மழை பெய்தால் எவ்வளவு சந்தோஷப்படுவான்? அப்படிப்பட்டவள்: நீ எதிர்பார்ப்பதை நிறைவேற்றுபவள். நீயோ மனைவியைப் பாலைவனத்துக்குக் கூட்டிப்போய், “நீ என்னைத் தொழுபவள்; பெய் என்று சொல், மழை பெய்யட்டும்!” என்கிறாய். என்ன செய்கிறான் மனிதன்!

புலால் மறுத்தல் கறி மறுத்தல் அல்ல

ஆக, கறி, மீன், முட்டை சாப்பிடாமல் இருப்பது புலால் மறுத்தல் கிடையவே கிடையாது. அப்படிச் சொல்லி உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றினால் யார் தவறு? ஏமாந்தவன் தவறு.

8% வட்டி மோசடி

“ஒரு லட்சம் கொடுங்கள்; மாதம் 8% வட்டி தருகிறேன், வாழ்க்கையில் முன்னேறிவிடலாம்” என்று ஒருவரிடம் ஒரு லட்சம் வாங்கினேன். மாதம் 8000, அவருடைய காசிலிருந்தே கொடுத்தேன். பத்து மாதம் கொடுத்ததும் அவர் பத்து பேரிடம் சொன்னார். அவர்கள் ஆளுக்கு ஒரு லட்சம், பத்து லட்சம் என்று கொடுத்தார்கள்; இன்னும் சொல்லிக்கொண்டே, கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் கோடீஸ்வரனாகி, எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு போய்விட்டேன். எல்லோரும் “ஒரு லட்சம் கொடுத்தோம்” என்றுதான் கணக்குப் போடுகிறார்கள். உண்மையில் ஒரு லட்சத்தைத் திருப்பி வாங்கியவர் யார்?

இப்போது அவர்கள் தவறா, நான் தவறா? அவர்கள் நிறைய பேர்; நான் சரி என்றால் ஒரு ஓட்டு, நீங்கள் சரி என்றால் எத்தனை ஓட்டு? ஒரு லட்சம் கொடுக்கும்போது எல்லோரும் சேர்ந்து போய்க் கொடுத்தீர்களா? தனித்தனியாகத்தானே கொடுத்தீர்கள்? இப்போது எல்லோரும் சேர்ந்து சாலையில் நின்று போராடுகிறீர்கள். என்னை நான்கு போலீஸ் அடித்துவிடலாம்; லட்சக்கணக்கில் இருக்கும் உங்களை நாற்பதாயிரம் போலீஸ் வந்தாலும் அடிக்க முடியாது. முட்டாள்கள் லட்சக்கணக்கில் இருந்தால் நியாயத்தையே மாற்றிவிடுகிறார்கள். இந்த உலகம் எப்போது திருந்தும்?

“ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 8000 தருகிறேன்” என்று ஒருவன் சொன்னால், “அப்படியானால் நீயே வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு” என்று சொல்ல வேண்டாமா? எங்கிருந்து கொண்டுவந்து தருவாய் என்று கேட்க வேண்டுமா இல்லையா?